சிறுகுறிஞ்சான் – மருத்துவ பயன்கள்

சிறுகுறிஞ்சான் இலை, பித்தம் பெருக்கும்; தும்மல் உண்டாக்கும்; வாந்தியுண்டாக்கும்; நஞ்சு முறிக்கும். வேர், வாந்தியுண்டாக்கும்; காய்ச்சல் போக்கும்; நஞ்சு முறிக்கும்; பசியைத் தூண்டி சூட்டைத் தணிக்கும்; நரம்புகளைப் பலப்படுத்தும்.

இதனுடைய சர்க்கரை நோயைக் குணமாக்கும் சிறப்பான மருத்துவக் குணத்தினால் பல உயர்நிலை ஆய்வுகள் இந்தத் தாவரத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும், இலைக்கோணத்தில் அமைந்த பூக்களையும் உடைய சுற்றிப்படரும் கொடி.

முதிர்ந்த தாவரங்கள் பெருங்கொடி அமைப்பிலும் அரிதாகக் காணப்படும். சிறு கிளைகள், நுனியின் உச்சியிலிருந்து தொங்கும் அமைப்பில் உள்ளவை.

மலர்கள், வெளிர் மஞ்சள் நிறமானவை. காய்கள் பச்சையானவை, முதிர்ந்த காய்களிலிருந்து பஞ்சு போன்ற நார்களுடன் விதைகள் வெளிப்பட்டு, பறக்கும்.

தமிழகத்தில், வேலிகள், முட்புதர்க் காடுகள், பாழடைந்த காடுகளில் பரவலாக வளர்கின்றது.இலை, வேர், ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. சர்க்கரைக் கொல்லி, குறிஞ்சான், குரிந்தை போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு.

நீரிழிவு நோய் கட்டுப்பட சிறுகுறிஞ்சான் இலைகள், அத்துடன் சம எடை அளவு நாவற்கொட்டை, இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு. 1 தேக்கரண்டி அளவு தூளை வாயிலிட்டு வெந்நீர் குடித்துவர வேண்டும். தொடர்ந்து காலை, மாலை வேளைகளில், 40 நாட்கள் வரை சாப்பிடலாம்.

மாதவிலக்கு சரியாக ஏற்பட ஒரு கைப்பிடி சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 2 கைப்பிடி அளவு களா இலை சேர்த்து, மைய அரைத்து, பசையாக்கி, காலையில், வெறும் வயிற்றில் ஒரு நாள் மட்டும் உட்கொள்ள வேண்டும்.

சுவாச காசம் தீர சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை, சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள் (திகடுகு சூரணம்) ஒரு சிட்டிகை கலந்து வாயில் இட்டு, வெந்நீர் குடித்துவர வேண்டும். தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் 7 நாட்கள் வரை இவ்வாறு செய்யலாம்.

காய்ச்சல் தீர 10 சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 5 மிளகு, ½ தேக்கரண்டி சீரகம் சேர்த்து, நசுக்கி, ½ லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்கவைத்து, கஷாயம் செய்து, ஒரு மணி நேரத்திற்கு இரண்டு தேக்கரண்டிகள் வீதம் குடிக்க வேண்டும்.

ஒவ்வாமை நஞ்சு வெளிப்பட சிறுகுறிஞ்சான் வேரைக் காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட, வாந்தி ஏற்பட்டு விஷம் வெளியாகும்.

இருமல் குணமாக சுத்தம் செய்து, நன்கு நசுக்கிய சிறுகுறிஞ்சான் வேர் 20 கிராம், ஒரு லிட்டர் நீரில் போட்டு, 100மி.லி.யாகச் சுண்டக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொண்டு 30 மி.லி. அளவு, காலை, மதியம், மாலை வேளைகளில், ஒரு நாள் மட்டும் குடிக்க வேண்டும்.