சிறுத்தொண்ட நாயனார் – சிவனடியாருக்காக பிள்ளைக்கறி படைத்தவர்

சிறுத்தொண்ட நாயனார் சிவனடியாருக்காக பெற்ற பிள்ளையை அரிந்து பிள்ளைக்கறி படைத்தவர்.

நரசிம்ம பல்லவனின் சிறந்த படைத் தளபதியாக விளங்கிய சிறுத்தொண்ட நாயனாரே வாதாபில் இரண்டாம் புலிகேசியை நரசிம்மவர்மன் தோற்றக்கடிக்க முக்கிய காரணமாக இருந்தவர்.

படைத் தளபதி பரஞ்சோதியார்

பண்டைய சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் மாமாத்திரர் குலத்தைச் சார்ந்த பரஞ்சோதியார் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார்.

மாமாத்திரர் என்பவர்கள் வழிவழியாக போர்க்கலையில் சிறந்து மன்னிடம் படைத் தளபதியாக பணியாற்றி வந்தவர்கள்.

திருச்செங்காட்டங்குடி என்ற ஊர் தற்போது நாகபட்டினம் மாவட்டத்தில் நாகபட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது.

பரஞ்சோதியார் ஆயுர்வேதக் கலையிலும், வடநூற் கலையிலும் சிறந்து விளங்கியதோடு படைக்கலம், யானையேற்றம், குதிரையேற்றம் உள்ளிட்ட போர்க்கலையிலும் பேராற்றல் உடையவராகத் திகழ்ந்தார்.

இத்தனை கலைகளிலும் பயின்று திறன்பெற்ற அவருடைய உள்ளம் எப்போதும் சிவன் கழலையே சிந்திக்கும் இயல்புடையதாக இருந்தது. அத்தோடு அவர் சிவனடியார்களிடத்தும் பெருமதிப்பு வைத்து அடியார் தொண்டிலும் சிறந்தவராகத் திகழ்ந்தார்.

அரசனுடைய படைத் தளபதியாக விளங்கிய இவர் வாதாபியில் பெரும் படைப்பலம் கொண்ட இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து அங்கிருந்து பொன், பொருள் உள்ளிட்ட நிதிக்குவியல்களை சோழநாட்டுக்குக் கொண்டுவந்தார்.

அவருடைய பெரும் வீரத்தினைப் பாராட்டிய மன்னனுக்கு அவரின் சிவபக்தியையும், சிவனடியார் தொண்டினையும் மந்திரியார் எடுத்துரைத்தார்.

அவருடைய பெரும் வெற்றிக்கு சிவனருளே காரணம் என்பதை உணர்ந்த அரசன் அவருக்கு நிறையப் பொருட்களையும் நிலங்களையும் அளித்ததோடு, படைத்தளபதி பொறுப்பிலிருந்து அவரை விடுவித்து அவருடைய விருப்பப்படி சிவதொண்டு ஆற்ற அனுமதி அளித்தான்.

சிறுத்தொண்டர்

பரஞ்சோதியாரும் மனம் மகிழ்ந்து தலைநகரிலிருந்து புறப்பட்டு திருச்செங்காட்டங்குடியை அடைந்தார். அங்கிருக்கும் கணபதீச்சுவரை வழிபட்டுக் கொண்டு தினமும் சிவனடியாருக்கு அமுதூட்டிய பின்னரே தான் உண்ணும் வழக்கத்தைப் பின்பற்றி வந்தார்.

புகழாலும் நிலையாலும் பலர் போற்ற வாழ்ந்த பரஞ்சோதியார், அடியார்களிடம் மிகப் பணிவாகப் பயபக்தியோடு பழகினார்.

எல்லாவற்றிலும் பெரியவராகிய அவர், சிறியவரைப் போல அடங்கி ஒடுங்கி பழகியதால் அவரை எல்லோரும் சிறுத்தொண்டர் என்று அழைத்தனர்.

சிறுத்தொண்டர் திருவெண்காட்டு நங்கை என்னும் பெண்ணை தம்முடைய இல்லறத் தலைவியாகக் கொண்டார். திருவெண்காட்டு நங்கையும் சிறுத்தொண்டரின் சிவவழிபாட்டிற்கும், சிவனடியார் தொண்டிற்கும் பெரிதும் துணை நின்றார்.

அவர்களுக்கு இறையருளால் சீராளன் என்னும் செல்வப்புதல்வன் பிறந்தான். குழந்தையின் அந்தந்தப் பருவத்துக்குரிய ஏற்ற சிறப்புகளைச் செய்து சிறுத்தொண்டரும் அவருடைய மனைவியும் சீராட்டிப் பாராட்டி சீராளனை வளர்த்து வந்தனர்.

சீராளன் பள்ளி செல்லும் பருவத்தை அடையவே, பெற்றோர் அவனைக் கல்விச் சாலையில் சேர்த்து, அவன் கல்வியில் சிறந்து விளங்குவதை அறிந்து இன்புற்றிருந்தனர்.

அச்சமயம் திருஞானசம்பந்த நாயனார் திருச்செங்காட்டங்குடி தலத்திற்கு எழுந்தருளினார். அவரை வரவேற்று அன்பு செய்து இன்புற்று மகிழ்ந்திருந்தார் சிறுத்தொண்ட நாயனார்.

சம்பந்தர் சிறுத்தொண்டரைத் தம் திருப்பதிகத்திடையே சிறப்பித்துப் பாடி, சில நாட்கள் திருச்செங்காட்டங்குடியில் தங்கியிருந்து புறப்பட்டார்.

பிள்ளைக்கறி

சிவனார் சிறுத்தொண்ட நாயனார் புகழை உலகறிச் செய்ய திருவுள்ளம் கொண்டார். ஆதலால் உடலில் கறுப்பு அங்கி, கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து பைரவ அடியார் திருக்கோலம் பூண்டு திருச்செங்காட்டங்குடியை அடைந்தார்.

சிறுத்தொண்ட நாயனார் வீட்டை அடைந்து “சிவனடியாருக்கு உணவளிக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரா?” என்று கேட்டார்.

அப்போது அங்கிருந்த தாதிப் பெண் சந்தன நங்கை “அவர் திருவமுதினை ஏற்றுக் கொள்ளும் சிவடினயாரைத் தேடி வெளியே சென்றுள்ளார். சற்று நேரத்தில் வந்து விடுவார். தாங்கள் உள்ளே எழுந்தருள வேண்டும்” என்று கூறினாள்.

அதற்கு பைரவ அடியார் “பெண்கள் தனித்திருக்கும் இவ்விடத்தில் நாம் வருவதில்லை” என்று கூறி புறப்பட தயாரானபோது திருவெண்காட்டு நங்கையார் அவ்விடத்திற்கு வந்தார்.

“இப்போது வந்துவிடுவார். காலம் தாழ்த்த மாட்டார்.” என்று கூறினார்.

“சிறுத்தொண்டரைக் காணவே வந்தோம். அவர் இல்லாத சமயத்தில் இங்கே இருக்க மாட்டோம். இவ்வூர் கோவிலில் ஆத்தி மரத்தடியில் நாம் அமர்ந்திருக்கிறோம். சிறுத்தொண்டர் வந்ததும் எம்மை வந்து காணச் சொல்லுங்கள்.” என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார் பைரவ அடியார்.

பைரவ அடியார் சென்ற சிறிது நேரத்தில் சிறுத்தொண்ட நாயனார் சிவனடியார் ஒருவரையும் காணாது கவலை தோய்ந்த முகத்துடன் வீடு திரும்பினார்.

அவரிடம் திருவெண்காட்டு நங்கையார் பைரவ அடியார் வந்து திரும்பி கோவிலில் காத்திருப்பதைக் கூறியதும், மனம் மகிழ்ந்து பைரவ அடியாரை அழைத்து வர சிறுத்தொண்ட நாயனார் கிளம்பினார்.

கோவிலில் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த பைரவ அடியாரை வணங்கினார் சிறுத்தொண்டர்.

பைரவ அடியார் அவரிடம் “நீர்தான் பெருமை பெற்ற சிறுத்தொண்டரோ?” என்று வினவினார்.

“இச்சிறியேனை அடியார்கள் அப்பெயரால் அழைக்கின்றனர். திருவமுதினை ஏற்றுக் கொள்ளும் சிவனடியாரை நோக்கி இன்று வெகுநேரம் அலைந்து விட்டேன். அடியார் ஒருவரும் தென்படவில்லை. தாங்களின் வருகையை அறிந்து தங்களுக்கு திருவமுது செய்விப்பதற்காக அழைத்துச் செல்ல வந்துள்ளேன். அடியார் எம்முடைய இல்லத்திற்கு எழுந்தருளி திருவமுது செய்விக்க வாருங்கள்.” என்று அன்பொழுகக் கூறினார்.

“நாம் வடநாட்டில் உள்ளோம். உம்மைக் காணவே இங்கு வந்தோம். உம்மால் எமக்கு திருவமுது செய்விக்க இயலாது.” என்று பைரவ அடியார் கூறினார்.

“தாங்கள் திருவமுது செய்யும் முறைமைப் பற்றிக் கூறினால் அடியேன் விரைந்து சென்று திருவமுதினைத் தயார் செய்து உண்பிக்க இயலும்” என்று சிறுத்தொண்டர் மிகவும் பவ்யமாகக் கேட்டார்.

“நாம் ஆறு மாதம் உண்ணாமல் இருந்து ஆறுமாத முடிவில் பசுவை அடித்து உண்ணுவது வழக்கம். இன்று அப்படி நான் உண்ண வேண்டிய நாள். உம்மால் அப்படிச் செய்ய முடியாது.” என்றார் பைரவ அடியார்.

“என்னிடம் ஆடு, மாடு, எருமை என மூன்று வகையான நிரைகள் இருக்கின்றன. அடியாருக்கு எந்த நிரையின் பசு வேண்டும் என்பதைத் தெரிவித்தால் அதனை திருவமுதிற்கு தயார் செய்யச் சொல்லி, காலம் தாழ்த்தாமல் இங்கே வந்து அழைத்துச் செல்வேன்.” என்றார் சிறுத்தொண்டர்.

“நாம் உண்ணுவது நிரைகளின் பசு அன்று. ந‌ரப்பசு. ஐந்து வயதுள்ள குழந்தையாக, உடலில் மறுவறு இல்லாதவனாக இருக்க வேண்டும். இன்னும் வேண்டியதைச் சொன்னால் நீர் வருந்துவீர்.” என்றார் அடியார்.

“அருமையான பொருள் என்று ஏதும் இல்லை. விரைவில் தங்களுக்கு வேண்டியதைச் சொல்ல வேண்டும்.” என்றார் சிறுத்தொண்டர்.

“ஒரு குடிக்கு ஒரு மகனாக உள்ளவனை தந்தை அரிய தாய் பிடிக்க வேண்டும். அவர்கள் மனமுவந்து கறி சமைத்து தந்தால் யாம் உண்போம்.” என்றார் அடியவர்.

“இது எமக்கு அரிதன்று. அப்படியே செய்வோம்.” என்று கூறி வீட்டினை அடைந்தார் சிறுத்தொண்ட நாயனார்.

திருவெண்காட்டு நங்கையிடம் பைரவ அடியார் திருவமுது செய்யும்முறை பற்றி விளக்கிக் கூறினார்.

அதனைக் கேட்ட திருவெண்காட்டு நங்கையார் “அத்தகைய பிள்ளையை எங்கே பெறுவது?” என்று கேட்டார்.

“அத்தகைய மைந்தன் ஒருவனை விலை கொடுத்தால்கூட யாரும் தர மாட்டார்கள். அப்படியே அளித்தாலும் தாயும் தந்தையும் அரிந்து தர மாட்டார்கள். நீ பெற்ற பிள்ளையைத்தான் அழைத்து வரவேண்டும்.” என்றார் சிறுத்தொண்டர்.

“அப்படியே அழைத்து வாருங்கள்” என்றார் திருவெண்காட்டு நங்கை சற்றும் தாமதிக்காமல்.

பிள்ளையை அழைத்து வந்து நீராட்டி, தாய் பிடித்துக் கொள்ள சிறுத்தொண்டர் நாயனார் தலை அரிந்து உறுப்புகளையும் அரிந்து தர, திருவெண்காட்டு நங்கை அதனைப் பெற்று தலை இறைச்சி உணவுக்கு ஆகாது என அதனை மட்டும் ஒதுக்கி மற்றவற்றை பக்குவமாகச் சமைத்தார்.

திருவமுது செய்து முடிக்கவும் சிறுத்தொண்டர் பைரவ அடியாரைச் சென்று அழைத்து வந்தார்.

இல்லத்திற்கு எழுத்தருளிய பைரவ அடியாரின் பாதங்களைக் கழுவி நீரினைத் தலையில் தெளித்து தகுந்த ஆசனத்தில் அமர வைத்தார் சிறுத்தொண்டர்.

திருவெண்காட்டு நங்கை தகுந்த பாத்திரத்தில் சமைத்த பிள்ளைக்கறி திருவமுதினைப் படைத்தாள்.

“யாம் சொன்ன முறையில் கறியைத் தயார் செய்து எல்லாப் பாகங்களையும் கொண்டு திருவமுது செய்தீர்களா?” என்று கேட்டார் பைரவ அடியார்.

“தலைக்கறி உணவிற்கு ஆகாதென்பதால் அதனை நீக்கி மற்றவற்றை சமைத்தோம்.” என்றார் திருவெண்காட்டு நங்கையார்.

“யாம் அதனையும் உண்போம்.” என்று பைரவர் கூறுக் கேட்ட சிறுத்தொண்டர் ‘இப்போது நான் என்ன செய்வேன்?’ என்று எண்ணி மனம் கலங்கினார்.

அடியார் கூறியதைக் கேட்டதும் தாதி சந்தன நங்கை “அதனை பக்குவமாக சமைத்து வைத்துள்ளேன்.” என்று கூறி தலைக்கறியைப் படைத்தாள்.

அதனைக் கண்டதும் சிறுத்தொண்டர் முகம் மலர்ந்தார்.

பைரவ அடியார் “யாம் தனியாக திருவமுது புசிக்க மாட்டோம். ஆதலால் சிவனடியார் ஒருவரை அழைத்து வாரும். அவர் உண்டபின் யாம் உண்போம்.” என்றார்.

வெளியே சென்று சிவனடியார் ஒருவரும் கிடைக்காததால் திரும்பி வந்த சிறுத்தொண்டர் பைரவரிடம் “அடியார் ஒருவரையும் காண்கிலேன்.” என்றார் கவலையுடன்.

“திருவெண்ணீறு அணிந்திருக்கும் நீரும் அடியாரே. ஆதலால் இவருக்கும் தகுந்த கலத்தில் திருவமுதினைப் படைப்பீர்களாக.” என்று திருவெண்காட்டு நங்கையிடம் கூறினார்.

அவ்வம்மையாரும் அடியாரின் கட்டளைப்படி சிறுத்தொண்டருக்கும் பிள்ளைக்கறி படைத்தார்.

சிறுத்தொண்டர் விருப்பு, வெறுப்பு, பாசம், அருவருப்பு ஆகியவற்றை நீக்கி, சிவனடியார் திருவுள்ளம் கூசாமல் ஒழுக வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொண்டு ஏனையவற்றை மறந்த நிலையில் இருந்தார்.

அப்போது சிவனடியார் உண்டால் மட்டுமே பைவர அடியார் உண்பார் என்பது நினைவுக்கு வர சிறுத்தொண்டர் திருவமுதினை உண்ண கையில் எடுத்தார்.

பிள்ளையை அழைக்கவும்

“அதற்குள் என்ன அவசரம். ஆறுமாதம் உண்ணாமல் இருக்கும் நானே காத்திருக்கிறேன். உமக்கு ஓர் பிள்ளை இருக்கிறான் அல்லவா? அவனையும் அழையும். அவனும் நம்முடன் திருவமுது செய்யட்டும்.” என்றார் ரைபரவர்.

“அவன் தற்போது உதவான்.” என்றார் சிறுத்தொண்டர்.

“அவன் வந்தால் மட்டுமே திருவமுது செய்விப்பேன். இருவரும் சென்று அவனை அழைத்து வாருங்கள்.” என்று சிறுத்தொண்டர் தம்பதியினருக்குக் கட்டளையிட்டார்.

அடியாரின் கட்டளைக்கு கட்டுப்பட்ட அவ்விருவரும் வெளியே சென்று, “மகனே, சீராளா, நாம் உய்ய சிவனடியார் உடன் அமர்ந்து திருவமுது செய்யவிக்க அழைக்கிறார் கண்ணே வா” என்று அழைத்தனர்.

என்ன ஆச்சர்யம்! குழந்தை சீராளன் பள்ளியிலிருந்து அன்று மலர்ந்த தாமரை போல் சிரித்துக் கொண்டே அங்கு வந்தான். திருவெண்காட்டு நங்கை அவனை உச்சி மோர்ந்து சிறுத்தொண்டரிம் தந்தார்.

சிறுத்தொண்டரும் “பைரவ அடியார் திருவமுது செய்ய நேரம் ஆகிறதே!” என்றபடி குழந்தையுடன் உள்ளே புகுந்தார்.

அங்கே பைரவ அடியாரையும் திருவமுதினையும் காணவில்லை. சிவனார் உமையம்மை மற்றும் முருகப் பெருமானுடன் சோமஸ்கந்த மூர்த்தியாக காட்சியளித்தார்.

இறை தரிசனம் கிடைக்கப் பெற்ற சிறுத்தொண்ட நாயனார், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை ஆகியோர் நிலைத்த இன்பமான வீடுபேற்றினை இறையருளால் பெற்றனர்.

சிறுத்தொண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிவனடியார்பால் கொண்ட அன்பினால் சிவனடியார் வேண்டிய பிள்ளைக் கறியைப் படைத்த சிறுத்தொண்ட நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘செங்காட்டகுடி மேய சிறுதொண்டர்க்கு அடியேன்’ என்று புகழ்கிறார்.