பெரும் மழை பேய் மழை
என்றெல்லாம் சொல்வதற்கல்லாத
சில்லெனத் தைக்கும் சாரலாய் வழியும்
சிறு மழைதான் அது …
நனைதலின் சுகத்தை நன்கு அறிந்திருந்த போதும்
நனைதலுக்கான நேரம் அல்லாத நேரமிது
ஆகவே நனைதலை விடுத்துக் குடையோடு
நகர்கிறது நடக்கும் பொழுது…
நேரடி தாக்குதலுக்குக் களம்காணாமல் சுருங்கிக்
கொண்டபடியால் குடையுடன் மோதிக் குப்புற விழுந்து
மண்ணைக் கவ்வுகிறது ஆயுதம் ஏந்தாத
அத்தனை சிறுமழையும் அகிம்சையோடு…
இறுக்கமாக சுருண்டு இரவு பகல் யாவும்
அலமாறிக்குள்ளேயே புழுக்கம் அப்பியபடி புரண்டு
படுக்கவும் வக்கற்றதான கிழிந்த குடை அறியும்
நனைதலின் சுகத்தை நன்றாகவே!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!