சிறைப்பறவை – சிறுகதை

“ஏய், மீனாட்சி, இந்தா இதைச் சாப்பிடு” என்றபடி மிளகாய்ப் பழத்தை மீனாட்சி கிளியிடம் நீட்டினான்.

மிளகாய்ப் பழத்தை லவகமாய் வாயில் வாங்கிக் கொண்டு வருணின் இடதுகையில் அமர்ந்தது மீனாட்சி.

வலது கையால் மீனாட்சியின் இறகுகளைத் தடவிக் கொடுத்தான். பின்னர் மெதுவாக கத்தரிக்கோலைக் கொண்டு மீனாட்சியின் லேசாக முளைந்திருந்த இறக்கைகளை வெட்டினான். மீனாட்சியோ மிளகாய்ப் பழத்தை ருசித்துக் கொண்டிருந்தது.

வருணின் செயலைக் கண்டதும் வாணி மிகவும் கோபப்பட்டாள்.

“உங்கிட்ட எத்தன தடவ சொல்றது மீனாட்சியின் இறக்கைகளை வெட்டாதீங்கன்னு. பாவம்ங்க ரெக்கை முளைச்சி அவ பாட்டுக்கு சுதந்திரமா பறந்து போகட்டும்.”

“எப்பயுமே, மீனாட்சிக்கு ரெக்கைகளை வெட்டும்போது நம்ம ரெண்டு பேருக்கும் இடையில சண்ட வருது. வாணி இந்த விசயத்துல நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். போய் எனக்கு காபி போடு” என்றான்.

வாணி முணுமுணுத்துக் கொண்டே அங்கியிருந்து நகர்ந்தாள்.

வருண் தனியார் நிறுவனத்தின் முதலாளி. சிறுவயதிலிருந்தே மழை, வெயில், காற்று, மரம், பறவை உள்ளிட்ட எல்லா இயற்கையையும் ரசிப்பவன். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த வருண் கடின உழைப்பினால் ஒரு பெரிய‌ நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்துள்ளான்.

சிறுவயது முதலே வருணுக்கு செல்லப்பிராணிகளின் மீது பிரியம் அதிகம். ஆதலால் நாய், கோழி, வாத்து, கிளி உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்த்து வந்தான். அப்பிராணிகளின் மீது மிகுந்த அக்கறை காட்டுவான்.

வருணின் மனைவி வாணிக்கும் செல்லபிராணிகளின் மீது விருப்பமே. எனினும் வருண் மீனாட்சியின் ரெக்கைகளை வெட்டுவதையும், ரெக்கைகளை வெட்டவில்லை எனில் மீனாட்சி பறந்து விடும் என்று கூறுவதையும் வாணியால் ஏற்றுக் கொள்ள முடிய‌வில்லை.

“நாய், கோழி, வாத்துக்களை நாம் தொந்தரவு செய்வதில்லை. மீனாட்சிக்கு மட்டும் ரெக்கை வெட்டும் தண்டனை வேண்டாம். விட்டுவிடுங்கள்” என்று வாணி எவ்வளவோ கூறியும் வருண் கேட்பதில்லை. அவ்வப்போது மீனாட்சியின் ரெக்கைகளை வெட்டி விட்டு வளர்த்து வந்தான்.

வருண் ஒருநாள் அலுவலகம் செல்லும் வழியில் எதிர்பாராமல் பைக்கில் இருந்து விழுந்து விட்டான். வலது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால் மருத்துவர் கட்டாயம் 45 நாட்கள் காலை தரையில் ஊன்றக் கூடாது; படுக்கை ஓய்வு அவசியம் என்று கூறியிருந்தார்.

பத்து நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு வீட்டிற்கு ஆம்புலன்சில் வந்து ஸ்டெச்சர் மூலம் படுக்கைக்கு வந்தான் வருண்.

மருத்துவமனை, மாத்திரை, ஊசி, குளக்கோஸ் என சிகிச்சைமுறைகள் வருணை நிகழ்வுலகத்திலிருந்து வெகுதொலைவுக்கு இழுத்துச் சென்றிருந்தன.

பத்துநாட்கள் பத்து யுகங்களாகப்பட்டது. சாதாரண செயலைச் செய்வதற்கும் மனைவியின் உதவி வேண்டியிருந்தது.

வீட்டிற்கு வந்தபின்பு தன்னுடைய தேவைகளை தன்னால் செய்து கொள்ள முடியும் என்கின்ற வருணின் நம்பிக்கை வீணாகிப் போனது.

காலை தொங்க விடுவோ, கால் விரல்களை அசைக்கவோ வருணால் தன்னிச்சையாக செய்ய முடியவில்லை. எல்லாவற்றிற்கும் வாணிதான் உதவினாள்.

மரம் அசைவதைப் பார்ப்பது, வானத்தில் பறவைகள் செல்வதைப் பார்ப்பது, காலாற‌ தோட்டத்தில் நடப்பது எல்லாம் உலக அதிசயமாகவே பட்டது வருணுக்கு.

இருபது நாட்கள் கழிந்த பின்பு “வாணி, ஜன்னலை திறந்து விடேன். நான் மரம் அசைவதையாவது பார்க்கிறேன்.” என்றான் வருண்.

“இது ஏசி ரூம்ங்க. ஜன்னலை எல்லாம் திறந்து வைக்க முடியாது.” என்றபடி அங்கியிருந்து சென்றாள்.

‘தங்கக் கூண்டில் அடைப்பட்டு இருக்கும் கிளி என்பார்களே. அது இதுதானா? ஒரு மர அசைவினைப் பார்க்கும் சுதந்திரத்தை, ஏசி என்னும் தங்கக்கூடு பறிக்கிறதே’ என்று எண்ணியபோது வருணுக்கு மீனாட்சியின் ஞாபகம் வந்தது.

இறக்கைகளை வெட்டிவிட்டதால் சுதந்திரமாகப் பறக்க முடியாமல், கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்கும் சிறைப்பறவை மீனாட்சியின் வலி வருணுக்கு புரிந்தது. தன்னுடைய செயலுக்காக முதன்முதலாக வருந்தினான்.

அடுத்த இருபத்து ஐந்து நாட்கள் கழித்து காலை தரையில் ஊன்றி ஊன்றுகோல் உதவியுடன் நடக்கத் தொடங்கினான். ஹாலில் மீனாட்சி கூண்டு இருந்த இடத்திற்குச் சென்றான்.

மீனாட்சியின் இறக்கைகள் நன்கு வளர்ந்திருந்தன. அதனைக் கண்டதும் வருணுக்கு மனதில் மகிழ்ச்சி கரை புரண்டது.

கூண்டினைத் திறந்ததும் மீனாட்சி வருணின் கைகளில் வந்து அமர்ந்தது. மீனாட்சியைத் தடவிக் கொடுத்தான். வாணி கோவைப் பழத்தை மீனாட்சியிடம் நீட்டியதும் பழத்தை வாங்கிக் கொண்டு தரைக்கு தாவியது.

வருண் மீனாட்சியையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். பழத்தைத் தின்று முடிந்ததும் தரையில் இங்கும் அங்கும் உலாவியது. திடீரென இறக்கைகளை படபடவென அடித்துப் பார்த்தது. சற்று நேரத்தில் ஹாலினுள் சிறிது தூரம் பறந்து பறந்து பார்த்தது.

‘நீ நன்கு பறக்கப் பழகியதும் உனக்கு சுதந்திரத்தை வழங்குவேன்’ என்று மனதிற்குள் எண்ணினான் வருண்.

அடுத்த இரண்டு வாரங்களில் வருணால் ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடிந்தது. அதே நேரத்தில் மீனாட்சியும் நன்கு பறக்கத் தொடங்கியது.

அடுத்த நாள் வருண் மற்றும் வாணி மாலை நேரத்தில் மீனாட்சியுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

வருண் மீனாட்சியை உள்ளங்கைகளில் வைத்து வானத்தை நோக்கி பறக்க விட்டான். மீனாட்சி சடாரென பறந்து பட்டுப் போயிருந்த கொய்யாக் கம்பில் அமர்ந்தது.

வருணின் செயல் வாணிக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அப்போது வருண் ‘சிறைப்பறவை என்பது எவ்வளவு துயரமானது என்பதை நான் புரிந்து கொண்டேன்.’ என்றான்.

வாணிக்கு வருணின் மனமாற்றம் மகிழ்ச்சி அளித்தாலும் மாற்றத்திற்கான காரணம் புரியமால் விழித்தாள்.

அப்போது ‘கீ, கீ’ என்று வானில் சத்தமிட்டபடி மீனாட்சி பறந்து மறைந்தது.

‘சிறைப்பறவை பறந்து விட்டது’ என்று எண்ணியவாறு வருண் அதற்கு ‘டாட்டா’ என்றபடி கையை அசைத்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வ.முனீஸ்வரன்

One Reply to “சிறைப்பறவை – சிறுகதை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.