Jesus Christ

சிலுவை நாயகர்

விண்ணில் மீன் விலகுவதாய் தோன்றும்
விடியல் மறைந்ததும் விருட்சமாய் காட்சிதரும்
வியன்மிகு நாயகன் நம் தேவதூதனின்
பயன்மிகு பிறப்பின் பிறவி பலனால்!

நல்மீட்பர் பிறக்கும் இலட்சனையை நல்லுள்ளங்களுக்கு
நட்சத்திரங்கள் கீழ்திசை வானில் நின்று
கீர்த்தி பிறக்கும் சீர்மிகு செய்தியினை
தூய ஆவியினால் ஒளிவடிவில் துதிப்பாடின

கன்னிமரியவள் கருதாங்கி கவின்மிகு பாலகனை
கலங்கமிலாது ஈன்றெடுத்து இமானுவேலென்று நாமமிட
இறைத்தூதர் அவதரித்த இன்பச் செய்தியினை
இடையர் குலத்திற்கே தடையின்றி அறிவிக்கப்பட்டது!

ஆட்டிடை கூட்டத்தில் உதித்த ஆதவனென்று
இடையர் குலத்தோர் இசையும் மீட்ட
சரித்திர மற்ற சனமிகு உலகம்
சரித்திர வடிவம்பெற சான்றாய் விளங்கினார்!

சரித்திர நாயகனின் அரிதொரு பிறப்பே
சாந்தம் சூழ சாட்சியாய் நின்றது
ஜீவ ஒளியால் ஜனனம் பெற்றதால்
தொழுவமும் இன்று தொழுகைக் கூடமானது!

அறமிழந்தோரை நெறிப்படுத்த அவதரித்த தீர்க்கதரிசியே
பொறுமையின் பிறப்பிடமாய் பாவிகளின் பாவமூட்டையை
அப்பாவியாய் சிலுவையில் சுமந்த ஜீவகாருண்யமே
மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உத்தமரே!

நீர் தோற்றம் பெற்ற திருநாளே
நாங்கள் தேற்றம் பெற்ற நன்னாள்
உம்மை கண்ட உன்னத மிகுநாளே
எங்கள் துயர் துடைக்கும் பொன்னாள்!

இன்றைய தினத்தில் மதம் கடந்து
தாமதமின்றி உரைக்கின்றேன்
மனிதம் போற்றும் மகிழ்வு நிறைந்த
மாசிலா எந்தன் மகத்தான
கிருத்துவ தின வாழ்த்தினை!

க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353