சில்வர் பாத்திரம்

சில்வர் பாத்திரம் – அறிவியல் குறுங்கதை

அன்றுதான், காலாண்டு தேர்வுத் விடுமுறை தொடங்கிற்று. விடுமுறை தொடங்கிய முதல் ஓரிரு நாட்களிலேயே, தனது வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தி முடித்து விடுவது, ஆசிரியர் வேதிவாசனின் வழக்கம். 

வழக்கம்போல், அன்று காலை ஐந்து மணிக்கு தனது வீட்டிலிருந்த படிப்பக அறைக்குள் நுழைந்தார், வேதிவாசன். மாணாக்கரின் விடைத்தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து திருத்தத் தொடங்கினார்.

எதிர்பார்த்தபடியே, சில மாணவர்கள், மிகச்சிறந்த முறையில் விடையளித்திருந்தனர். சிலரது விடைத்தாளிலோ, கேட்கப்பட்ட கேள்விக்கு துல்லியமான பதில் இல்லை என்றாலும்,  அதற்கு நெருக்கமான விடைகளை எழுதியிருந்தனர்.

பாரபட்சம் இன்றி செயலாற்றும் வேதிவாசன், விடையில் தென்படும் தவறுகளை, அங்கேயே தெளிவாகச் சுட்டிக் காட்டி விடுவார். மதிப்பெண் வழங்குவதிலும் கண்டிப்பானவர்தான்!

ஒருவேளை, அவரது சொத்துகளை கேட்டாலும் எழுதி கொடுத்துக் விடுவார். ஆனால், அவரிடம் இருந்து மதிப்பெண் வாங்குவது அவ்வளவு சுலபமல்ல! இந்த விடாப்பிடியான செய்கைக்கு காரணம், அவருடைய ஆழ்ந்த அறிவியல் ஞானம் மற்றும் மாணவர்கள் கூர்மையான அறிவினைப் பெற வேண்டும் என்ற எண்ணமும் ஆகும்.

‘ஆழ்ந்த அறிவு,  தன்னம்பிக்கையை அளிப்பதோடு நன்னடத்தையையும் நல்கும்’ என்பது வேதிவாசனின் அசைக்க முடியாத‌ நம்பிக்கையாக இருந்தது.

இந்நிலையில், தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தி கொண்டிருந்தவரின் மனதில் ஒரு எண்ணம் சூழ்ந்தது. அது என்னவெனில், தேர்வில் கேட்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு மட்டும், பெரும்பாலான மாணவர்கள் தவறுதலாகவும், ஒரே மாதிரியாகவும் விடையளித்திருந்தனர்.

 

சமைக்கும் பாத்திரத்தில் இருக்கும் உலோகம்

அக்கேள்வி எதுவென்றால், ’சமைக்க பயன்படும் பாத்திரத்தில் இருக்கும் பெரும்பான்மையான உலோகம் எது?’ என்பதுதான்! அதற்கு, `சில்வர்’ (silver) என்று தவறுதலாக விடையளித்திருந்தது, வேதிவாசனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

காரணம், வகுப்பு நடத்தும் போது, ‘சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள் `ஸ்டீல்’(steel – தமிழ்ப் பெயர் எஃகு) எனும் உலோக கலவையால் ஆனது என்றும், அதில் ‘இரும்பு’ உலோகமே பிரதாணம்’ என்றும் நன்கு விவரித்திருந்தார்.

மேலும், ‘தூய இரும்பு, சூழ்நிலையில் இருக்கும் நீர் மற்றும் ஆக்சிஜனோடு வினைபட்டு, எளிதில் துருபிடிக்கும் என்பதால் கார்பன் எனும் அலோகத்துடன் சேர்க்கப்பட்டதையும், அதனால் ஸ்டீல் துருபிடிப்பதில்லை என்பதையும் விளக்கியிருந்தார்.

கூடவே, ஸ்டீலின் வகை மற்றும் அதிலிருக்கும் பிற உலோகங்கள் பற்றியும் விவரித்திருந்தார்.

நன்கு கற்பித்திருந்தும், பெரும்பாலான மாணவர்கள் இரும்பிற்கு பதிலாக, சில்வர் உலோகத்தை, விடையாக எழுதியிருந்ததால், ஆச்சர்யத்துடன் கூடிய ஒருவித சலிப்பை அடைந்தார், வேதிவாசன்.

ஆயினும், ஆசிரியர் வேதிவாசன் கேள்விகளை மாணவர்களின் பார்வையில் இருந்து சிந்திக்கக் கூடியவர். இப்பண்பின் காரணமாக, மாணவர்களின் தவறான விடைக்கான காரணத்தை சிந்தித்தார்.

அப்பொழுதுதான், அவருக்கு புரிந்தது! ஆம், என்னதான், கற்பிக்கும் பொழுது, ‘பாத்திரங்கள் ஸ்டீல் எனும் உலோக கலவையால் ஆனது’ என்று விவரித்தாலும், (பெரும்பாலும்) நடைமுறையில், அது ’ஸ்டீல் பாத்திரம்’ என்று சொல்லப்படுவதில்லையே!’ சில்வர் பாத்திரம்’ என்றுதானே சொல்லப்படுகிறது.

அவரது நண்பர்களேகூட, ‘இனி பிளாஸ்டிக் (plastic) டிபன்பாக்ஸிற்கு (tiffin box) பதில் சில்வர் டிஃபன்பாக்ஸ்தான் எடுத்து வருவேன்’, ‘நான் சில்வர் வாட்டர்கேன் (water can) வாங்க கடைக்கு போனேன்’ என்பது போன்ற சொற்றொடர்களை அவரிடம் கூறியிருந்தது நினைவிற்கு வந்தது.

ஆக, பேச்சு வழக்கில் ஸ்டீல் பாத்திரத்தை ’சில்வர் பாத்திரம்’ என்று அழைப்பதால், மாணவர்கள் குழம்பியிருக்கக் கூடும். இதனால், பாத்திரத்தில் இருக்கும் உலோகம், ’சில்வர்’ என்று தவறுதலாக எழுதியிருக்கக் கூடும் என்பதை ஊகித்தார்.

உண்மையில் ’சில்வர்’ என்று தமிழ் எழுத்துகளை பயன்படுத்தி எழுதினாலும், அது தமிழ்ச்சொல் அல்லவே! சில்வருக்கு தமிழில் ’வெள்ளி’ என்ற சொல் உண்டு அல்லவா?.

பிறகு ஏன் ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் பயன்படுத்த வேண்டும்? ‘இனி அறிவியல் கலைச்சொற்களை கூடுமான வரையில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும்’ .

இதனால், மொழிச் சுத்தம் பேணிக் காப்பதோடு, மாணவர்களும் பிழையின்றி விடையளிப்பார்கள் அல்லவா? பாத்திரத்தில் இருக்கும் பெரும்பான்மையான உலோகம் ’இரும்பு’ என்று உறுதியுடன் பதில் அளித்திருப்பார்கள் அல்லவா?’ என்று தன் மனதில் எண்ணிக் கொண்டார்.

முனைவர்.ஆர்.சுரேஷ்

சென்னை, அலைபேசி: 9941091461

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.