சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன்

பாண்டுரங்கன் / பண்டரிநாதன்

சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன் என்னும் இந்த உண்மை கதை மூலம் நாம் சிவனும் திருமாலும் ஒன்றே என்பதை அறிந்து கொள்ளலாம்.

அரியும் அரனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இன்றைக்கும் சிவனடியார்களில் சிலர் திருமாலை வணங்க மறுப்பர். திருமால் பக்கதர்கள் சிலர் சிவனை வழிபடுவது கிடையாது.

இறைப்பரம்பொருள் சிவன், திருமால், சக்தி எனப் பலவடிவங்களில் வணங்கப்படுகிறார். இவ்வாறான தெய்வங்களின் பலவடிவங்களும் ஒன்றே என்பதுதான் நிச்சயமான உண்மை.

இனி சிவனாகத் தெரிந்த பண்டரிநாதனைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பாண்டுரங்கன் என்ற பண்டரிநாதன் கோவில் கொண்டு அருளும் பண்டரிபுரத்தில் நரஹரி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் பெரிய சிவபக்தர்.

நரஹரி தன் உடல், பொருள், ஆவி அனைத்தும் சிவபெருமானுக்காக அர்ப்பணம் செய்தவர். அவர் சிறந்த பொற்கொல்லர். ஆபரணங்களை வடிவமைப்பதில் அவருக்கு இணை அவரே ஆவார்.

அவர் மறந்தும் திருமாலை தரிசிக்கவோ, வழிபடவோ, அவர் நாமத்தை உச்சரிக்கவோ செய்ய மாட்டார்.

அவர் பாண்டுரங்கன் கோவில் வழியாகச் செல்ல நேர்ந்தால் நேரே செல்லாமல் சுற்றி வளைத்துச் செல்வார்.

பாண்டுரங்கனுக்கான திருவிழா நடக்கும் சமயங்களில் வெளியூர் சென்றுவிடுவார். இவ்வாறாக அவர் பாண்டுரங்கனை தவிர்த்து நாட்களை கழித்து வந்தார்.

பண்டரிபுரத்தில் திருமால் அடியவரான பெரிய வணிகர் ஒருவர் இருந்தார். பாண்டுரங்கனிடம் அளவற்ற பக்தி கொண்ட அவருக்கு நெடுநாட்கள் புத்திரப்பேறு இல்லை.

அவர் பாண்டுரங்கனிடம் “இறைவா உன் அருளளால் எனக்கு புத்திரபேறு கிடைக்க அருள்செய். உன் கருணையினால் எனக்கு புத்திரப்பேறு கிடைத்தால் நான் உனக்கு பொன்னில் நவமணிகளோடு செய்த பொன்னரைஞாணை காணிக்கையாக அளிப்பேன்” என்று வேண்டிக்கொண்டார்.

பண்டரிநாதனின் கருணையால் அவருக்கு புத்திரப்பேறு கிடைத்தது. வணிகரும் வேண்டுதலை நிறைவேற்றும்பொருட்டு பொன்னரைஞாண் செய்ய சிறந்த பொற்கொல்லரை தேடினார்.

எல்லோரிடமும் கேட்டறிந்தபின் நரஹரியே பொன்னரைஞாண் செய்ய சிறந்தவர் என்று அறிந்து நரஹரிடம் சென்றார். “ஐயா நான் பாண்டுரங்கனுக்கு நவமணிகளால் ஆன பொன்னரைஞாண் செய்ய தங்களின் உதவியை நாடி வந்துள்ளேன்” என்றார்.

அதனைக் கேட்ட நரஹரி “நான் இதுவரை பண்டரிநாதன் கோவிலுக்கு சென்று பண்டரிநாதனை வழிபாடு செய்ததில்லை. பண்டரிநாதன் எப்படி இருப்பார் என்றும் எனக்கு தெரியாது. ஆகையால் என்னால் பண்டரிநாதனின் இடையின் அளவுக்கு பொன்னரைஞாண்; செய்ய இயலாது” என்று பதிலளித்தார்.

அதற்கு வணிகர் “ஐயா நான் பண்டரிநாதனின் இடையின் அளவினை அளந்து கொண்டு வருகிறேன். நீங்கள் அதற்கு ஏற்றாற்போல் பொன்னரைஞாண் செய்து தாருங்கள்” என்றார்.

முதலில் மறுத்த நரஹரியை வணிகர் சமாதானப்படுத்தி பொன்னரைஞாணை செய்துதர சம்மதிக்கச் செய்தார்.

நரஹரியும் நவமணிகளால் ஆன அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய பொன்னரைஞாணை செய்து வணிகரிடம் கொடுத்தார்.

வணிகரும் அதனை வாங்கிச் சென்று பாண்டுரங்கனுக்கு அணிவிக்க முயன்றார்.

பொன்னரைஞாண் பாண்டுரங்கனின் இடை அளவிற்கு சற்று குறையாக இருந்தது.

வணிகர் அதனை எடுத்து நரஹரிடம் கொடுத்து “ஐயா, இந்த பொன்னரைஞாண் பாண்டரங்கனின் இடையின் அளவிற்கு ஆறு விரற்கடை குறைவாக உள்ளது. எனவே இதனை ஆறுவிரற்கடை அளவிற்கு நீட்டித் தாருங்கள்.” என்று கூறினார்.

நரஹரியும் பொன்னரைஞாணை வணிகர் சொன்ன அளவிற்கு நீட்டித் தந்தார். வணிகரும் அதனை பாண்டுரங்கனுக்கு அணிவிக்க முயன்றார்.

தற்போது பொன்னரைஞாண் சற்று பெரிதாக இருந்தது.

மீண்டும் அதனை நரஹரியிடம் கொடுத்த வணிகர் “ஐயா, தற்போது பொன்னரைஞாண் சற்று பெரிதாக உள்ளது. ஆதலால் தாங்கள் நேரில் வந்து பண்டரிநாதன் இடையினை அளந்து அதற்கேற்றாற் போல் பொன்னரைஞாணை வடிவமைத்து தாருங்கள்” என்று கூறினார்.

அதனைக் கேட்டவுடன் நரஹரிக்கு கடும்கோபம் வந்தது. “நான் சிவபெருமானைத் தவிர வேறுயாரையும் பார்க்க மாட்டேன். நீங்களோ பண்டரிநாதனைப் பார்த்து அவரது இடுப்பளவினை அளக்கச் சொல்கிறீர்களே?. இது நியாயமா?” என்று கூறினார்.

வணிகரும் நரஹரிடம் கெஞ்சி கூத்தாடினார்.

இறுதியில் பாண்டுரங்கனின் இடையின் அளவினை அளக்க நரஹரி கண்களைக்கட்டி வர சம்மதம் தெரிவித்தார்.

நரஹரியும் வணிகரும் ஒப்பந்தப்படி பாண்டுரங்கன் கோவிலை அடைந்தனர்.

கோவிலை அடைந்ததும் நரஹரி கண்களைக் கட்டிக் கொண்டார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் “இது என்ன விநோதம்? யாரவது இறைவனை காண கண்களைக் கட்டிக் கொண்டு செல்வார்களா?” என்று கூறினர்.

வணிகரும் நரஹரியை அழைத்துக் கொண்டு கருவறையை அடைந்தார். நரஹரி இரு கைகளாலும் பாண்டுரங்கனை தொட்டுப் பார்த்தார்.

பாண்டுரங்கனின் இடையில் புலித்தோல் இருப்பது போல் நரஹரியின் கைகளுக்கு தென்பட்டது.

நரஹரி மேலும் சந்தேகத்துடன் பாண்டுரங்கனின் மற்ற அங்கங்களை தொட மான், மழு, சூலம், அக்னி, உடுக்கை, சடாமகுடம், அதன்மீது பிறைச்சந்திரன், கங்கை, குண்டலங்கள், நெற்றிக்கண் என எல்லாம் இருப்பதை உணர்ந்தார்.

நரஹரிக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. “நான் பாண்டுரங்கனை காணக்கூடாதுதென்று எண்ணி கண்களைக் கட்டிக் கொண்டு வந்தேன். இங்கே திருமாலுக்கு பதிலாக சிவபெருமானை அல்லவா நான் உணர்கிறேன்.” என்று எண்ணியபடி கட்டிய கண்களை அவிழ்த்தார்.

அங்கே நீலவண்ணத்தில் இடையிலே கைகளை வைத்துக் கொண்டு பட்டு பீதாம்பரம் மணிமுடியுடன் சிரித்த முகமாய் பாண்டுரங்கன் காட்சியளித்தார்.

மீண்டும் கண்களைக் கட்டிக்கொண்டு பாண்டுரங்கனைத் தொட்டுப் பார்த்தார். அவரின் கைகளுக்கு சிவபெருமான் தென்பட்டார். கண்களைத் திறந்தார். எதிரே பாண்டுரங்கன்.

கண்களைக் கட்டினால் கங்காதரனையும், கண்களைத் திறந்தால் கண்ணபிரானையும் அல்லவா உணர்கிறேன். இது என்ன அதிசயம். ஒன்றும் புரியவில்லையே” என்று எண்ணியவாறு பலமுறை கண்களை மூடியும், கண்களைத் திறந்தும் பார்த்தார்.

இறுதியில் நரஹரி அரியும் அரனும் ஒருவரே என்ற ஞானத் தெளிவை அடைந்தார். பண்டரிநாதனின் திருவடிகளில் விழுந்து வணங்கி “அடியேன் செய்த பிழையை பொறுத்து அருளுங்கள்.

மாலவனே மகாதேவன். பரமேஸ்வரனே பாண்டுரங்கன்  என்ற ஞானத்தை இன்று தங்களின் திருவிளையாட்டால் அறிந்து கொண்டேன்.

இனி நான், மதுசூதனனே மகாகாலன், கேதாரனே கேசவன் என்று உலகத்தினருக்கு எடுத்துச் சொல்வேன். அதற்கு தாங்கள் அருள்புரியுங்கள்” என்று வேண்டினார்.

ஞானசித்தி அடைந்த நரஹரி பண்டரிநாதனை மீண்டும் ஒருமுறை பார்த்தார். அரியும் அரனும் சேர்ந்த உருவமாக காட்சியளித்தார் பண்டரிநாதன்.

நாமும் இந்த மார்கழி மாதத்தில் அரியைப் போற்றும் திருப்பாவையையும், அரனைப் போற்றும் திருவெம்பாவையையும் பாடி இறைவனைப் போற்றி வாழ்வில் உன்னத நிலையை அடைவோம்.

– வ.முனீஸ்வரன்

 

Visited 1 times, 1 visit(s) today