பஞ்சபூதத் தலங்கள் என்பவை சிவபெருமானை பஞ்சபூதங்களின் வடிவில் வழிபாடு செய்யும் இடங்களைக் குறிக்கும்.
நிலம் (பிரித்வி), நீர்(அப்பு), நெருப்பு (தேயு), காற்று (வாயு), ஆகாயம் (ஆகாசம்) ஆகியவைகளே பஞ்சபூதங்கள் என்றழைக்கப்படுகின்றன.
பஞ்சபூதங்களே உலகில் உள்ள எல்லா உயிரினங்கள் உருவாக்கம், அவற்றின் வாழ்க்கை மற்றும் அழிவு ஆகியவற்றிற்கு மூலாதாரமாக உள்ளன. எனவேதான் இந்த பஞ்சபூத சக்திகள் ஒவ்வொன்றினையும் கொண்டு கோவில்களை உருவாக்கி வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் இருந்ததை தமிழ் இலக்கிய நூலான புறநானூற்றின் மூலம் அறியலாம்.பெரும்பாலான சிவாலயங்களில் இந்த பஞ்சபூத சிவலிங்கங்களைக் காணலாம்.
தென்னிந்தியாவில் இறைவனான சிவபெருமான் அருள்புரியும் ஐந்து வழிபாட்டிடங்கள் பஞ்சபூதத் தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
நிலம் – ஏகாம்பரேசுவரர் கோவில் காஞ்சிபுரம் – தமிழ்நாடு
நீர் – ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் திருவானைக்காவல் – தமிழ்நாடு
நெருப்பு – அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலை – தமிழ்நாடு
காற்று – காளத்தியப்பர் கோவில் திருகாளகத்தி – ஆந்திரப்பிரதேசம்
ஆகாயம் – நடராஜர் கோவில் சிதம்பரம் – தமிழ்நாடு
நிலம் – ஏகாம்பரேசுவரர் கோவில், காஞ்சிபுரம்
இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களில் நிலம் எனப்படும் மண்ணினை இத்தலம் குறிக்கிறது. இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம் என்றழைக்கப்படுகிறது.
கம்பை ஆற்றின் கரையில் சுயம்புவாக எழுந்தருளிய இறைவனை உமையம்மை கண்டபோது ஆற்றில் ஏற்பட்ட வெள்ள மிகுதியால் இறைவனை இறுக அணைத்தாள். அதனால் இறைவனின் திருமேனி குழைந்து அதில் தழும்புகள் ஏற்பட்டன. அதனால் இத்தல இறைவன் தழுவக் குழைந்த நாதர் என்றழைக்கப்படுகிறார்.
இத்தலம் முக்திதரும் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சைவ சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரர் பார்வையிழந்து தவித்தபோது இத்தல இறைவனின்மீது பாடல்கள் பாடியே இடக்கண் பார்வையைப் பெற்றார்.
சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவனுக்கு அபிசேகங்கள் நடைபெறுவதில்லை.
இவ்விடம் திருக்குறிப்புத்தொண்டர், கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோன் போன்ற நாயன்மார்களின் அவதாரத் தலம் மற்றும் சாக்கிய நாயனாரின் முக்தித்தலமாகும்.
இத்தலத்தில் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற நாமத்துடனும், அம்மை ஏலவார்குழலி என்ற நாமத்திலும் அருள்புரிகிறார்கள்.
நீர் – ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருவானைக்காவல்
இக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி அருகில் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களில் நீரினை இத்தலம் குறிக்கிறது. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இத்தலலிங்கம் அப்பு லிங்கம் என்றழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் உமையம்மை நீரில் சிவலிங்கத்தை வடித்து வழிபாடு நடத்தினாள். யானையும், சிலந்தியும் இத்தல இறைவனை வழிபட்டு முறையே சிவகணத்தலைவனாகவும், கோச்செங்கட் சோழ அரசனாகவும் உயர்நிலை அடைந்தன.
ஜம்பு என்றழைக்கப்படும் வெண்நாவல் மரத்தின் அடியில் இத்தல இறைவன் அருள்புரிந்ததால் இவர் ஜம்புகேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
இங்குள்ள இறைவன் தரைமட்டத்திற்கு கீழே அமையப்பெற்று எப்போதும் நீர் சூழ்ந்தே காணப்படுகிறார். இத்தல இறைவனை உமையம்மை வழிபட்டதால் உச்சி கால வழிபாட்டின்போது அர்ச்சகர் சேலை அணிந்து இங்கு வழிபாடு நடத்துவது சிறப்பம்சமாகும்.
யானை ஏறி செல்ல முடியாத அளவில் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் இத்தலம் முதன்மையானது. சிவனடியார்கள் பலராலும் இத்தலம் பாடப்பெற்றுள்ளது. இத்தலத்தில் அம்மையும் அப்பனும் அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர்.
நெருப்பு – அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை
இத்தலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களில் நெருப்பினை இத்தலம் குறிக்கிறது. அக்னித்தலமான இங்கு இறைவன் தேயு லிங்கம் என்றழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் இறைவன் ஜோதி ரூபமாக அடிமுடி தேடிச் சென்ற திருமால், பிரம்மா மற்றும் உலகத்தினருக்கு காட்சியளித்தார். இங்கு காணப்படும் மலையே இறைவனாகக் கருதப்படுகிறார்.
திருவண்ணாமலையில் காணப்படும் மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி தினங்களில் இத்தலத்தில் கிரிவலம் வருவது சிறப்பாகும்.
இத்தலத்தில் உள்ள சிவபெருமானை சைவ சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர்.
அருணகிரிநாதர் முருகனின் மீது இத்தலத்தில் பாடல்கள் பாடியுள்ளார். நினைத்தாலே முக்தி தரும் தலம் இது என்பது இதன் சிறப்பாகும்.
இங்கு நடைபெறும் கார்த்திகை தீபம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இறைவன் அருணாச்சலேஸ்வரர், அண்ணாமலையார் என்ற பெயரிலும், அம்மை உண்ணாமலை என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
காற்று – காளத்தியப்பர் கோவில், திருகாளத்தி
இத்தலம் ஆந்திர மாநில மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களில் காற்றினை இத்தலம் குறிக்கிறது.
வாயுத்தலமான இங்கு இறைவன் வாயு லிங்கம் என்றழைக்கப்படுகிறார். சீ என்ற சிலந்தி, காளம் என்ற பாம்பு, அத்தி எனப்படும் யானை ஆகிய மூன்றும் இத்தல இறைவனை வழிபட்டு முக்தி பெற்றதால் இவ்விடம் சீகாளகத்தி என்றும், திருகாளகத்தி என்றும், ஸ்ரீகாளகத்தி என்றும் வழங்கப்படுகிறது.
கண்ணப்பநாயனார் இத்தல இறைவன்மீது கொண்ட பேரன்பினால் தனது கண்களை தானம் செய்து முக்தி பெற்றார். கண்தானத்தில் உலகின் முன்னோடியாக கண்ணப்பர் திகழக் காரணமான தலம் என்னும் சிறப்புடையது.
இக்கோயிலை சோழப் பேரரசின் முக்கிய அரசனான இராஜேந்திரச் சோழன் என்பவரால் கட்டப்பட்டு பின் பல மன்னர்களால் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அப்பர் தனது தேவாரப் பதிகத்தில் இத்தல அம்மை மற்றும் அப்பனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இங்கு இறைவன் காளத்தியப்பர் என்ற பெயரிலும், அம்மை ஞானப்பூங்கோதை என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
ஆகாயம் – நடராஜர் கோவில், சிதம்பரம்
இத்தலம் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களில் ஆகாயத்தை இத்தலம் குறிப்பிடுகின்றது. ஆகாச தலமான இங்கு இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து ஆகாயமாக அருள்புரிகிறார்.
சிவனின் வழிபாட்டுப்பாடல்களின் ஆரம்பம் மற்றும் முடிவில் திருச்சிற்றம்பலம் என்று கூறப்படுவது இத்தலமே. எல்லாவற்றிற்கும் ஆரம்பம் மற்றும் முடிவு ஆகாயம் என்பதை உணர்த்தத்தான் திருச்சிற்றம்பலம் என்று கூறப்படுகிறது.
இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்றே குறிப்பிடப்படுகிறது. இங்கு இறைவன் உலக உயிர்கள் உய்யும்பொருட்டு தனது ஆனந்த தாண்டவத்தை பதஞ்சலி, வியாக்கிரதபாதர் மற்றும் உலக உயிர்களுக்கு காட்டி அருளுகிறார்.
பஞ்ச சபைகளில் இத்தலம் பொன்னம்பலம், கனக சபை என்று வழங்கப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பினைப் பெற்றுள்ளது இத்தலம்.
இங்கு மகாவிஷ்ணு கோவிந்தராஜப் பெருமாள் என்கின்ற நாமத்துடன் புண்டரீகவள்ளித் தாயாருடன் அருள்புரிகிறார். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்றாகும்.
இங்கு இறைவன் நடராசன் என்ற பெயரிலும் அம்மை சிவகாமி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.
பஞ்சபூதங்களின் வடிவில் உலகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனான சிவபெருமானை போற்றி வணங்குவோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!