சிவராத்திரி

சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்

சைவத்தின் தலைவனான சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்  என‌ ஒன்பது விரதங்கள் கூறப்படுகின்றன.

அவை மகாசிவராத்திரி விரதம், பிரதோச விரதம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், கேதார விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம், ரிசப விரதம் ஆகியவை ஆகும்.

இந்த விரதங்களின்போது சிவப்பரம்பொருளின் ஒவ்வொரு வடிவங்கள் வழிபாடு செய்யப்படுகின்றன.

சிவபெருமானை நினைத்து இவ்விரத வழிபாடுகளை மேற்கொண்டால் இம்மை மற்றும் மறுமைகளில் நற்கதியை பெறுவதோடு முக்தியையும் பெறலாம்.

இனி ஒவ்வொரு விரதமுறையைப் பற்றிப் பார்ப்போம்.

 

மகாசிவராத்திரி விரதம்

சிவன்
சிவன்

 

இவ்விரதம் மாசி மாதம் பௌர்ணமி முடிந்த பதினான்காம் நாளான தேய்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தினை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் எல்லோரும் கடைப்பிடிக்கலாம்.

சிவபெருமானை நினைத்து மேற்கொள்ளும் விரதமுறைகளில் இவ்விரதம் முதன்மையானது.

இவ்விரதமுறையில் சிவராத்திரிக்கு முதல்நாள் ஒருவேளை உணவு உண்டு சிவராத்திரி அன்று முழுவதும் உணவு உண்ணாமல் இருக்கின்றனர்.

அன்று காலையில் குளித்து சிவாலய வழிபாடு செய்து, பகல் முழுவதும் இறைநினைப்புடன் நமசிவாய மந்திரத்தை கூறுகின்றனர்.

இரவில் நடைபெறும் நான்கு கால சிவ வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். வழிபாட்டின்போது தேவாரம், திருவாசம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் பாடப்படுகின்றன.

மறுநாள் காலையில் குளித்துவிட்டு சிவாலய தரிசனம் செய்து பின் சிவனடியவர்களுடன் உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்கின்றனர்.

இவ்விரதமுறையைப் பின்பற்றவதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி நல்வாழ்கை பெறுவதோடு பிறவாமை என்கின்ற முக்தியும் சிவனருளால் கிடைக்கப் பெறும்.

இவ்விரதத்தின்போது சிவனின் மூர்த்தங்களான சோமஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சந்திரசேகரர் ஆகியோர் வழிபடப்படுகின்றனர்.

இவ்விரத்தில் பெரும்பாலான இடங்களில் சிவலிங்கமே வழிபாட்டில் இடம்பெறுகிறது.

 

பிரதோச விரதம்

பிரதோச வழிபாடு
பிரதோச வழிபாடு

 

இவ்விரதம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசையிலிருந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசியில் கடைப்பிடிக்கப்படுகிறது.

எனினும் சனிக்கிழமைகளில் வரும் சனிப்பிரதோசம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதுப்படுகிறது.

இவ்விரதமுறையை மேற்கொள்வோர் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் வளர்பிறை சனிப்பிரதோசத்திலிருந்து தொடங்கி தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

பிரதோச காலம் என்பது சாயங்காலம் 4.00மணி முதல் 7.00வரை உள்ள நேரமாகும்.

இவ்விரதமுறையில் மேற்கொள்வோர் அதிகாலையில் நித்திய கடன்களை முடித்து நீராடி சிவவழிபாடு செய்கின்றனர். பகலில் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கின்றனர். பகலில் உணவு உண்ணாமலும், நீர்அருந்தாமலும் விரதத்தினை மேற்கொள்கின்றனர்.

மாலை வேளையில் சிவாலயத்தில் நடைபெறும் வழிபாட்டு முறைகளில் கலந்து கொண்டு பின் உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்கின்றனர்.

இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் வாழ்வின் பாவங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும். அறிவுத்திறன் மேம்படும். நினைவாற்றல் பெருகும். கடன், வறுமை, நோய், அகாலமரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவை நீங்கும்.

இவ்விரதத்தின்போது நந்தியின் மீது அமர்ந்த அம்மையப்பர் வழிபடப்படுகிறார்.

 

சோமவார விரதம்

சந்திரசேகரன்
சந்திரசேகரன்

 

இவ்விரதம் கார்த்திகை மாத திங்கள கிழமைகளில் தொடங்கப்பட்டு பின் திங்கள் கிழமை தோறும் பின்பற்றப்படுகிறது.

சாபத்தினால் ஒளியிழந்த சோமனான சந்திரன் இவ்விரதம் மேற்கொண்டு தேய்ந்து வளரும் நிலையைப் பெற்றான். மேலும் பிறைச்சந்திரனாக இறைவனின் திருமுடியை அலங்கரிக்கும் பாக்கியத்தையும் பெற்றான்.

சோமன் பின்பற்றி நற்கதி பெற்ற விரதமாயின் இது சோமவார விரதம் என்றழைக்கப்படுகிறது. சந்திரனைச் சூடியதால் இறைவன் சந்திரசேகரன், சந்திமௌலி என்று அழைக்கப்படுகிறார்.

இவ்விரதமுறையில் பகலில் உண்ணாமல் காலை மற்றும் மாலை வேளையில் சிவலாயம் சென்று வழிபடவேண்டும்.

தன்னால் முடிந்தளவுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இரவில் உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும்.

இத்தினத்தில் கணவன் மனைவி இணைந்து சிவாலயம் சென்று வருவது சிறப்பான பலனைத் தரும்.

இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் ஆயுள்விருத்தி, மனஅமைதி, ஐஸ்வர்யம், தகுந்த துணையுடன் கூடிய நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

இவ்விரதத்தில் சந்திரனைத் தலையில் சூடிய சந்திரசேகர மூர்த்தி வழிபாடு செய்யப்படுகிறார்.

 

உமாமகேஸ்வர விரதம்

உமா மகேஸ்வரர்
உமா மகேஸ்வரர்

 

இவ்விரதம் கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. கடுமையான விரதம் மேற்கொண்டே உமையம்மை கார்த்திகை பௌர்ணமி அன்று இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றார்.

அம்மை, அப்பனை நினைத்து கார்த்திகை பௌர்ணமியில் மேற்கொள்ளும் விரதமாதலால் இது உமாமகேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

இன்றைய தினத்தில் காலையில் உணவு உண்ணாமல் விரதமுறை பின்பற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் சிவாலய தரிசனம் செய்த பின்னர் சிவனடியாருக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.

இவ்விரதத்தைப் பின்பற்றுவதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிரிந்த தம்பதிகள் இணைவர்.

இவ்விரதத்தில் உமாமகேஸ்வர மூர்த்தி வழிபடப்படுகிறார்.

 

திருவாதிரை விரதம்

நடராஜர்
நடராஜர்

 

திருவாதிரை விரதம் மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிவரும் திருவாதிரையில் கடைப்பிடிக்கப்படுகிறது. திருவாதிரையைக் கொண்டே இறைவனார் ஆதிரையன் என்றழைக்கப்படுகிறார். இவ்விழா சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது.

தாருகாவனத்து முனிவர்களின் செருக்கினை அடக்கி இறைவன் ஆடிய திருநடனம் மற்றும் பதஞ்சலி, வியாக்கிரதபாதர் ஆகியோருக்காக இறைவன் ஆடிய திருநடனம் திருவாதிரை நாளில் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதிகாலையில் சிவாலய தரிசனம் சிறப்பு. ஒருவேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

இவ்விரதத்தில் இறைவனுக்கு களியும், ஏழுகறிக்கூட்டும் படைக்கப்படுகிறது.

இவ்விரதமுறையை மேற்கொள்வதால் புகழ், நீடித்த ஆயுள், செல்வம், நோயின்மை, மகிழ்ச்சியான திருமண வாழ்வு ஆகியவை கிடைக்கும். மேலும் நடனக்கலையிலும் சிறக்கலாம்.

இவ்விரத வழிபாட்டில் ஆடலரசனான நடராஜர் வழிபடப்படுகிறார்.

 

 

கேதார விரதம்

கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம்

 

இவ்விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி (விஜய தசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இவ்விரதமுறையைப் பின்பற்றியே உமையம்மை சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார்.

இவ்வாறு அம்மையை இடப்பாகத்தில் பெற்ற இறைவன் அர்த்தநாரீஸ்வரர், மாதொரு பாகன் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறார்.

இவ்விரதமுறையில் அதிரசம், நோன்பு கயிறு ஆகியவை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இவ்விரதத்தின் நிறைவில் நோன்புக்கயிற அணிவிக்கப்படுகிறது.

ஒரு சிலர் இவ்விரதத்தை கடைசி ஒன்பது, ஏழு,ஐந்து, மூன்று நாட்களுக்கும் ஒருசிலர் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கின்றனர்.

இவ்விரதமுறையை மேற்கொள்வதால் நீண்ட நாட்கள் தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர். நல்ல வாழ்க்கைத்துணை, நற்புத்திரர்கள், நல்ல எண்ணங்கள் ஈடேறுதல் ஆகியவை கிடைக்கும்.

இவ்விரதத்தில் அர்த்தநாரீஸ்வர மூர்த்தி வழிபடப்படுகிறார்.

 

கல்யாணசுந்தரர் விரதம்

கல்யாண சுந்தரர்
கல்யாண சுந்தரர்

 

இவ்விரதம் பங்குனி மாதம் பௌர்ணமியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் உமையம்மையை சிவபெருமான் மணந்தார். எனவே இவ்விரதம் கல்யாண விரதம் என்றும் கல்யாணசுந்தரர் என்றும் அழைக்கப்படுகிறது.

இன்றைய தினத்தில் பகலில் உண்ணாது விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதத்தைப் பின்பற்றுவதால் நல்ல வாழ்க்கை துணை, நிம்மதியான நல்ல வாழ்வு கிடைக்கும்.

இவ்விரதத்தில் கல்யாண சுந்தர மூர்த்தி வழிபடப்படுகிறார்.

 

சூல விரதம்

சூலத்துடன் சிவபெருமான்
சூலத்துடன் சிவபெருமான்

 

இவ்விரதம் தை அமாவாசை அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பரசுராமன் இவ்விரதமுறையைப் பின்பற்றி பலம்மிக்க கார்த்தவீரியராஜனைக் அழித்தார்.

மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் இவ்விரதத்தைப் பின்பற்றி தலைவலி, வயிற்றுவலி நீங்கப் பெற்றனர்.

இவ்விரதத்தில் காலை மற்றும் பகலில் சிவாலய தரிசனம் செய்து பின் ஏழைஎளியோருக்கு தான தர்மங்கள் செய்ய வேண்டும். பின் சிவனடியார்களுடன் இணைந்து ஒரு வேளை உணவு உண்ண வேண்டும்.

இவ்விரதத்தைப் பின்பற்றினால் எதிரிகள் மறைவர். கொடிய நோய் அகலும். சகல சௌபாக்கியங்களுடன் சிவனருளும் கிடைக்கும்.

இவ்விரதத்தில் சூலத்துடன் கூடிய சிவபெருமான் வழிபாடு செய்யப்படுகிறார்.

 

ரிஷப விரதம்

நந்தி மீது உமையம்மையுடன் சிவபெருமான்
நந்தி மீது உமையம்மையுடன் சிவபெருமான்

 

இவ்விரதம் வைகாசி வளர்பிறை அஷ்டமி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 

இவ்விரதத்தைப் பின்பற்றியே திருமால் கருடவாகனத்தையும், இந்திரன் ஐராவதத்தையும், குபேரன் முத்து விமானத்தையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

இவ்விரதத்தில் காலையில் சிவாலய தரிசனம் செய்து ஏதேனும் ஒன்றினை தானம் அளித்து வீடு திரும்பி பிரசாதத்தை உண்ண வேண்டும்.

பகலில் இறைவனின் திருவைந்தெழுத்தை ஓத வேண்டும். மாலையில் சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். இரவில் வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் சிவாலய தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

இவ்விரதமுறையை மேற்கொள்வதால் புதிய வாகனங்கள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். விபத்தில்லா பயணம் அமையும். வாகனத்தால் அனுகூலம் கிடைக்கும்.

அன்றைய தினத்தில் நந்தியெம்பெருமானின் மீது அமர்ந்த நிலையில் உள்ள உமையம்மையுடன் கூடிய சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

 

சிவனுக்கு உகந்த விரதமுறைகளைப் பின்பற்றி வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.

-வ.முனீஸ்வரன்

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.