இன்றைக்கு இணையத்தை இணைக்கும் முக்கியமான உலாவி, மோசில்லா ஃபயர் பாக்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஃபயர் பாக்ஸ் என்பதன் பொருள் தெரியுமா?
இதில் ஃபயர் பாக்ஸ் என்பதின் பொருள் சிவப்பு பாண்டா ஆகும்.
இன்னொரு முக்கியமான விசயம் சிவப்பு பாண்டாக்கள் அதிகமாக இருக்கிற இடங்களில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இன்றைக்கு உலகில் மொத்தமே 10,000 சிவப்பு பாண்டாக்களே உள்ளன. இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டா என்ற பெயரானது நேபாளச் சொல்லான பான்யா என்பதிலிருந்து தோன்றியது. பான்யா என்பதற்கு மூங்கிலை உண்ணும் பிராணி என்பது பொருளாகும்.
இவை பெரிய பாண்டாக்களைப் போன்று உயர்ந்த மலைகளில், மூங்கிலை உணவாக உட்கொள்கின்றன.
சிவப்பு பாண்டாக்கள் பார்ப்பதற்கு நாம் வீட்டில் வளர்க்கும் பூனையைவிட சற்று பெரியதாக இருக்கும். இது சிக்கிம் மாநில விலங்காக உள்ளது.
சிவப்பு பாண்டாவின் வாழிடம் மற்றும் குணநலன்கள்
சிவப்பு பாண்டாவானது கிழக்கு இமயமலைப் பகுதிகளின் நாடான பூடான், இந்தியா, நேபாளம், பர்மா, மற்றும் தென்மேற்கு சீனா ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டுள்ளது.
உயர்ந்த மலைப்பகுதியே இதனுடைய வாழிடமாகும். இவை பெரும்பாலும் மரத்திலேயே காணப்படும்.
இது வட்டமான தலையும், நிமிர்ந்த நடுத்தர அளவிலான காதுகளையும், செம்பழுப்புநிற அடர்ந்த கம்பளி முடியையும், புசுபுசுவென அழகான நீளமான வாலினையும் கொண்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இவற்றின் கால்கள் குட்டையாகவும், பாதங்கள் மற்றும் கால்கள் கறுப்புநிறத்தில் அடர்த்தியான ரோமங்களையும் கொண்டிருக்கின்றன.
இவற்றின் நகங்கள் கூர்மையாகவும், வலிமையாகவும்,உள்நோக்கி வளைந்தும் இருக்கும். இந்நகங்கள் இவை குறுகிய மரக்கிளைகளில் ஏறவும், பழங்கள் மற்றும் இலைகளைப் பறிக்கவும் உதவுகின்றன.
இவைகள் மணிக்கட்டு எலும்பின் நீட்சியான பொய் கட்டைவிரலைக் கொண்டுள்ளன. இவை உணவினை உண்ண உதவுகின்றன.
வளர்ந்த சிவப்பு பாண்டாவானது 80-120 செமீ நீளம் இருக்கும். இதனுடைய வாலானது உடலின் மொத்த நீளத்தில் பாதியளவைக் (30-60 செமீ) கொண்டிருக்கும்.
வளர்ந்த ஆணானது 4.5-6.5 கிலோ எடையிலும், பெண்ணானது 3-4.5 கிலோ எடையிலும் இருக்கும்.
இவை தனிமை விரும்பிகள். பொதுவாக தனித்தே காணப்படும்.
இனப்பெருக்க காலங்களில் கூட்டமாகவோ, இணையாகவோ சுற்றித் திரியும்.
மிகவும் சாதுவான இப்பிராணிகள், டிவிட் அல்லது விசில் போன்ற ஒலிகளை எழுப்பி தொடர்பு கொள்கின்றன.
இவை அந்தி மற்றும் விடியல் வேளைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. பகலில் மரத்திலோ, மரப்பொந்துகளிலோ நேரத்தை கழிக்கின்றன.
இவை 17-25 டிகிரி வெப்பநிலை உடைய இடங்களிலே வாழ்கின்றன. 25டிகிரி வெப்பத்திற்கு மேல் இவற்றால் தாங்கிக் கொள்ள இயலாது.
இவை தண்ணீரில் காலை நனைத்து பின் ஈரக்காலை நக்கி தங்களுடைய தாகத்தை தணித்துக் கொள்கின்றன.
இவை பெரும்பாலும் (மூன்றில் இரண்டு பங்கு) மூங்கிலையே உணவாக உட்கொள்கின்றன.
இவை பழங்கள், புற்கள், லிச்சென் உள்ளிட்ட பாசிகள், காளான்கள், வேர்கள், மீன்கள், முட்டைகள், பறவைகள், பூச்சிகள், கொறித்துண்ணிகள் ஆகியவற்றையும் உண்ணுகின்றன.
மூங்கிலில் உள்ள செல்லுலோஸை சீரணிக்க இயலாமை காரணமாக, சிவப்பு பாண்டாக்கள் ஊட்டச்சத்து அதிகமாகப் பெறவேண்டி, அதிகளவு மூங்கிலின் உயர்தர இலைகள் மற்றும் தளிர்களை உண்ணுகின்றன.
சிவப்பு பாண்டாக்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தின் பாதிவரை உள்ள காலங்களில் இணைசேர்ந்து, 112முதல்158 நாட்கள் கழித்து 110முதல்130 கிராம் அளவிலான 1-4 குட்டிகளை ஈனுகின்றன.
பெண் சிவப்பு பாண்டாக்கள் குட்டி ஈனும் பருவத்தில் இலைகள், புற்கள், சருகளை வைத்து பாறை விரிசல், மரப்பொந்துகளில் கூடு போன்ற அமைப்பினை உருவாக்குகின்றன. குட்டிகள் பிறக்கும்போது குருடாகவும், செவிடாகவும் இருக்கின்றன.
பிறந்து 18நாட்களில் குட்டிகளுக்கு கண்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. 90 நாட்களில் முழுமையான சிவப்பு பாண்டாவாக மாறுகின்றன.
முதல் 12வாரங்களுக்கு குட்டிகள் கூடுகளிலே இருக்கின்றன. இவ்வகைப் பாண்டாக்களின் ஆயுட்காலம் 8முதல்10 வருடங்கள் ஆகும்.
சிவப்பு பாண்டாக்கள் அவைகளின் விருப்பத்திற்கேற்ப வளர்ச்சிதை மாற்றத்தை கூட்டவோ, குறைக்கவோ செய்கின்றன. இதனால் அவற்றின் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
இவை உடல்வெப்பநிலை குறைக்க (கோடைகாலத்தில்) உடலினை நீட்டிக் கொள்கின்றன.
உடல் வெப்பத்தைக்கூட்ட (குளிர்காலத்தில்) பந்தாக சுருண்டு தன்னுடைய வாலால் உடலை மூடிக்கொள்கின்றன.
சிவப்பு பாண்டா அழிவின் விளிம்பில் உள்ளது ஏன்?
செம்பழுப்புநிற முடியுடன் கூடிய வெளிப்படையான முகம் மற்றும் புசுபுசு வால் இதனை ஆசியாவில் மிவும் பிரபலமான விலங்காக மாற்றியுள்ளது. இதுவே இதனுடைய அழிவிற்கு முக்கிய காரணம் ஆகும்.
மேலும் இதனுடைய அழிவிற்கான சில காரணங்களைப் பார்ப்போம்.
இதனுடைய வாழிடமான இமயமலையில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதும், காடுகள் விளைநிலங்களாக மாற்றப்படுவதும் இதனை அழிவை நோக்கிக் கொண்டு சென்றுள்ளது.
இதனுடைய ரோமங்கள் மற்றும் அழகான வாலுக்காகவும், மருந்துப்பொருட்கள் தயாரிக்கவும் இவை
திருட்டுத்தனமாக அதிகளவு வேட்டையாடப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக சீனாவில் சிவப்பு பாண்டாவின் ரோமங்களால் அலங்கரிக்கப்பட்ட தொப்பியை மணமகள் அணிவது, மகிழ்ச்சியான திருமண வாழ்வைத் தரும் எனக் கருதப்படுகிறது.
மற்றைய இமயமலை விலங்குகளைப் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறியில், தவறுதலாக மாட்டிக் கொள்ளும் சிவப்புப்பாண்டாக்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன.
இதனுடைய அழகில் மயங்கி சிலர் இதனை செல்லப்பிராணியாக வளர்க்க முற்படுகின்றனர். ஆனால் விசித்தரமான உணவுப்பழக்கம் மற்றும் வாழிடத்தைக் கொண்டுள்ள இவ்வகை பாண்டாக்கள் சூழ்நிலை மாற்றத்தை தாங்க இயலாமல் இறந்துவிடுகின்றன.
இவ்வகை பாண்டாக்கள் 4குட்டிகளை ஈன்றபோதிலும் ஒன்று மட்டுமே முதிர்ந்த பாண்டாவாக மாறுகிறது. ஏனையவை மடிந்து விடுகின்றன.
ஏனெனில் இதனுடைய முக்கிய உணவான மூங்கிலில் இருந்து குறைந்த ஊட்டச்சத்துக்களையே தாய் பெறுகிறது. அதனால் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேல் உள்ள குட்டிகளைக் அதனால் காப்பாற்ற இயலாது.
சிவப்பு பாண்டாக்கள் ஏன் முக்கியமானவை?
தற்போதைக்கு இருக்கும் அலுரிடே குடும்பத்தின் ஒரே பிரதிநி சிவப்பு பாண்டா மட்டும்தான். ஆதலால்தான் இவை ஈடுசெய்ய முடியாதவைகளாக இருக்கின்றன.
மேலும் இது உலகின் இயற்கை பாரம்பரியத்தின் ஒருபகுதியாக இருப்பதால் இது முக்கியமானது மற்றும் கிரகத்தின் பன்முகத்தன்மைக்கும் பங்களிக்கிறது.
இவை கிழக்கு இமயமலையின் அகன்ற இலைகாடுகளின் சுற்றுசூழல் அமைப்பின் ஒருபகுதி ஆகும்.
இமயமலையில் சிவப்பு பாண்டாக்கள் காணப்படுவது, அங்குள்ள சுற்றுசூழலின் ஒட்டுமொத்த ஆரோக்கிய அறிகுறியாக, பாதுகாப்பு உயிரியலாளர்கள் கருதுகின்றனர்.
சிவப்பு பாண்டாக்களின் வாழிடத்தைப் பாதுகாப்பதால், இமயமலையில் உள்ள ஏனைய உயிரிகளான இமயமலை கருப்பு கரடிகள், படைச்சிறுத்தைகள் மற்றும் பல்வேறு பறவையினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இவை சுற்றுசூழல் அமைப்பை சமப்படுத்த உதவுகின்றன. சிவப்பு பாண்டாக்களை வேட்டையாடும் வேட்டை விலங்குகள் இவற்றின் அழிவால் பாதிக்கப்படுகின்றன.
அதே நேரத்தில் இவை மூங்கில்களை உணவாகக் கொண்டு அவற்றைக் கட்டுக்குள் வைக்கின்றன. இவற்றின் அழிவால் மூங்கில்கள் அதிகளவு வளர்ந்து, அப்பகுதியில் உள்ள மற்ற தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
ஆதலால் இயற்கையின் கொடையான சிவப்பு பாண்டாவைப் பாதுகாத்து, இளைய தலைமுறையினருக்கு அதனை அறிமுகப்படுத்துவது, இன்றைய தலைமுறையின் முக்கிய கடமை ஆகும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!