சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி என்பதினை எல்லோரும் அறிந்து அதனைப் பின்பற்றி சிவனருள் பெற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று போன்றவை கோயிலில் குடியிருக்கும் இறைவனை எல்லோரும் சென்று தொழ வேண்டும் என்பதனை விளக்கும் பொன்மொழிகள் ஆகும்.
இறைவன் என்பவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே. அவ்வாறு எங்கும் நீங்கமற நிறைந்திருக்கும் இறைவனை வழிபட ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்? என்ற கேள்வி பெரும்பாலோரின் மனதில் எழும் ஒன்றாகும். அதற்கு ஒரு சிறு விளக்கம் தரலாம் என்று நினைக்கிறேன்.
சூரிய ஒளியானது எங்கும் நிறைந்திருக்கிறது. சாதாரணமாக சூரிய ஒளியில் பஞ்சு வைக்கப்படும்போது அது எரிவதில்லை.
ஆனால் சூரிய ஒளியை பஞ்சின் மீது குவிஆடி எனப்படும் லென்ஸைக் கொண்டு குவிய வைக்கும்போது பஞ்சு பற்றி எரிந்து ஆற்றலைத் தருகிறது.
அதே போல் கோவிலானது இறைவனின் தனிபெரும் கருணையான ஆற்றலை குவிசெய்யும் இடமாகும்.
ஆதால் நாம் ஆலயங்களில் சென்று வழிபடும்போது இறைவனின் பேரருள் நமக்கு ஒருசேரக் கிடைக்கும். எனவே நாம் எல்லோரும் ஆலய வழிபாட்டை தினமும் மேற்கொள்வது நலம் பயக்கும்.
ஆலய வழிபாட்டினை மேற்கொள்ளும்போது இறைவனின் அருளைப் பெற்று வாழ்வு சிறக்க நம் முன்னோர்கள் அதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளனர். ஆனந்த வாழ்வு வாழ நாம் அதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இனி சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி? என்பதினைப் பற்றி பார்ப்போம்.
சிவாலயங்களில் வழிபாடு மேற்கொள்ளும் முறை
முதலில் வீட்டில் இருந்து குளித்து சுத்தமான எளிமையான ஆடை அணிந்து கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
பின் சிவாலயத்தில் உள்ள தீர்த்தத்தில் (தீர்த்தத்தில் நீர் இல்லாத போது அருகில் உள்ள தண்ணீர் குழாயில்) காலினைக் கழுவ வேண்டும்.
கோவிலின் முன் நின்று தூல லிங்கமாக உள்ள கோபுரத்தை இரு கைகளையும் மேலே உயர்த்தி வணங்க வேண்டும். இதனை கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதன் மூலம் அறியலாம்.
கோவிலினுள் சென்று முதலில் கொடிமரத்தையும், கொடிமர விநாயகரையும் வணங்க வேண்டும்.
பின் பலிபீடத்தின் அருகில் சென்று நம்மிடம் உள்ள பாவங்களான அழுக்காறு, பொறாமை, மாயை, பேராசை, தலைக்கனம் ஆகியவற்றை இறைவன் முன் பலியிடுவாதக் கருதி பலிபீடத்தில் வணங்க வேண்டும்.
கோயிலின் முன்புறத்தில் இருக்கும் கணபதியையும், கருணைக் கடலான கந்தனையும் வழிபாடு செய்ய வேண்டும்.
பின் நந்தியெம் பெருமானிடம் சிவ தரிசனத்திற்கு அனுமதி கேட்டு வணங்க வேண்டும்.
பின் மூலவரான பரம்பொருளை மனதில் நிறுத்தி தீபஒளியில் வழிபட வேண்டும். சிவனைப் பற்றிய பாடல்கள் பாடி வழிபாடு செய்யலாம்.
பிரகாரத்தில் கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களுடன் காட்சிதரும் தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
இங்கு அமர்ந்து இறைவன் குறித்து மந்திரம் சொல்லி தியானம் செய்யலாம்.
பின் கோவிலின் கன்னிமூலையில் உள்ள தலவிநாயகரை வழிபாடு செய்யவும்.
63 நாயன்மார்களையும், 9 தொகையடியார்களையும் வழிபடவும்.
இறைவனுக்கு நேர்பின்னே ஜோதிப்பிழம்பாக உள்ள லிங்கோத்பவரை நம்முடைய கர்வம் நீக்க வழிபாடு செய்யவும்.
பின் அருகில் உள்ள திருமகள் மற்றும் கலைவாணியை வழிபாடு செய்யவும்.
பிருத்திவி, அப்பு, வாயு, தேயு, ஆகாயம் ஆகிய பஞ்சலிங்கங்களை வழிபடவும்.
பின் வள்ளி, தெய்வானை சமேதராக விளங்கும் முருகனை வழிபாடு செய்யவும்.
பிரம்மாவை வழிபடவும். பின் துர்க்கையை வழிபடவும்.
இறைவனின் கோமுகி அருகில் இருக்கும் சண்டிகேஸ்வரரை கைதட்டி சத்தம் எழுப்பாமலும், நூல்களை பிய்த்து எறியாமலும் மௌனமாக கோரிக்கைகளை முறையிட்டு வழிபாடு செய்யவும்.
பின் அத்தலத்தின் நாயகியான உமையம்மையைப் போற்றி வணங்கி வழிபாடு செய்யவும்.
ஆடலரசனான நடராசப் பெருமானை வழிபாடு செய்யவும்.
பின் நவக்கிரகங்களை வணங்கவும்.
அதன் பின் காலபைரவ மூர்த்தியிடம் சென்று சிவனின் அருளைத் தவிர வேறு பொருள் ஏதும் இங்கிருந்து எடுத்துச் செல்லவில்லை; சிவனருள் பரிபூரணமாக எனக்கு கிடைக்க வழிசெய் என்று கூறி வழிபட வேண்டும்.
பின் பிரகாரத்தை வலம் வர வேண்டும். பிரகார வலத்தின் போது அம்மையையும், இறைவனையும் சேர்த்தே வலம் வரவேண்டும்.
பிரகார வலத்தின்போது நந்தியெம் பெருமானுக்கும், சிவனுக்கும் இடையில் செல்லக் கூடாது.
பின் தலவிருட்சத்தையும், சப்தகன்னியரையும் வழிபட வேண்டும்.
இறுதியில் கொடிமரத்தின் அருகே சென்று வடக்கே தலைஇருக்குமாறு ஆண்களாயின் சாஷ்டாங்க வணக்கமும், பெண்களாயின் பஞ்சாசர வணக்கமும் செய்து இறைவனை சரணடைய வேண்டும்.
சாஷ்டாங்கம் என்பது இருகைகள், இருகால்கள், இரு தோள்கள், மார்பு, நெற்றி ஆகியவை தரையில் படிய வணங்குவது.
பஞ்சாசரம் என்பது இரண்டு கைகள், இரண்டு கால்கள், நெற்றி ஆகியவை தரையில் படிய வணங்குவது.
பின் கொடிமரத்தின் அருகில் அமர்ந்து வேண்டுதல்களை கோரி தியானம் செய்யலாம்.
பின் வீட்டிற்குச் சென்று பூஜை அறையில் பிரசாதப் பொருட்களை வைத்து இறைவனை வழிபாடு செய்து அடுத்த வேலைகளைத் தொடரலாம்.
இறைவனின் அருட்பார்வை கிடைத்து நல்வாழ்வினைப் பெற அடிக்கடி ஆலயத்திற்குச் சென்று மேற்கூறிய முறையில் வழிபாடு செய்து ஆனந்த நிலையை அடைவோம்.