சீட் பெல்ட் அணிவது அவசியமா?

சீட் பெல்ட் அணிவது அவசியமா?

காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிவது அவசியமா? என்று கேட்டால் அது மிகவும் அவசியமான ஒன்று.

பயணம் செய்வது என்பது எல்லோரும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று.

மகிழ்ச்சி அளிக்கக் கூடிய பயணமானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

 

நம் ஊரில் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று காவலர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்று விதிமுறைகள் வகுத்துள்ளனர்.

கார் ஓட்டுபவர்கள் மட்டுமில்லாமல் காரில் பயணம் செய்யும் மற்றவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.

காரில் காற்றுப் பைகள் (Air Bags) இருக்கிறதால் கார் ஏதேனும் விபத்தில் சிக்கும்போது அவை நம்மை பாதுகாக்கும் என்று கருதினால் அது தவறு.

ஏனெனில் சீட் பெல்ட்தான் பாதுகாப்பின் முதல் நிலை சாதனம்.

காற்றுப் பைகள் பாதுகாப்பின் இரண்டாம் நிலை சாதனமே.

சீட் பெல்ட் அணியாவிட்டால் காற்றுப் பைகளால் உங்களை பாதுகாக்க முடியாது.

இன்னும் சொல்லப்போனால் சீட் பெல்ட் அணியாதிருக்கும்போது காற்றுப் பைகள் பாதிப்பை அதிகப்படுத்தலாம்.

 

காரை ஓட்டுபவருக்கும் ஸ்டீயரிங்கிற்கும் இடையே, குறைந்தது 300மிமீ  (1 அடி) இடைவெளி இருக்குமாறு அமர்ந்து காரை ஓட்ட வேண்டும்.

காரை ஓட்டும் போது ஓட்டுநர் வசதியாக அமர்ந்து (புட்டம் பின்புறம் இருக்கும் வகையில்) ஓட்ட வேண்டும்.

கார்களில் இருக்கைகளின் அமைப்பு பாதுகாப்பிற்கு ஏற்ற வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் இருக்கைகளின் அமைப்பினை மாற்றி அமைக்க வேண்டாம்.

 

கார்களின் பாதுகாப்பிற்காக முன்னாலோ, பின்னாலோ குறுக்கு கம்பிகள், பக்கவாட்டு கம்பிகள் பொருத்தக்கூடாது.

அவை கார்களைப் பாதுகாக்கலாம். ஆனால் பயணிகளைப் பாதிக்கும். ஏனெனில் விபத்துக்களின்போது உண்டாகும் விசையானது பயணிகளை பாதிக்கும் வகையில் அமையும்.

மேலும் கம்பிகள் பொருத்தினால் காற்றுப் பைகள் திறப்பதிலும் சிரமம் ஏற்படும்.

 

காற்றுப் பைகள் ஒருமுறை திறந்துவிட்டால் அவற்றை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும்.

காற்றுப்பைகளை அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் மட்டுமே மாற்ற வேண்டும்.

 

காரை ஓட்டுபவர் மற்றும் சகபயணிகளுக்கு ஹெட்ரெஸ்ட் சரியான நிலையில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று.

ஹெட்ரெஸ்ட் சரியான நிலையில் இல்லையென்றால் விபத்துக்களின்போது சீட் பெல்ட், காற்றுப் பைகள் இருந்தபோதும் கழுத்து உடைய நேரிடும்.

 

விபத்துகளில் வெளியே வரமுடியாதபடி காருக்குள் சிக்கிக் கொண்டால் ஹெட்ரெஸ்ட்டை கழற்றி பின்னால் இருக்கும் கம்பிகளால் ஜன்னலை உடைத்து வெளியேறி விடலாம்.

 

நீண்டதூரப் பயணிகள் மட்டுமே சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதில்லை. சீட் பெல்ட் அணிவதற்கு தூரம் தடையில்லை.

தளர்வான பொருட்களை காரில் வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்துக்களின்போது உண்டாகும் விசையினால் பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

சீட் பெல்ட் அணிவது அவசியமா? என்பதை அறிந்து, மேற்கூறியவைகளை நினைவில் வைத்து சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு வளமான வாழ்வு வாழுங்கள்.

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.