‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்பதை, ‘அலறாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்று தங்கள் வசதிக்கேற்ப மாற்றி அமைத்து வாழ்பவர்கள் எங்கள் அண்டை வீட்டார்.
அவ்வீட்டில் ஐந்து வயது பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. முன் கூறியது போல் அலறுவது, அந்த குழந்தை மட்டுமல்ல; அதனுடைய பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி ஆகியோரும்தான்.
அவர்கள் வீட்டிலிருந்து எழும் உரையாடலின் சத்தம், ஏதோ குழாயடி சண்டை அளவிற்குத் தெரு முழுக்க கேட்கும்.
இக்கட்டுரையில் நான் குறிப்பிட விரும்புவது அக்குடும்பத்தினர் எத்தனை டெசிபெலில் கூச்சலிடுகின்றனர் என்பதைப் பற்றி அல்ல.
அவர்களிடம் நான் கவனித்த மற்றொரு விந்தையான விஷயத்தைப் பற்றியது.
ஒரு மாலை நேரத்தில் அவர்கள் எல்லோரும் வீட்டிற்கு வெளியே இருக்கும் வராண்டாவில் இருக்கின்றனர் என்று அவர்களின் வழக்கமான கூச்சலின் மூலம் கண்டறிந்தேன்.
எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து நின்று பார்த்தால் அவர்கள் வீட்டு வராண்டா தெள்ளத்தெளிவாகத் தெரியும்.
சற்று நேரம் அக்குழந்தையின் விளையாட்டை வேடிக்கை பார்க்கும் போது அதைக் கவனித்தேன்.
குழந்தையின் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள் என்று முன்பே யாரோ சொன்ன ஞாபகம். நல்ல வசதியான குடும்பத்தினர். ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்திருப்பவர்கள்.
அக்குழந்தையின் தாயார் நைட்டி அணிந்து அதற்கு மேல் துப்பட்டாவுடன் காட்சியளித்தார்.
அதே சமயம், அவரது மாமனாரோ ஒரு பழைய டிராயரும், தாராளமான ஓட்டைகள் நிறைந்த முண்டாபனியனும் அணிந்திருந்தார்.
நைட்டி எத்தனை சவுகரியமான உடை; சற்றும் இறுக்கிப்பிடிகாத அந்த உடையில் துப்பட்டாவிற்கு வேலையில்லை.
தன்னுடைய மனைவியின் ஆடை விஷயத்தில் இத்தனை ஜாக்கிரதையாக இருக்கும் கணவன், தன் தந்தையின் உடை விஷயத்தில், அதுவும் உள்ளாடை மட்டும் அணிந்து, வயதில் பெரியவர் என்ற முறையில் நல்ல எடுத்துக்காட்டாக இல்லாதவரை கண்டு கொள்ளாமல் விடுவது ஏன்?
ஒரு நாளின் பெரும் பகுதி நேரத்தை, அரைகுறை ஆடையுடன் தெருவில் உலாவருகிறோமே என்ற பிரக்ஞை இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பார்.
இதைப் படித்த மகனும் மருமகளும் பொருட்படுத்தாமல் இருப்பது ஆச்சரியமா அல்லது அலட்சியத்தின் உச்ச கட்டமா? இவ்வாறு நிகழ்வது இவ்வீட்டில் மட்டுமல்ல; பல வீடுகளிலும் தான்.
நாகரீகமான தோற்றத்துடன், பார்ப்பவர்களின் மனதில் நல்ல மரியாதை வரவழைக்கும் விதத்தில் நாம் உடுத்தும் ஆடை இருப்பது அவசியமாகும். இதில் ஆண் – பெண் என்ற பாகுபாட்டிற்கு இடமில்லை.
நாகரீகம் என்பது ‘மாடர்ன்’ உடைகள் அணிவது என்று பொருளல்ல. சாதாரண வேஷ்டியும் சேலையும் நல்ல முறையில் உடுத்தினால் அதுவே போதுமானது.
சமீபத்தில் ஒரு பிரபல வாரப் பத்திரிக்கையில் வெளிவந்த சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. கதையின் நாயகன் மெக்கானிக்காக பணி புரிபவன். இருப்பினும் இதை விட முக்கியமான ‘சமூக சேவை’ ஒன்றில் ஈடுபட்டிருந்தான்.
வேறொன்றுமில்லை, சாலையில் அல்லது பொதுவெளியில் காணும் பெண்களைக் குறிப்பாக, அவர்களது உடைகளைக் குறித்து மிகத் தரக்குறைவான வார்த்தைகளில், சம்பந்தப்பட்ட பெண்களிடமே உரையாடுவது.
காரணம் கேட்டால் இம்மாதிரி உடை அணிவதால் தான் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுமாம்.
அதிலிருந்து அவர்களைக் காப்பாற்றவே நம் கதாநாயகன் ‘நாவடக்கம்’ என்ற ஒன்றை மறந்து, வார்த்தைகளால் சித்திரவதை செய்து கொண்டிருப்பான்.
அத்தகையவனை சுற்றார் அனைவரும் போற்றி புகழ் பாடும் விதமாகக் கதை நிறைவடையும்.
இக்கதையைப் படித்து முடித்தவுடன், இருபத்தியோராவது நூற்றாண்டில் தான் இருக்கிறோமா என்று சந்தேகம் எழுந்ததால், தயங்கியபடி அவ்விதழ் வெளியான வருடத்தைப் பார்த்தேன். 2021!
இவ்உலகில் எந்த ஒரு உயிரும் மற்றொரு உயிரைத் துன்புறுத்த உரிமை கிடையாது.
செயலால் மட்டுமின்றி சொற்களாலும் ஒருவரைக் காயப்படுத்த அதிகாரம் அந்த கதாநாயகனுக்கு அக்கதாசிரியர் கொடுத்திருக்கக் கூடாது.
‘தற்கொலை செய்ய முற்பட்டால், கொன்று விடுவேன்’ என்று அர்த்தமில்லாமல் கூறுவது போல் இருந்தது, அக்கதாநாயகனின் செயல்.
அவனுக்கு ஒத்து ஊதுவதற்காகவே பல கதாபாத்திரங்கள் கூடவே இருந்தனர் அக்கதையில்.
இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், கதாநாயகனின் விஷச் சொற்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அணிந்திருந்த உடை, நம் வீட்டில் நம் சகோதரிகள் அணியும் சாதாரண டி-ஷர்ட்டும் குர்த்தியுமே.
பஞ்சவடியில் தங்களது கடைசி வருட வனவாசத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர் ஸ்ரீராமன், சீதாதேவி மற்றும் லட்சுமணன் ஆகிய மூவரும்.
வனவாசம் மேற்கொள்பவர்களின் உடை காவி நிறத்தில் தான் பெரும்பாலான நேரங்களில் இருக்கும். அதில் எந்தவொரு அலங்காரமோ ஆடம்பரமோ இருக்கவே இருக்காது.
ஒருவேளை அப்படியிருந்தால், அதற்குப் பெயர் வனவாசம் இல்லை. அப்படிப்பட்ட சாதாரண காவி உடையைத் தான் சீதையும் அணிந்திருந்தாள்.
பெண்ணென்றாலும் வனவாசத்தின் போது ஒப்பனை செய்து கொள்ளக்கூடாது. ஜனகராஜனின் புதல்வி மற்றும் தசரத ராமனின் மனைவி என்றாலும், பஞ்சவடியில் அயோத்தி இளவரசர்களுடன் வசித்தது சாதாரண பெண்ணாகத்தான்.
இவ்வாறான சாதாரண பெண்ணின் அழகில் மதிமயங்கி, வேறொருவருடைய மனைவி என்ற நினைவைப் புறக்கணித்து பலவந்தமாக அவளைக் கடத்திக் கொண்டு சென்றான் இராவணன். இக்கதை எல்லோரும் அறிந்ததே.
இக்கட்டுரையில் நான் உணர்த்த நினைப்பது இராமாயணம் உண்மை என்றோ அல்லது முதலில் குறிப்பிட்டிருந்த குடும்பத்தினரின் அலறலைப் பற்றியதோ இல்லை. பெண்ணிற்கு அவள் உடை விஷயத்தில் ஏற்படும் சாவல்களைப் பற்றியதே.
முன் சொன்ன வார்த்தை ஜால கதாநாயகனின் கருத்துப்படிப் பார்த்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதற்கு முழு முதற்காரணம் அவள் அணியும் உடையே என்பது.
இதே கருத்துடன் என்னுடன் மறுபடியும் இராமாயணத்திற்கு வாருங்கள். அப்போது பஞ்சவடியில் சீதை அணிந்திருந்த உடையைச் சற்று ஞாபகப்படுத்தி பாருங்களேன்.
மாற்றான் மனைவியைக் கவர்ந்து செல்ல அவளின் உடையா காரணமாக இருந்தது?
அதே இராவணனின் தங்கையான சூர்ப்பனகை, இராமனின் மனதைக் கவர ஒப்பனை செய்துகொண்டு, ஆடம்பரமாகவும் கவர்ச்சியாகவும் உடையணிந்து இராமனின் முன் தோன்றினாள்.
இருப்பினும் அவளது உடையோ ஒப்பனையோ இராமனைக் கவரவில்லை. ஏகபத்தினி விரதன் என்பதையும் தாண்டி அவன் கண்களிலும் மனதிலும் வீற்றிருந்த தூய்மையும் கண்ணியமான ஆண்மையும் தான் அதற்கு காரணம். அப்படிப்பட்ட தூய்மை இராவணனிடம் துளியும் இல்லை.
பெண்களின் உடை தான் அவர்களுக்குப் பகைவனாய் விளங்குகிறது என்றால், இராவணன் காவியுடையிலிருந்த சீதையைக் கடத்தி இருக்கக் கூடாது; சூர்ப்பனகையைத் தனது இரண்டாவது மனைவியாக இராமன் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
அல்லது, குறைந்தபட்சம் சீதையானவள் ஒரு மினி ஸ்கர்ட்டோ, க்ராப் டாப்போ பஞ்சவடியில் அணிந்திருந்தாள் என்றால், அவள் கடத்தப்பட்டதற்கான காரணம் வலுவாக இருந்திருக்கும். நானும் இந்த கட்டுரை எழுதியிருக்க மாட்டேன்.
நாள்தோறும் செய்தித்தாள்களில் ‘ஐந்து வயது சிறுமி பள்ளி சீருடையில் பாலியல் பலாத்காரம்’ என்ற செய்தி அறவே இருந்திருக்காது, உடை ஒரு முக்கியமான காரணமாக இருப்பின்.
ஒரு பெண் வெளியே செல்லும் முன் ஆயிரம் முன்னெச்சரிக்கைகளும் அறிவுரைகளும் கூறும் தாய்மார்கள், ஏன் தங்களது ஆண் பிள்ளைகளிடம் ஒருமுறையேனும் ‘அனைத்து பெண்களையும் மரியாதையுடன் நடத்து’ என்று சொல்லத் தவறுகின்றனர்?
எந்தப் பெண்ணையாவது பார்த்தால், பார்த்தவுடனே அவளது உடையினால் தவறான எண்ணம் மனதில் எழுந்தால், கண்களையும் மனதையும் துடைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பொருள்.
ஹ்ரிஷிகேஷ்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!