சீத்தாப்பழம் என்றவுடன் இனிப்புக் கலந்த ஐஸ்கிரீம் போன்ற சுவையான சதைப்பகுதியை மீண்டும் ருசிக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலோர்க்கு ஏற்படும்.
சீத்தாப்பழம் வெளிப்புறத்தில் கடினமான தோல் பகுதியையும், உட்புறத்தில் ஒவ்வொரு விதையைச் சுற்றிலும் மென்மையான கிரீம் போன்ற வழுவழுப்புடன் கூடிய இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டுள்ளது.
விதையானது பளபளப்பான ஆழமான பழுப்பு நிறத்தில் காணப்படும். இப்பழம் தனக்கான தனிப்பட்ட சுவையும் மணமும் உடையது.
ஜூலை முதல் நவம்பர் வரை உள்ள காலத்தில் இப்பழம் அதிகம் கிடைக்கிறது.
இப்பழம் திரள் கனி வகையைச் சார்ந்தது. பல தனிப்பூக்கள் சேர்ந்து இப்பழத்தினை உருவாக்குகின்றன. இப்பழம் பெரிய புதர்வகைச் சேர்ந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
இத்தாவரத்தின் பழங்கள், பட்டைகள், இலைகள், கொட்டைகள் மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன.
இத்தாவரத்தின் தாயகம் மத்திய அமெரிக்காவிலுள்ள வெப்ப மண்டல மழைக்காடுகள் ஆகும். அங்கிருந்து ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய உலகின் மற்ற பகுதிகளும் பரவியது.
பொதுவாக இப்பழங்கள் உருண்டையாகவோ, கோள வடிவிலோ, இதய வடிவிலோ அல்லது ஒழுங்கற்ற வடிவிலோ காணப்படும். வெளிப்புறத் தோலானது பச்சை, மஞ்சள், பழுப்பு நிறங்களில் காணப்படலாம்.
உள்ளே சதைப்பகுதி பளபளபான வெள்ளை நிறத்தில் காணப்படும். இப்பழமானது அப்படியேவோ அல்லது ஐஸ்கிரீம், மற்றப் பழங்களுடன் சேர்த்து கலவையாகவோ உண்ணப்படுகிறது.
பால் சார்ந்த பொருட்களினால் ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு சீத்தாப்பழம் ஒரு வர பிரசாதமாகும். ஏனெனில் பாலில் உள்ள சத்துகள் இப்பழத்தில் உள்ளன.
சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்
இப்பழத்தில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவையும், பைரிடாக்சின், ரிபோஃளோவின், தயமின், நியாசின், பேண்டொதெனிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், எரிசக்தி, நார்சத்து, கனிமச் சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ் ஆகியவையும் காணப்படுகின்றன.
மருத்துவப் பண்புகள்
கண்கள் சருமம் மற்றும் கேசப் பாதுகாப்பிற்கு
கண்கள் பார்வையைப் பலப்படுத்தும் விட்டமின்களான விட்டமின் ஏ மற்றும் சி இப்பழத்தில் உள்ளன. மேலும் இப்பழத்தில் காணப்படும் பி2 விட்டமின்னான ரிபோஃபுளோவின் ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து கண்களை நோயிலிருந்து பாதுகாக்கிறது.
எனவே இயற்கையான வழியில் கண்களைப் பாதுகாக்க சீத்தாப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பழம் தோலின் ஈரப்பதத்தைப் பாதுகாப்பதுடன் முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களைத் தடை செய்கிறது.
இப்பழக்கூழினை பருக்களின் மீது தடவ அவை மறையும்.
இப்பழத்தில் விட்டமின் ஏ கேசத்தை ஆரோக்கியமாக்குவதுடன் கேசத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.
செரிமானத்திறனை அதிகரிக்க
இப்பழத்தில் காணப்படும் காப்பர் மற்றும் நார்சத்துகள் செரிமானப் பாதையை பராமரிப்பதுடன் செரிமானத் திறனை அதிகரிக்கின்றன. இப்பழத்தில் காணப்படும் மெக்னீசியம் செரிமானமின்மையை சரி செய்வதுடன் மலச்சிக்கலையும் நீக்குகிறது.
இப்பழத்தின் சதைப்பகுதியை வெயிலில் காய வைத்து தூளாக்கி நீருடன் கலந்து பருகிவர வயிற்றுப் போக்கு நீங்கும்.
இதயம் பலப்பட
இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் மற்றம் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு இதய தசையினை தளர்வு செய்து இதய நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
இப்பழத்தில் அதிக அளவு காணப்படும் நியாசின் மற்றும் நார்சத்து இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுப்பாட்டில் வைக்கிறது. அத்தோடு இப்பழத்தில் உள்ள விட்டமின் பி6 (பைரிடாக்சின்) இதய நோயிலிருந்து பாதுகாப்பளிப்பதோடு இதயத்தைப் பலப்படுத்துகிறது.
சோர்வினை நீக்க
உடல் சோர்வு மற்றும் பலவீனத்திற்கு இப்பழம் சிறந்த மருந்தாகும். இப்பழமானது உடனடி சக்தியினை வழங்கி உடல் சோர்வினை நீக்குகிறது. இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் தசைகளுக்கு இரத்தத்தினை வழங்கி அவற்றை வலுப்பெறச் செய்து சோர்வினை நீக்குகிறது.
கீல்வாதம் மற்றும் வாத நோயினைக் குணமாக்க
இப்பழத்தில் அதிகளவு காணப்படும் மெக்னீசியம் உடலின் நீர்ச்சத்தினை சமநிலைப்படுததுவதோடு மூட்டுகளில் உள்ள அமிலத் தன்மையை நீக்கி கீல்வாதம் மற்றும் வாத நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
அடிக்கடி இப்பழத்தினை உட்கொள்வதால் தசை நார்கள் வலுப்பெறுகின்றன. மேலும் இப்பழத்தில் காணப்படும் கால்சியம் எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
கர்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கு
இப்பழமானது கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி, நரம்புத் தொகுதிகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொடுக்கிறது. இப்பழம் கருச்சிதைவினைத் தடுப்பதோடு எளிதான மகப்பேறுவிற்கு வழி செய்கிறது.
மேலும் இப்பழம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வு, உணர்வின்மை ஆகியவற்றை சரி செய்கிறது. கர்ப்ப காலத்தில் சீத்தாப் பழத்தினை அடிக்கடி உண்பதால் அது தாய்பால் சுரப்பினை அதிகரிக்கிறது.
சீத்தாப் பழத் தாவரத்தின் பட்டை மூலிகை மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பற்கள் மற்றும் ஈறுகள் சிகிச்சையில் இத்தாவரப் பட்டை பயன்படுத்தப்படுகிறது.
சீத்தாப் பழத்தின் விதைகளை காயவைத்து பொடியாக்கி தலைத் தேய்த்து குளித்தால் பேன் தொந்தரவு குறைவதோடு கேசம் உதிர்வதும் தவிர்க்கப்படும்.
சீத்தாப் பழத்தினை தேர்ந்தெடுத்தல் மற்றும் பாதுகாக்கும் முறை
இப்பழத்தினை வாங்கும்போது தடித்த தண்டுடன் பிணைக்கப்பட்ட வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள புதிதான விளைந்த காயாகவோ அல்லது லேசாக பழுத்த பழமாகவோ இருக்கலாம்.
அறை வெப்பநிலையில் விளைந்த காய்கள் ஓரிரு நாட்களில் பழுத்துவிடும்.
பழுத்த பழமாக வாங்க நேரிட்டால் மென்மையான, இனிப்பு வாசனையுடன் கூடியதாக இருக்க வேண்டும். இப்பழமானது பழுத்து விட்டால் அதன் வாசனையை சிறிது தொலைவிலேயே உணரலாம்.
சீத்தாப் பழத்தினை அப்படியே குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. பழத்தினைக் கூழ் செய்து குளிர்பதனப் பெட்டியில் பாதுகாத்து சில வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.
சீத்தாப் பழத்தினைப் பயன்படுத்தும்போது நடுவில் உள்ள தண்டினை மெதுவாக வெளியே இழுத்துவிட்டு சதையினை மட்டும் உண்ண வேண்டும்.
சீத்தாப்பழ விதைகளை உண்ணக் கூடாது. ஏனெனில் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஆல்காய்டுகள் உள்ளன. தற்செயலாக பழத்தினை உண்ணும்போது விதைகளை விழுங்க நேர்ந்தால் அவை செரிக்காமல் வெளியேறிவிடும்.
இது அதிக அளவு எரிசக்தியினைப் பெற்றிருப்பதால் அதிக உடல் எடை உள்ளவர்கள் இதனை அடிக்கடி உண்ணக்கூடாது.
விட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரதங்கள், எரிசக்தி, நார்சத்து உடைய சரிவிகித உணவான சீத்தாப் பழத்தினை உண்டு மகிழ்சியான வாழ்வு வாழ்வோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!