சீமையகத்தி முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தோல் நோய்கள், கழிச்சலைக் கட்டுப்படுத்தும்; படர் தாமரையையும் குணமாக்கும்.
சீமையகத்தி 2 மீ. வரை உயரமான பெருஞ்செடி வகையைச் சார்ந்தது. இலைகள், கூட்டியலையானவை, நீள்வட்டமான அல்லது முட்டை வடிவானவை.
பூக்கள் நுனியில் கொத்தாக அமைந்தவை, பெரியவை, பொன்மஞ்சள், செம்மஞ்சள் நிறமானவை.
காய்கள், பச்சையானவை, முதிர்ந்த கனிகள், கருப்பானவை. நீளவாக்கில் வெடிப்பவை. விதைகள், எண்ணற்றவை.
இந்தியா முழுவதும், சமவெளிப் பகுதிகளில் இயற்கையாக வளர்கின்றது. தமிழகத்தில், சமவெளிகள், கடற்கரையோரங்கள், பயிராகும் நிலங்களுக்கு அருகில் வளர்கின்றன.
மேலும் இதன் மருத்துவ உபயோகங்களுக்காக, தோட்டங்களில் பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன. வண்டுக்கொல்லி, மலைத்தகரை, பேயகத்தி, வண்டுக்கடியிலை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
படர் தாமரை குணமாக சீமையகத்தி வேரை, எலுமிச்சம்பழச் சாறுவிட்டு அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.