சீரகம் – மருத்துவ பயன்கள்

சீரகம் கார்ப்பு, இனிப்புச் சுவைகளையும், குளிர்ச்சித் தன்மையையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகமாக்கும்; உடல் பலத்தைக் கூட்டும், பசியை அதிகமாக்கும்; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; வயிற்றுவலி, வாய்நோய், இரைப்பு போன்றவற்றைக் குணமாக்கும். இதன் செரிமானத்திறன் மற்றும் மணம் கருதி உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகின்றது. சீர் + அகம் – உள் உறுப்புகளின் புண்களை, நோய்களை குணமாக்கும் பண்பு கொண்டது. இதுவே பெயர்க் காரணம்.

சீரகம் சிறுசெடி. காய்ந்த விதைகளே சீரகம் எனப்படுபவை. இவை, உணவு உபயோகத்திலும், மருத்துவத்திலும் பெருமளவு பயன்படுபவை. பித்தநாசினி, போசனகுடோரி, மேத்தியம் ஆகிய பெயர்களும் உண்டு. தமிழகத்தில், மேட்டுப்பாங்கான நிலங்கள், மலைப்பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றது.

சீரகத்தைக் காயவைத்து, உலர்த்தி, தூள் செய்து  கொண்டு, ஒரு கிராம் அளவாக, தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர கழிச்சல் கட்டுப்படும்.

சீரகத்தை, சம அளவு நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி வீதம், காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர உதடு வெடிப்பு, உதட்டுப்புண் குணமாகும்.

சீரகத்தை, பொன் வறுவலாக வறுத்து, தூள் செய்து கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு சாத்துடன் சேர்த்து, தேவையான அளவில் நெய் சேர்த்துப் பிசைந்து, சாப்பிட்டுவர பசியின்மை, வயிற்றுப் பொருமல், சுவையின்மை தீரும்.

Comments are closed.