சீரக சாதம் / சீரா ரைஸ் செய்வது எப்படி?

சீரக சாதம் / சீரா ரைஸ்

சீரக சாதம் எளிதில் செய்யக்கூடிய எளிமையான கலவை சாதம் ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து அனுப்பலாம்.

சீரகம் உடலின் வெப்பத்தை சீராக வைக்க உதவுகிறது. அத்தோடு செரிமானமும் நன்கு நடைபெற உதவுகிறது. எனவே இச்சாதத்தை அடிக்கடி செய்து உண்ணலாம்.

சீரக சாதம் தயார் செய்ய சாதாரண சாப்பாட்டு அரிசியையோ, சம்பா பிரியாணி அரிசியையோ அல்லது பாசுமதி அரிசியையோ பயன்படுத்தலாம்.

நான் சம்பா பிரியாணி அரிசியைப் பயன்படுத்தி சீரா ரைஸ் செய்துள்ளேன்.

எந்த அரிசியை உபயோகிக்கிறோமோ அதற்கு தகுந்தவாறு அரியை ஊற வைக்கும் நேரத்தையும், தண்ணீர் அளவையும் பயன்படுத்தவும்.

இனி சுவையான சீரக சாதம் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சம்பா பிரியாணி அரிசி – 1 ஆழாக்கு (சுமார் 200 கிராம்)

சீரகம் – 1 ஸ்பூன் (10 கிராம் தோராயமாக)

மிளகு – 10 எண்ணம்

பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

கறிவேப்பிலை – 3 கீற்று

கொத்தமல்லி இலை – 1 கொத்து

முந்திரிப் பருப்பு – 5 எண்ணம் (முழு அளவு)

இஞ்சி – முக்கால் சுண்டுவிரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நெய் – 2 ஸ்பூன்

பட்டை – சுண்டு விரல் அளவு

பிரிஞ்சி இலை – 1 எண்ணம்

கிராம்பு – 2 எண்ணம்

ஏலக்காய் – 2 எண்ணம்

ஸ்டார் அன்னாசிப்பூ – 1 எண்ணம்

செய்முறை

முதலில் சம்பா பிரியாணி அரிசியை அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை ஊற வைப்பதால் சீக்கிரத்தில் வேகும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை அலசி நேராக கீறிக் கொள்ளவும்.

இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

மல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து உருகியதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, ஸ்டார் அன்னாசிப்பூ, சீரகம், மிளகு, முந்திரிப் பருப்பு சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும் போது

அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயத்தைச் சேர்த்ததும்

பெரிய வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் 2 ஆழாக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தேவையான தண்ணீர் சேர்த்ததும்

தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த சம்பா பிரியாணி அரிசி மற்றும் கொத்தமல்லி இலையைச் சேர்த்து கிளறி மூடி விடவும்.

அரிசியைச் சேர்த்ததும்
கொத்தமல்லி இலையைச் சேர்த்ததும்

குக்கரில் ஒரு விசில் வந்ததும் அடுப்பினை அணைத்து விடவும். சில நேரங்களில் குக்கரில் விசில் வருவதற்கு முன்பே தண்ணீர் குறைந்து அடி பிடித்து விடும்.

ஆதலால் குக்கரை மூடியதும் அதன் கைபிடியை கையால் அழுத்திப் பிடித்தால் தண்ணீர் கொதிப்பதை உணரலாம்.

3 நிமிட இடைவெளியில் மீண்டும் சோதித்துப் பார்க்கும்போது தண்ணீர் கொதிப்பது நின்றிருப்பதாக உணர்ந்தால் அடுப்பினை அணைத்து விடலாம்.

குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து சாதத்தை ஒருசேரக் கிளறி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

சுவையான சீரக சாதம் தயார்.

குக்கரைத் திறந்ததும்

இதனுடன் கத்தரிக்காய் கிரேவி, தேங்காய் சட்னி, வடகம் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பெரிய வெங்காயம் சேர்க்காமல் சாதம் செய்து, வெங்காயத்தை தனியாக நெய்யில் சிவக்க வறுத்து பின்னர் சாதத்தில் சேர்த்து கிளறலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.