சீரக புலாவ் என்பது அருமையான கலவை சாத வகை ஆகும். இதனை விருந்தினர்களின் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.
சீரக புலாவ்வை எளிதில் சுவையாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி – 200 கிராம் (ஒரு பங்கு)
சீரகம் – 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 எண்ணம்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
இஞ்சி – சுண்டு விரலில் முக்கால் பாகம்
வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (நடுத்தர அளவு)
பச்சை பட்டாணி – 50 கிராம்
கேரட் – 50 கிராம்
தண்ணீர் – அரிசியைப் போல் இரு பங்கு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – சுண்டு விரல் அளவு
கிராம்பு – 1 எண்ணம்
நட்சத்திரப் பூ – 1 எண்ணம்
ஏலக்காய் – 1 எண்ணம்
சீரக புலாவ் செய்முறை
முதலில் அரிசியைக் களைந்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கேரட்டை சிறுசதுரத் துண்டுகளாக வெட்டவும்.
பச்சை பட்டாணியை தோல் உரித்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
குக்கரில் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதனுடன் பட்டை, கிராம்பு, நட்சத்திரப் பூ, ஏலக்காய் சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதனுடன் சீரகம் சேர்க்கவும்.
சீரகம் பொரிந்ததும் நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
½ நிமிடம் கழித்து இஞ்சி, பூண்டு விழுதி சேர்த்து ஒரே கிளறவும்.
அதனுடன் நறுக்கிய கேரட், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் தேவையான தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் அதனுடன் ஊற வைத்த அரிசி, தேவையான உப்பு, நெய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரே சேரக் கிளறி குக்கரை மூடி விடவும்.
குக்கரை மிதமான தீயில் 1 விசில் வரை அல்லது சிம்மில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கி சாதக்கலவையுடன் ஒருசேரக் கிளறவும்.
சுவையான சீரக புலாவ் தயார்.
குறிப்பு
அரிசி ஊற வைத்த தண்ணீரை வடித்து அதனை புலாவிற்கு பயன்படுத்தவும். இதனால் அரிசியின் சத்துக்கள் வீணாகாது.