சீவல் மாலை நேரங்களில் சாப்பிடக் கூடிய சிற்றுண்டிகளில் ஒன்று. இதனை ரிப்பன் பக்கோடா என்றும் அழைப்பர்.
வீட்டில் எளிய முறையில் சீவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 400 கிராம்
பொரிகடலை – 200 கிராம்
மிளகாய் வற்றல் – 8 எண்ணம்
வெள்ளைப் பூண்டு – 3 பல் (பெரியது)
பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்
வெண்ணெய் – 25 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
இட்லி அரிசியை சுமார் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். இட்லி அரிசியை கிரைண்டரில் போட்டு ஆட்டவும்.
அரிசியை கிரைண்டரில் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து மிளகாய் வற்றலை சிறிது சிறிதுதாகக் கிள்ளி அரிசியில் சேர்த்து ஆட்டவும்.
பின் வெள்ளைப் பூண்டு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை அரிசியில் சேர்த்து ஆட்டவும்.
அரிசி மாவுக் கலவையினை மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
பொரிகடலையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பின் சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
சலித்த பொரிகடலை மாவு, வெண்ணெய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை அரிசி மாவுடன் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
முறுக்கு உழக்கில் சீவலிற்கான அச்சினைப் போட்டு மாவினை அடைத்துக் கொள்ளவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
எண்ணெய் காய்ந்ததும் மாவினை சீவல்களாகப் பிழிந்து விடவும். ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி விடவும்.
சீவலில் எண்ணெய் குமிழி அடங்கியதும் சீவலை எடுத்து விடவும். சுவையான சீவல் தயார்.
நன்கு ஆறியதும் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும். இதனை ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். இச்சிற்றுண்டியை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து உண்பர்.
குறிப்பு
வாணலியில் எண்ணெய் காய்ந்து வரும்போது சிறிதளவு புளியைச் சேர்க்கவும். இதனால் எண்ணெய் பொங்குவது தவிர்க்கப்படும்.
–ஜான்சிராணி வேலாயுதம்.
மறுமொழி இடவும்