‘எனக்கு அப்பாவும் இல்லை. அம்மாவும் இல்லை. இரண்டு பேரையும் நான் சிறு வயதிலேயே இழந்து விட்டேன்.
பள்ளிக்கூடம் போனால் அங்கு சோறு கிடைக்கும் என்று பள்ளிக்கூடம் சென்ற நான் இன்று, அமெரிக்காவில் 130 அமெரிக்கர்களை வைத்து வேலை வாங்கும் அளவுக்கு பெரிய தொழிலதிபராக உயர்ந்து இருக்கிறேன்.
கர்மவீரர் காமராஜர் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட மதிய உணவும் இலவசக் கல்வியும் இல்லாது போயிருந்தால், நான் இன்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அமிஞ்சிப் பாளையத்தில் கோவணம் கட்டிக்கொண்டு ஆடு மாடுதான் மேய்த்துக் கொண்டு இருந்திருப்பேன்’
என்று சொன்ன உயர்திரு S.A. பழனியப்பன் அவர்களை மேற்கோள் காட்டி “கற்பதனால் என்ன பயன்?” எனும் தலைப்பில் 26.11.2022 அன்று விருதுநகர் புத்தகத் திருவிழாவில் சிறப்புரை வழங்கினார் ஐயா சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள்.
அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களை தேர்வு செய்தார்கள் என்பதனை “போதிதர்மர்” அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்று சொல்லி விளக்கினார்.
போதிதர்மர் சீனாவில் தனக்குத் தெரிந்த யுக்திகளை வித்தைகளை கற்றுக் கொடுக்க ஒரு நல்ல மாணவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்த ஒரு கலைக்கூடத்திற்கு சென்றார்.
அங்கே சென்ற அவர் அங்கிருந்த பிரதானப் பகுதியில் அங்கு வரும் அனைவர் கண்ணிலும்படும் ஓர் இடத்தில் இருந்த சுவரை நோக்கி அமைதியாக அமர்ந்து கொண்டார்.
அவரை நிறைய பேர் பார்த்தபடியே கடந்து சென்றார்கள்.
சிலர் ‘இவர் ஏன் இவ்வாறு சுவர் நோக்கிப் பார்த்த வண்ணம் அமைதியாக இருக்கிறார்? இவரிடம் ஏதோ ஓரு சக்தி இருக்கிறது’ என்று நினைத்த வண்ணம் அவரிடம் எதுவும் கேட்காமல் அவரைக் கடந்து சென்றார்கள்.
ஒரு சிலர் மட்டும் அவரிடம் “ஐயா! தாங்கள் ஏன் இவ்வாறு சுவர் நோக்கி அமர்ந்து இருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.
அவர் பதிலேதும் கூறாமல் அமைதியாகவே இருந்தது கண்டு அவர்களும் கிளம்பிச் சென்றனர்.
ஒரே ஒரு மாணவன் மட்டும் “தாங்கள் எதற்காக இங்கு இவ்வாறு அமர்ந்து இருக்கின்றீர்கள்? என்று தெரியாமல் நான் இந்த இடம் விட்டு நகர மாட்டேன்” என்று அடம் பிடித்து அங்கேயே காத்திருக்க ஆரம்பித்து விட்டான்.
போதிதர்மரும் அசைவதாக இல்லை. அவர் சுவர் நோக்கிய வண்ணம் அமைதியாக அப்படியே அமர்ந்திருந்தார்.
அந்த மாணவன் ஐயா “நீங்கள் இப்போது காரணம் சொல்லாவிட்டால் நான் என் கைகளை வெட்டிக் கொள்வேன்” என்று கூறினான்.
அப்போதும் போதிதர்மர் அசைந்து கொடுப்பதாக இல்லை என்று தெரிந்ததும் அந்த மாணவன் தனது கையினை வெட்டிக் கொண்டான்.
ரத்தம் சொட்டச் சொட்ட அவன் போதிதருமரிடம் “இப்போதாவது சொல்லுங்கள். ஏன் இவ்வாறு அமர்ந்து இருக்கின்றீர்கள்?” என்று கேட்டான்.
அப்போதுதான் அவர் கூறினார் “உன்னைப் போல மனத்திட்பம் மிக்க ஓரு மாணவனைப் பெறுவதற்குத்தான்” என்று கூறி அவனை அரவணைத்து மாணவனாக ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவருக்குத் தெரிந்த மூலிகை வைத்தியம் மூலம் மாணவனின் கைகளை மீண்டும் ஓட்டச் செய்தார். தீவிர தேடல் வேட்கை உள்ளவரே சிறந்த மாணவரவார்.
மேலும் அவர் கூறிய ‘ஒரு நிர்வாகி எவ்வாறு ஆசிரியரை தேர்வு செய்தார்?’ என்ற விஷயம் சுவாரசியமானது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலில் கல்லூரியாகத்தான் தொடங்கப்பட்டது.
அந்த சமயத்தில் ராஜா சர் M.A. முத்தையா செட்டியார் அவர்கள் கல்லூரியின் தமிழ்த்துறை சிறப்பாக அமைய வேண்டும் என தனிக்கவனம் செலுத்தினார்.
துறையின் தலைவராக சிறந்த விற்பன்னர் ஒருவரை நியமிக்க வேண்டி தன் நண்பர்களிடம் அது குறித்து விவாதித்தார்.
அந்தக் காலக்கட்டத்தில் இலங்கையில் இருந்த சுவாமி ஸ்ரீ விபூலானந்த அடிகள்தான் சிறந்த தமிழ் வித்தகர் என நண்பர்கள் அனைவரும் கூறினார்கள். செட்டியாரும் அடிகளாரைத் தேடி இலங்கை சென்றார்.
அங்கே ஸ்வாமி ஸ்ரீ விபூலானந்த அடிகளைக் கண்ட செட்டியார் அவர் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார்.
அடிகளார் செட்டியாரை “எழுந்திரியுங்கள் ஐயா! தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
செட்டியார் தான் வந்த விவரத்தைக் கூறினார். அடிகளார் துறவறம் தரித்த தம்மால் கல்லூரி பேராசிரியராக வேலை செய்ய இயலாது என மறுத்தார்.
ஆனால் செட்டியார் விடவில்லை.
‘தாங்கள் எங்கள் கல்லூரி பேராசிரியராகி மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க ஒத்துக் கொண்டால்தான் நான் எழுந்திருப்பேன்’ என்று கூறி அடிகளாரின் காலடிகளில் இருந்து எழுந்திரிக்க மறுத்தார்.
அடிகள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் வென்றது செட்டியாரின் மனவலிமைதான்.
மாணவர் தேர்வும் ஆசிரியர் தேர்வும் எவ்வளவு இன்றியமையாதது என்பதனை இரண்டு தரமான சம்பவங்கள் மூலம் எடுத்துரைத்தார் சொல்வேந்தர்.
அடுத்ததாக கல்வியின் நான்கு நிலைகளான கற்றல், கேட்டல், சிந்தித்தல் மற்றும் தெளிதல்‘ குறித்து விவாதித்தார்.
இது குறித்து விவாதிக்கும் போது ஒரு அருமையான சேதியினை அவர் பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு முறையும் இவர் விமானத்தில் பயணிக்கும் போதெல்லாம் அதன் ஜன்னலை உற்று நோக்கியிருக்கிறார்.
அது கோள வடிவத்தில் (ஓவல் வடிவத்தில்) அமைக்கப்பட்டிருக்கும். அனைத்து விமானங்களிலும் அவ்வாறுதான் இருக்கும்.
எந்த விமான ஜன்னலும் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைக்கப்பட்டிருக்காது.
இது ஏனென்றால் விமானம் மேலே பறக்கும் போது அதில் உட்புற அழுத்தம் ஒன்று தோன்றும்.
அந்த அழுத்தம் சதுர மற்றும் செவ்வக வடிவ ஜன்னல் கண்ணாடிகளில் விரிசல் ஏற்படுத்திவிடும்.
விரிசல் விழுந்து கண்ணாடி உடைந்து விட்டால் அது விமானதுக்கு பேராபத்தாய் முடியும்.
ஆனால் கோள வடிவம் அந்த உட்புற அழுத்தத்தை கண்ணாடியின் அனைத்து பகுதிகளுக்கும் சீராக விரவிவிடும். எனவே கண்ணாடியில் விரிசல் ஏற்படாமல் அது பாதுகாப்பாக இருக்கும்.
இது போலத்தான் கர்ப்பப்பையும். குழந்தையினை சுமக்கும் பொழுது அது கோள வடிவத்தில் இருந்துதான் உள்ளே இருக்கும் சிசுவை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
இது இயற்கையின் விந்தை எனக்கூறி கல்வியின் கேட்டல், சிந்தித்தல் மற்றும் தெளிதல் நிலைகளை புதுமையாக விளக்கினார் ஐயா.
அரங்கில் கைத்தட்டல் ஓசை குறைய வெகுநேரம் ஆனது.
மேலும் சொல்வேந்தர் கல்வி என்பது வெறும் தகவல் அல்ல; அது செயல்திறம் பெறும்போதுதான் நமக்குப் பயன்படும் கருவியாக மாறும் என்பதனை தனக்கே உரிய பாணியில் எளிய ஜென் கதைகளின் துணையோடு விளக்கினார்.
சொற்பொழிவுக்கு சொல்வேந்தர் சுகிசிவம் ஐயா அவர்களுக்கு நன்றி. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி.
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!