சுண்டல் மசாலா / குருமா செய்வது எப்படி?

உணவு விடுதிகளில் பூரி, சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளத் தரப்படும் சுண்டல் மசாலா / குருமா எல்லோராலும் விரும்பப்படுகிறது. எளிதாக வீட்டில் உள்ளப் பொருட்களைக் கொண்டு சுவையான சுண்டல் மசாலா / குருமா செய்வது பற்றிப் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

சுண்டல் – 150 கிராம்

பெரிய வெங்காயம் – 1 (பெரியது)

கரம் மசாலா – 1½ ஸ்பூன்

மல்லிப் பொடி – 2½ ஸ்பூன்

சீரகப் பொடி – 1½ ஸ்பூன்

வத்தல் பொடி – 1½ ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

தக்காளி – 1

நல்ல எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க

கடுகு – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

 

செய்முறை

முதலில் சுண்டலை எட்டு முதல் பத்து மணி நேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக்கி மிக்ஸியில் அடித்து நன்கு கூழாக்கிக் கொள்ளவும். ஊற வைத்த சுண்டலை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்த சுண்டலில் மூன்றில் ஒரு பகுதியை எடுத்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்.

 

சுண்டல் மசாலா செய்ய தேவையான பொருட்கள்
சுண்டல் மசாலா செய்ய தேவையான பொருட்கள்

 

வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் நீளவாக்கில் அரிந்து வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.

 

 

பொன்னிறமாக வதங்கிய வெங்காயம்
பொன்னிறமாக வதங்கிய வெங்காயம்

 

குக்கரை அடுப்பில் வைத்து முழுதாக உள்ள சுண்டல், அரைத்து வைத்துள்ள சுண்டல், கூழாக உள்ள தக்காளி, வத்தல் பொடி, சீரகப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசால் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு நீர் சேர்த்து கலந்து குக்கரை மூடி விடவும்.

 

அடுப்பில் வைக்கத் தயார் நிலையில்
அடுப்பில் வைக்கத் தயார் நிலையில்

 

ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான சுண்டல் மசாலா / குருமா தயார்.

 

சுவையான சுண்டல் மசாலா
சுவையான சுண்டல் மசாலா

 

இதனை பூரி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். சுண்டலை மிக்ஸியில் அரைத்துச் சேர்ப்பதால் மசாலா கிரேவி பதத்தில் இருக்கும். இந்த மசாலாவை வெளியூர் பயணத்தின் போது சப்பாத்தியுடன் சேர்த்து எடுத்துச் செல்லலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, வத்தல் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து சுண்டல் மசாலா தயார் செய்யலாம்.

மசாலாவிற்கு நன்கு பழுத்த தக்காளியை தேர்வு செய்யவும்.

சுண்டல் மசாலாவிற்கு கருப்பு நிறச் சுண்டலை தேர்வு செய்யவும்.

விருப்பமுள்ளவர்கள் தேங்காயை விழுதாக்கி மசாலா தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.