சுண்டைக்காய் குழம்பு என்பது பச்சை சுண்டைக்காயைக் கொண்டு செய்வது ஆகும். இது சுண்டைக்காய் புளிக்குழம்பு என்றும் அழைக்கப்படுகிறது.
சுண்டைக்காய் குழம்பு செய்ய பயன்படுத்தும் சுண்டைக்காய் கறி சுண்டைக்காய் என்றழைக்கப்படும் கசக்காத சுண்டைக்காய் ஆகும்.
கறிசுண்டைக்காய் செடி பெரும்பாலும் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது.
இனி சுவையான சுண்டைக்காய் குழம்பு செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
வெள்ளைப் பூண்டு – 15 பற்கள் (மீடியம் சைஸ்)
புளி – சிறிய எலுமிச்சை அளவு
மசால் அரைக்க
தேங்காய் – 1 மூடி (மீடியம் சைஸ்)
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ¾ ஸ்பூன்
சீரகத் தூள் – ¾ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¾ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 8 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
செய்முறை
முதலில் சுண்டக்காயில் காம்பினை நீக்கி தண்ணீரில் அலசி நடுவில் கீறிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினைத் தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
தேங்காய், மல்லித்தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், தேவையான தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் மசாலாக அரைத்துக் கொள்ளவும்.

புளியை அரைமணி நேரத்திற்கு முன்னதாக தேவையான தண்ணீரில் நனைய வைத்து அதிலிருந்து புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின் அதனுடன் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், கீறிய சுண்டைக்காய், தோல் நீக்கி சுத்தம் செய்த வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின் அதனுடன் புளிச்சாறு, அரைத்து வைத்துள்ள மசால், தேவையான உப்பு மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.



மசால் வாடை போக கொதித்து எண்ணெய் பிரிந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்.
இதனை சாதம், இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம். இக்குழம்பிற்கு கசப்பு இல்லாத கறிசுண்டக்காயைப் பயன்படுத்துவதால் சிறுவர்களும் விரும்பி உண்ணுவர்.
கெட்டியாக வைக்கப்பட்ட சுண்டைக்காய் குழம்பினை இரண்டு மூன்று நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மல்லித் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றிற்குப் பதிலாக மசாலா பொடி (1½ ஸ்பூன்) பயன்படுத்தலாம்.
விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய் ஒன்றைக் கீறி சுண்டைக்காயுடன் சேர்த்து வதக்கி இக்குழம்பினைத் தயார் செய்யலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்