சுண்ட வத்தல் பொடி செய்வது எப்படி?

சுண்ட வத்தல் பொடி

சுண்ட வத்தல் பொடி சுவையானது; கூடவே ஆரோக்கியமானது. கசப்பு சுவையுடன் இருக்கும் சுண்ட வற்றலை பொடி செய்து உண்ணும்போது அதனுடைய கசப்பு சுவை அவ்வளவாகத் தெரிவதில்லை.

சுண்ட வத்தல் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிப்பதோடு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே இதனை உணவில் அடிக்கடிச் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆனது.

சுண்ட வத்தல் கடைகளில் பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடைக்கும். நான் இந்த செய்முறையில் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த கறிச்சுண்டக்காயை பறித்து பதப்படுத்திப் பயன்படுத்தி உள்ளேன்.

கறிச்சுண்டக்காயை பறித்து காம்பினை நீக்கி கழுவி. லேசாகக் கீறி உப்பு சேர்த்த மோரில் சேர்த்து, வெயிலில் நன்கு உலர்த்தி சுண்ட வற்றல் தயார் செய்தேன்.

வீட்டில் தயார் செய்த சுண்ட வற்றல் கிடைக்காதவர்கள் கடையில் கிடைக்கும் சுண்ட வற்றலைக் கொண்டு சுண்ட வற்றல் பொடி தயார் செய்யலாம்.

இனி சுவையான சுண்ட வற்றல் பொடி தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சுண்ட வத்தல் – 25 கிராம்

கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

கொத்த மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கைபிடி (உருவியது)

பெருங்காயம் – சிறிதளவு

கடலை எண்ணெய் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சுண்ட வத்தல் பொடி செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பினைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கும்போது

அதே வாணலியில் மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெந்தயம் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும்.

மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெந்தயம் சேர்த்து வறுக்கும்போது

அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலை சேர்த்து வறுக்கும்போது

வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சுண்ட வற்றலைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

சுண்ட வத்தலைச் சேர்த்து வறுக்கும்போது

மிக்ஸியில் வறுத்த கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கொத்தமல்லி விதை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் வறுத்த சுண்ட வத்தல், பெருங்காயப் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

சுண்ட வத்தல், பெருங்காயப் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்ததும்

சுவையான சுண்ட வற்றல் பொடி தயார்.

சுண்ட வத்தல் பொடி

இதனை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்துப் பயன்படுத்தவும்.

சுடுசாதத்துடன் சுண்ட வத்தல் பொடியையும், நெய்யையும் சேர்த்து உண்ணலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ள இதனைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு

சுண்ட வத்தலில் உப்பு சேர்த்திருப்பதால் இதனைத் தயார் செய்யும்போது கவனமாக உப்பு சேர்க்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.