சுதந்திரக் கூச்சல்

‘சுதந்திரக் கூச்சல்’ என்ற கட்டுரை, தமிழா ஆங்கிலமா? என்ற தலைப்பில் ‘செங்கோல்’ வார இதழில், பெருமதிப்பிற்குரிய‌ ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதி ஆகும்.

பயிற்சி மொழி, ‘தமிழா, ஆங்கிலமா?’ என்ற சிக்கலில் உரிமைப் பிரச்சனை ஒன்றும் எழுப்பப்படுகின்றது.

பயிற்சிமொழி எது? என்பதில் இறுதியாக முடிவு எடுக்கும் உரிமை அல்லது பொறுப்பு, பல்கலைக்கழகத்தினுடையதா? அரசாங்கத்தினுடையதா? என்பதே அந்தப் பிரச்சினை.

“பல்கலைக்கழகத்தினுடையதுதான்” என்கின்றனர் பரங்கிமொழிப் பக்தர்கள். அரசாங்கத் தரப்பிலோ, இதுபற்றித் தெளிவான கருத்து இருப்பதாகக் தெரியவில்லை.

காரணம், காற்சட்டைக்குள் எலி புகுந்தாற்போல, அமைச்சரவை, அசெம்பிளி, அரசாங்க அலுவலகம், ஆளுங்கட்சி ஆகியவற்றிலெல்லாம் பரங்கிமொழிப் பக்தர்கள் புகுந்து கொண்டிருப்பதுதான்.

துணிவில்லை

நல்ல வேளையாக, தமிழுக்கு எதிராக வெளிப்படையாகப் பரங்கி மொழிக்குப் பல்லாண்டு பாட அவர்களுக்குத் துணிவில்லை.

அதனாற்றான் கொள்கையளவிலேனும் “பயிற்சி மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று அரசாங்கச் சார்பில் அறிவிக்க முடிந்தது கல்வி அமைச்சரால்!

அத்துடன், அரசாங்க நிர்வாகத்திலுள்ள கல்லூரிகளில் ஒன்றிலேனும் தமிழைப் பயிற்சி மொழியாக்கவும் முடிந்தது.

அதற்குமேல் முன்னேறக் கல்வி அமைச்சருக்கு சந்தர்ப்பம் சதி செய்கிறது போலும்!

அதனாற்றான், “பயிற்சிமொழி எதுவென்பதில் இறுதி முடிவெடுக்கும் உரிமை அரசாங்கத்தினுடையதே” என்று அவர் அடித்துப் பேச இயலாதவராக இருக்கிறார்.

ஏன்? “பல்கலைக்கழக சுதந்திரத்தில் தலையிடுவது எனது கருத்தல்ல” என்று கூடக்கூறி, பரங்கிமொழிப் பக்தர்களின் நல்லெண்ணத்தைப் பெற முயல்கிறார்.

மற்றும், தமிழைப் பயிற்சி மொழியாக்க மறுக்கும் கல்லூரிகளை, அதற்குத் திரைமறைவிலிருந்து துணை புரியும் பல்கலைக் கழகத்தைச் சட்டத்தின் வாயிலாக நிர்ப்பந்திக்கவும் தயங்குகின்றார்.

அமைச்சரின் ஊடற்போர்!

“1963க்குப் பிறகும் பரங்கி மொழியைப் பயிற்சி மொழியாகக் கொள்ளும் கல்லூரிகளுக்கு அரசாங்கம் மான்யம் வழங்காது” என்று அறிவித்துவிட்டதனாலேயே, தனியார் துறைக் கல்லூரிகளை பணிய வைத்து விடமுடியும் என்று நம்புகின்றார் கல்வி அமைச்சர்.

ஆம்: தன்னோடு ஒத்துழைக்க மறுக்கும் பரங்கிமொழிப் பக்தர்களோடு “ஊடற்போர்” நடத்துகிறார் அமைச்சர்.

“சுதந்திரம்” என்பது, மக்களுடைய சொத்து. அதனை அவர்கள், ‘அரசாங்கம்’ என்ற இயந்திரத்தின் மூலம் “சுக வாழ்வாக” மாற்றிக் கொள்ள முயலுகிறார்கள்.

ஆம்: அரசாங்கத்திடமுள்ள அதிகாரங்களெல்லாம் நேராக மக்களிடமிருந்து வந்தவையேயன்றி, வானத்திலிருந்து விழுந்தவையல்ல.

ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களுடைய பிரதிநிதித்துவ அமைப்புக்கள் பாராளு மன்றமும் சட்டசபைகளுமேயன்றி, சர்வகலா சாலைகளல்ல.

இந்த நிலையில், சென்னைப் பல்கலைக் கழகத்திற்குள்ள சுதந்திரம்” மக்களுடைய பிரதிநிதித்துவ அமைப்பான சட்டசபையின் மேலதிகாரத்திற்கு உட்பட்டதாகத்தான் இருக்க முடியும்.

துணை வேந்தர்  மணி முடியல்ல!

ஏன்? சட்டசபையால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம்தான் சென்னைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது.

அமைச்சரவையின் சிபாரிசோடு கவர்னர் பெருமானால் நியமிக்கப்படும் துணைவேந்தர் மூலம் தான் பல்கலைக் கழகம் நிர்வகிக்கப்படுகின்றது.

செனட் சபை உறுப்பினர்கள், துணைவேந்தர் பதவிக்கு மூவர்கொண்ட பட்டியல் ஒன்றைக் கவர்னருக்கு அனுப்புவதும், அவர்களிலே ஒருவரைக் கவர்னர் நியமிப்பதுமே, பல்கலைக்கழகத்தின் மீது கவர்னரோடு கூடிய மாநில ஆட்சிக்கு மேலதிகாரம் உண்டு என்பதைப் புலப்படுத்தும்.

“வைஸ் சான்சிலர்” என்பவர் பல்கலைக்கழகத்தின் மணிமுடியல்ல. அவருக்கு மேல் “புரோ சான்சிலர்” ஆகக் கல்வி அமைச்சரும், அவருக்கும் மேலாக “சான்சிலர்” ஆகக் கவர்னர் பெருமானும் இருக்கின்றனர் என்பதையும் மறந்து விடுவதற்கில்லை.

இவையெல்லாம், கட்டுப்பாடற்ற சுதந்திரம் பல்கலைக் கழகங்களுக்கு இல்லை என்பதைப் புலப்படுத்துகின்றன அல்லவா?

கல்வித்துறையில் பல்கலைக் கழகத்திற்குச் “சுதந்திரம்” உண்டு என்றால் அது நிர்வாக சுதந்திரமாகத்தான் இருக்க முடியும்.

கொள்கையை நிர்ணயிக்கும் சுதந்திரம் அல்லது அதிகாரம் அரசாங்கம் ஒன்றுக்குத்தான் உண்டு. பல்கலைக் கழகத்திற்கு அது இல்லை – இருக்கவும் கூடாது.

சான்றாகக் கல்லூரிகளுக்கான பாடங்கள் தயாரித்தல், தேர்வு நடத்தல் இன்ன பிறவெல்லாம் முற்றிலும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களாகும்.

அந்த விஷயங்களைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகத்திற்குள்ள “சம்பிரதாயச் சுதந்திரம்” கௌரவிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமையிருப்பதற்கில்லை.

மக்களுக்கே உரிமை

ஆனால், ‘பயிற்சிமொழி தமிழா, ஆங்கிலமா?’ என்பது முற்றிலும் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயமாவதோடு, குடிமக்களுக்குள்ள சுயநிர்ண உரிமையுமாகும்.

சில பல கொள்கைகளின் பேரில்தான், குறிப்பிட்ட ஒரு கட்சியிடம் அரசாங்க இயந்திரத்தை ஒப்படைக்கின்றனர் மக்கள்.

அதன்படி, “தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் தமிழ்மொழி ஒன்றே பயன்படுத்தப்படும்” என்று காங்கிரஸ் கட்சி வாக்காளர்களுக்குத் தந்த உறுதிமொழியின் காரணமாகவும் அதனிடம் அரசாங்கத்தை ஒப்படைந்துள்ளனர்.

மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்பட்டுள்ள இந்தக் கொள்கை உடன்படிக்கைக்கு எதிராகச் செயல்பட பல்கலைக்கழகத்திற்கு உரிமையில்லை.

 

மற்றும் மிக நீண்ட காலம் அன்னிய வல்லரசொன்றுக்கு அடிமைப்பட்ட பிறகு, இப்போதுதான் அரசியல் விடுதலை பெற்றிருக்கின்றது பாரதம்.

அதனால், ஆங்கில ஆட்சிக்காலத்தில், மக்கள்நலன்களுக்கு – ஜனநாயக நெறிகளுக்கு – பாரதக் கலாசாரத்திற்கு எதிராக அமுலிலிருந்து வந்த சட்டதிட்டங்களிளெல்லாம், புரட்சிகரமான மாறுதல்கள் காணவேண்டிய அவசர – அவசியக்கடமை அரசாங்கத்திற்கு உண்டு.

அந்தக் கடமையின் ஒரு பகுதிதான் தமிழைப் பயிற்சி மொழியாக்க அரசினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை. இதனை எதிர்க்கப் பல்கலைக்கழகத்திற்கு உரிமை இல்லை.

மாறுதல் காலம், மறவாதீர்!

‘பல்கலைக்கழகத்திற்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வேண்டும்’ என்றோ, அல்லது ‘கல்வித் துறையில் அரசாங்கம் தலையிடக் கூடாது’ என்றோ கூறுவது, நீண்டகாலமாக சுதந்திர வாழ்வு நடத்திவரும் ஒரு நாட்டுக்குப் பொருந்துவதாக இருக்கலாம்.

ஆனால், ஒன்றரை நூற்றாண்டுக் காலம், பேசும் மொழியாலும், பிறந்த நாட்டாலும், பெற்ற நிறத்தாலும் அன்னியராகிவிட்ட ஒரு இனத்தவருக்கு அடிமைப்பட்டிருந்து இப்போதுதான் விடுதலை பெற்றிருக்கும் பாரதத்திற்குப் பொருந்தாது.

ஆகவே, தமிழைப் பயிற்சி மொழியாக்குவதற்குள்ள த‌டைகளையெல்லாம் தகர்த்தெறிய, மாநில அரசினர் புதிய சட்டமொன்றைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதே தமிழரசுக் கழகத்தின் உறுதியான கொள்கை.

முடிவுரை

பொதுவாக, ஆட்சிமொழி பயிற்சி மொழிச் சிக்கல் பாரதம் முழுவதற்குமான தேசியப் பிரச்சனையாகக் கருதப்படவேண்டும்.

இந்தப் பிரச்சனையோடு அரசியல் – பொருளாதார – சமூக அம்சங்களும் கலந்திருத்தலை மறந்துவிடக் கூடாது.

சுருங்கச் சொன்னால், பயிற்சிமொழிப் பிரச்சனை, சமுதாயப் புரட்சியாகக் கருதப்பட வேண்டும்.

இன்றையப் பாரத சமுதாயத்தில் ஒவ்வொரு துறையிலும் பரங்கிமொழிப் பக்தர்களே அமர்ந்துகொண்டு, மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஆகவே, தமிழைப் பயிற்சி மொழியாக்குவதற்கு ஆதரவாக, பொதுமக்கள் கிளர்ச்சியொன்று உருவாக வேண்டும்.

இது, பரங்கி மொழி பயின்றவர்களிடையே மட்டும் நடைபெறும் கருத்துப் போராகவோ, அரசினருக்கும் பல்கலைக் கழகத்தினருக்கும் இடையே நடைபெறும் உரிமைப் போராட்டமாகவோ மட்டும் இருந்துவிடக் கூடாது.

நூற்றுக்கு ஒரு சதவிகிதத்தினராக உள்ள ஆங்கிலம் பயின்றவர்களின் ஆதிக்கத்திலிருந்து, மற்றுமுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவிகிதத்தினரான பொது மக்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆங்கில மொழியின் ஆதிக்கம் ஆணிவேரோடு அழிக்கப்பட வேண்டும்.

முடிந்து கொண்டிருக்கும் பழைய தலைமுறையைச் சார்ந்தவர்களே, தமிழுக்கு எதிராக ஆங்கிலத்தை ஆதரிக்கின்றனர்.

அந்த வகையில், ஆங்கிலத்தையே வாழ்க்கை மொழியாகக் கொண்டுவிட்ட பழந்தலைமுறையினருக்கும், தமிழையே வாழ்க்கை மொழியாகக் கொண்டுள்ள புதிய தலைமுறையினருக்கும் நடக்கும் போராட்டமே பயிற்சி மொழிச் சிக்கல்.

இந்த உண்மைகளையெல்லாம் கருத்தில் கொண்டு, ஆங்கிலமொழியின் ஆதிக்கத்தை அழிக்கத் தமிழரசுக் கழகம் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு தமிழ் மக்களை வேண்டுகிறேன்.

ம.பொ.சிவஞானம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.