சுதந்திரத்தின் விலை என்ற கதை சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று நம்மை உணர வைக்கும்.
எத்தனை வசதிகள் இருந்தும் சுதந்திரம் இல்லாமல் போனால், வாழ்வே பாழ் என்பதை இக்கதையின் மூலம் அறியலாம்.
ரோமி என்ற காட்டு நாய் ஒன்று, ஒரு நாள் இரவு கிராமத்துப் பக்கம் வந்தது. அங்கு டாமி என்ற வீட்டு நாயைச் சந்தித்தது.
டாமியைப் பார்த்ததும் ரோமிக்கு ஒரே ஆச்சர்யம். ஏனெனில் டாமி கொழு கொழுவென அழகாக இருந்தது. ரோமியோ மெலிந்து அசிங்கமாக இருந்தது.
வனப்பின் காரணம்
உடனே காட்டு நாய் ரோமி, வீட்டு நாய் டாமியிடம் “எப்படி நீ அழகாக வனப்பாக கொழு கொழுவென இருக்கிறாய்? உன்னுடைய செழிப்பிற்கு நீ உண்ணும் உணவே காரணம் என்று எண்ணுகிறேன்.” என்று கேட்டது.
அதற்கு டாமி வீட்டு நாய் “ நீ சொல்வது முற்றிலும் உண்மை தான். நான் உண்பது போலவே நீ உண்ண வேண்டும் என்று விரும்பினால், என்னுடைய வேலையை என் வீட்டிற்கு வந்து செய்தால் போதும்.” என்றது.
அதனைக் கேட்டதும் காட்டு நாய் ரோமி “என்ன வேலை?” என்றது.
“எஜமானரின் வீட்டைக் காவல் காக்க வேண்டும். இரவில் திருடர்கள் வராமல் பாதுகாக்க வேண்டும்” என்றது வீட்டு நாய் டாமி.
“அப்படியா” என்றது காட்டு நாய் ரோமி.
சுதந்திரத்தின் விலை
“இப்போதே என்னுடன் என்னுடைய வீட்டிற்கு வருகிறாயா?” என்று வீட்டு நாய் டாமி கேட்டது.
அப்போது வீட்டு நாய் டாமியின் கழுத்தில் இருந்த தழும்பை காட்டு நாய் ரோமி கண்டது.
“இது என்ன உன்னுடைய கழுத்தில் தழும்பு?” என்று காட்டு நாய் ரோமி வீட்டு நாய் டாமியிடம் கேட்டது.
“அதுவா, அது ஒன்றும் இல்லை.” என்று வீட்டு நாய் டாமி சமாளித்தது.
“பராவாயில்லை. எனக்குச் சொல்” என்று காட்டு நாய் ரோமி கேட்டது.
“கழுத்தில் கட்டப்பட்டிருந்த வளையத்தினால் ஏற்பட்ட தழும்பு. வேறு ஒன்றுமில்லை” என்றது வீட்டு நாய் டாமி கூறியது.
“ஏன் உன்னுடைய கழுத்தில் வளையத்தை மாட்டுகிறார்கள்?” என்று காட்டு நாய் ரோமி கேட்டது.
“நான் என்னுடைய வீட்டில் பகலில் சுதந்திரமாக இருக்க முடியாது. என்னைப் பகலில் கட்டிப் போட்டு விடுவார்கள். இரவில்தான் சுதந்திரமாகத் திரிவேன்.
ஆனால் எனக்கு வெள்ளித் தட்டில் உணவு வைப்பார்கள். என்னுடைய எஜமானர் என்னை அன்புடன் தடவிக் கொடுப்பார்.
எஜமானுக்கும் மற்றவர்களுக்கும் நான் மிகவும் பிரியமானவன்.” என்றது வீட்டு நாய் டாமி.
இதனைக் கேட்டதும் காட்டு நாய் ரோமி ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியது.
அதனைப் பார்த்ததும் வீட்டு நாய் டாமி “எங்கே போகிறாய்?” என்று கேட்டது.
“நீயும் உன் வெள்ளித் தட்டும்; சுதந்திரம் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா? வெள்ளித் தட்டு உணவிற்காக என்னுடைய சுதந்திரத்தை விலையாகக் கொடுக்க விரும்பவில்லை.
கழுத்தில் வளையத்துடன் வெள்ளித் தட்டில் உண்பதைவிட சுதந்திரமாகக் காட்டில் சுற்றித் திரிந்து வாழ்வதுதான் இன்பம்.” என்றபடி காட்டை நோக்கி ஓடியது காட்டு நாய் ரோமி.
எதற்காவும் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்பதை சுதந்திரத்தின் விலை கதை மூலம் அறிந்து கொண்டீர்களா?.