சுமந்தவள் ஆவாளோ சுமை?

சுமந்தவள் ஆவாளோ சுமை?

வாசல் வராண்டாவின் கோடியில் சுவரை ஒட்டினாற் போல் இருந்த காலணிகள் வைக்கும் ரேக்கில், விதவிதமாய்ப் புதுசும் பழசுமாய் காலணிகளும் அழுக்கு சாக்ஸுகளுமாய் வைக்கப்பட்டிருக்க, அதனருகில் ஒண்டியபடி அமர்ந்திருந்தார் ஜகதாம்பா மாமி.

அந்த காலை நேரத்திலும் அழுக்கு சாக்ஸ்களிலிருந்தும் பழைய ஷுக்களுக்குள்ளிருந்தும் பெரிய பெரிய கொசுக்கள் கிளம்பி வந்து மாமியை முகம், கை, கால்கள், கழுத்து என்று வெளியே தெரியும் பாகங்களையெல்லாம் கடித்து கடித்துப் பதம் பார்த்தன.

சற்றும் ஓய்வில்லாமல் கடிக்கும் கொசுக்களை அடிப்பதும், தட்டிவிடுவதும், விரட்டுவதுமாய் இருந்த மாமிக்குக் குச்சிகுச்சியாய் சுருங்கி வற்றிப் போயிருந்த கைகள் சளைத்துப் போய் வலித்தன.

இத்தனைக்கும் வராண்டாவில் சீலீங் ஃபேன் தொங்கிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் சுற்றத்தான் இல்லை.

அது சுற்றினாலாவது கொசு ஃபேன் காற்றுக்கு அடங்கி சாக்ஸுகளுக்குள்ளும் ஷுக்களுக்குள்ளுமே அடங்கிக் கிடக்கும்.

அப்படியொரு வசதியையெல்லாம் யார் செய்து கொடுக்கப் போகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய் நகர்கிறது மாமியைப் பொறுத்தவரை.

சமையலறையிலிருந்து தாளிக்கும் ஓசையும், உளுத்தம்பருப்பு வறுபடும் வாசனையும் மிளகாய் வற்றலின் காரநெடியும் மாமியின் நாசியில் நுழைந்து ‘அச்அச்’சென அடுத்தடுத்துத் தும்மலை வரவழைத்தன.

தும்மிய தும்மல்களால் கண்களிலிருந்து தண்ணீர் வடிந்தது. புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்ட மாமியின் காதுகளில் சமையலறையிலிருந்து மாட்டுப்பெண் மோகனா சப்தம் போடுவது கேட்டது.

தினசரி கிடைக்கும் வார்த்தைகளும் செய்யும் அவமானங்களும் மாமிக்கு ஒன்றும் புதிதல்ல. இங்குமட்டுமா மற்ற இருபிள்ளைகள் வீட்டிலும் பெண்வீட்டிலும் இதே கதிதான்; நிலைதான்.

“ஏன்னா!” சமையலறையிலிருந்து கணவனை அழைத்தாள் மோகனா.

வாஷ்பேசினின் எதிரில் நின்று சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் பார்த்தபடி ஷேவிங் செய்து கொண்டிருந்த கணேசன் மனைவியின் அழைப்புக்குப் பதிலாய், “ம்.. சொல்லு!” என்றான்.

“இன்னிக்கு ஞாத்திக் கெழமதான். எல்லாரும் அவா அவா ஆத்துலதான் இருப்பா. ஆஃபீஸ் போயிருக்க மாட்டா. ஒங்க திருநெல்வேலி அண்ணாக்கு ஃபோன் பண்ணுங்கோ. எதுக்கு சொல்றேன்னு தெரியறதோனோ?”

தாவாங்கட்டை முடியை ரேஸரால் மழித்துக் கொண்டிருந்தவன் அதை நிறுத்தி விட்டு, ரேஸரை மக்கிலிருந்த தண்ணீரில் நுழைத்து இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டே “எதுக்கு மோகனா?” என்றான்.

முகத்தின் பெரும்பகுதி ‘புஸுபுஸு’வென்று நுரைத்திருந்த ஷேவிங் கிரீமில் மறைந்திருந்தது.

“என்னது! என்னது! எதுக்கா? இல்ல நானும் தெரியாமதா கேக்கறேன். நெஜமாவே எதுக்குன்னு தெரியாது? தெரியாதா? தெரியாத மாரி நடிக்கிறேளா?” கேட்டுக் கொண்டே சமையலறையிலிருந்து வெளியே வேகமாக ஓடிவந்தாள் மோகனா.

“த பாரு! ஞாத்திக்கெழமயேன்னு நா ஆத்துல இருக்கேனேயொழிய எனக்கு ஆஃபீஸ் டென்ஷனே ஆயிரம் இருக்கு. அதுவே மண்டயக் கொடையறுது. நேரிடையா எதையும் சொல்லு. பூடகமா பேசினா எனக்கு என்ன தெரியும் சொல்லு?”

“உங்குளுக்குதான் ஆஃபீஸ் டென்ஷனா? ஏன் நான்லாம் ஆஃபீஸ் போலயா? தண்டமா வீட்ல ஒக்காந்ருக்கேனா? எனக்கு டென்ஷனே கெடையாதா? ஒங்குளுக்கு ஆஃபீஸ் வேல மட்டும்தான். ஆனா எனக்கு?

ஆஃபீஸ் வேல முடிஞ்சு வீட்டு வந்தா ஹாயா சேர்ல சாஞ்சுண்டு காபி குடிச்சிண்டே டிவி-ய பாத்துண்ருக்கேன் தினமும். ஆஃபீஸ்லேந்து வந்த ஒடனேயே கிச்சனுக்குள்ள நொழைஞ்சா ராத்திரி பத்துமணி வர ஓயாத வேல வேல! காலம்பர அஞ்சுமணிக்கு எழுந்து குளிச்சிட்டு வந்தா ஆஃபீஸ் கெளம்பர வரைக்கும் வெரல மடக்க நேரமில்லாம ‘பரபர’ன்னு சமச்சு டிஃபன் பண்ணி புள்ளையையும் பொண்ணையும் ஸ்கூலுக்கு அனுப்பி…”

“சரி, ஆரம்பிச்சாச்சா? சீக்கிரம் முடிச்சிட்டு விஷயத்துக்கு வா” கிண்டலடித்த கணவனை முறைத்துப் பார்த்தாள் மோகனா.

“இன்னிக்கு எத்தன நாளாச்சு?”

“என்ன கேட்டா? அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். நீதான் ஞாபகம் வெச்சுக்கனும்” சிரித்தான் கணேசன்.

“த்தூ! புத்தி போராதப் பாரு. இதிலெல்லாம் ஒன்னும் கொறச்சலில்ல. நாங்கேட்டது ஒங்கம்மா இங்கவந்து எத்தன நாளாச்சுன்னு?”

தலையைச்சொரிந்தான் கணேசன்.

“அதெல்லாம் எங்கேந்து ஞாபகம் இருக்கப் போறுது? வர்ர பொதங்கெழமையோட 120 நாளாறுது . சுத்தமா நாலுமாசம் முடிஞ்சிடும். இந்த வருஷத்து என்கந்தாயம் முடிஞ்சிடுத்து.

சுவற்றில் மாட்டியிருந்தக் காலண்டரைப் பார்த்தான் கணேசன்.

“என்ன காலண்டரப் பாக்கறேள்?

வேண்ணா தேதி மேல வெரல வச்சு வெரல வெச்சு எண்ணிக் கூட்டிப் பாருங்கோ!

நூத்தி இருவது நாள் அதா நாலு மாசம் ஆச்சா இல்லியான்னு?

“அது இல்லடி மோகனா. எனக்கு வர்ர வியாழக்கெழம ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்ஷன். லீவு போட முடியாது. வர்ர ஞாயித்துக் கெழம இன்னிக்கு எட்டாவது நாள்னா கொண்டு விடறேனே. வியாழனுக்கும் ஞாயிறுக்கும் நடுவுல வெள்ளி சனி ரெண்டு நாள்தானே இருக்கு”

“ம்.. ம்.. சொல்லுவேள்! சொல்லுவேள்! ஏஞ்சொல்லமாட்டேள்! போன வருஷம் ஒங்க பெரியண்ணா அவரோட மாமனாருக்கு பீமரத சாந்தின்னு எம்பொண்டாட்டி அதா ஒங்க மன்னி பொறந்தாத்துல எக்ஸ்ட்ராவா பத்துநாள் தங்கிட்டு வரப்போறா அதுனால அம்மாவ பத்துநாள் கழிச்சு அனுப்புடா கணேசான்னு சொல்லல. அப்ப நாந்தானே கூட பத்துநாள் ஒங்கம்மாவ இங்க வெச்சுண்டேன்”

“அதுனால?”

“அதுனால இப்பவும் எக்ஸ்ட்ரா வால்லாம் வெச்சுக்க முடியாது. ஒன்னு ஒங்க சின்ணண்ணாவுக்கு ஃபோன் பண்ணி இங்க வந்து அழச்சுண்டு போச் சொல்லுங்கோ!இல்லாட்டி ஒங்கம்மாவ ரெயிலேத்தி விடுங்கோ. அவா ஸ்டேஷனுக்கு வந்து அழச்சுண்டு போட்டம்” தீர்மானமாய்ச் சொன்னாள் மோகனா.

கணேசனின் செல்ஃபோனை தானே எடுத்து கணவனின் அண்ணாவும் தனது மைத்துனருமான ஸ்ரீராமின் நம்பரைப் போட்டாள் மோகனா.

ரிங் போனது.

“இந்தாங்கோ ரிங் போறுது”

“ஏண்டி! ஷேவிங்கே முழுக்க முடிக்கல. அதுக்குள்ள பேசச் சொல்ற” கேட்டு முடிப்பதற்குள் எதிர்முனையில் கணேசனின் அண்ணா ஸ்ரீராம்.

“என்னடா கணேசா! சொல்லு”

“ராமுண்ணா அங்க எல்லாரும் சௌக்கியமா?”

“க்கும்! என்னத்த சௌக்கியம்?”

கணவனிடம் ஃபோனைக் கொடுக்கும்போதே ஸ்பீக்கரில் போட்டுக் கொடுத்திருந்தாள் மோகனா. எனவே மச்சினர் ‘க்கும், என்னத்த சௌக்கியம்?’ என்றது காதில் விழுந்தது. அலெர்ட் ஆனாள் மோகனா.

“ஏன் என்னாச்சு?” அண்ணாவிடம் கேள்வி கேட்ட கணவனை லேசாகக் கிள்ளினாள் மோகனா.

வாயில் ஒற்றை விரலை வைத்து இடது கையை ‘இப்டீல்லாம் குசலம் விஜாரிக்க வேண்டாம்’ என்று சொல்வது போல் ஆட்டினாள்.

‘இப்டி கரிசனமாய் விசாரித்தால் குடும்பத்தில் பொண்டாட்டிக்கு புள்ள, பொண்ணுக்கு ஏன் தனக்கேகூட ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்கும் அளவுக்கு ஒடம்பு மாபாரமா வந்துடுத்து. அதுனால இப்ப அம்மாவ கொண்டு விடரதா சொல்லிடாதன்னு தன் சைட சேஃப்டி பண்ணிண்ருவாரோ மச்சினர்னு’ தோன்றியது மோகனாவுக்கு.

அவள் நினைத்தபடியேதான் நடந்தது.

“கணேசா! ஏங்கேக்கறபோ! மன்னிக்கு நாலுநாளா கடுமையான ஜொரம். டாக்டரண்ட அழச்சுண்டு போனேன். அந்த டெஸ்டு இந்த டெஸ்டுன்னு ஒரே செலவு. கடசில டெங்கு ஜொரமாம் டாக்டர் சொல்லிட்டார். ஜொரம் சரியாகி நார்மலாக கொறஞ்சது பதினஞ்சு நாளாகும். அதுக்கப்பறம் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கனும்ட்டார். நா ஆஃபீஸ் போவேனா? பசங்கள காலேஜ் அனுப்புவேனா? இவள பாத்துப்பேனா? ஒன்னும் புரியலடா கணேசா! தலயசுத்தறது நெனச்சாலே!”

“அப்ப அம்மாவ? வர்ர நாலு மாசமும் உன்டர்ன் ஆச்சே”

“இந்தன சொல்லியும் அம்மாவ இங்க அனுப்பனும்னு நெனைக்கிறியே நியாயமாடா கணேசா?”

“இங்க மட்டும் என்ன வாழறதாம். எனக்கு ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்ஷன் நடக்கறது.
இவ வேல பாக்குறவ. வீட்லயா இருக்கா? பசங்கள ஸ்கூல்க்கு அனுப்ப வேண்டிருக்கு. நாங்கண்டு பேருமே வீட்டுக்கு வர லேட்டாயிடறது. இதுல அம்மாவவேற பாத்துகனும்னா?

நாங்க பாத்துக்க வேண்டிய நாலுமாசம் பாத்துண்டோம். இனிமே நீயாச்சு பெரியாண்ணாவாச்சு, அக்கா சுபத்ராவாச்சு. எங்களால முடியாது. என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. நீ வந்து அழச்சிண்டு போ! இல்லாட்டி வர ஞாத்திக்கெழம நா கொண்டு விட்ருவேன். இல்லியா நெல்லை எக்ஸ்பிரஸ்ல ஏத்தி அனுப்பிடுவேன்.”

அண்ணாவுக்கும் தம்பிக்கும் வார்த்தை வெடித்து பெரும் சண்டையாக மாறியது. அண்ணன்காரன் ஃபோனைக் கட் செய்தான்.

மச்சினர் ஃபோனைக் ‘கட்’ செய்ததை பெருத்த அவமானமாய் கருதினாள் மோகனா.

“பாத்தேளா! பாத்தேளா! என்ன ஒரு இது இருக்கனும் ஃபோன கட் பண்ண. நிச்சயமா சொல்றேன் ஒங்கண்ணா பொண்டாட்டிக்கு அதா ஒங்க மன்னிக்கு என்னோட ஓர்ப்படியாளுக்கு டெங்குவும் இருக்காது டுங்குவும் இருக்காது.

சுத்தப் பொய்யி. நாம வந்து பாக்கமாட்டோம்னு தைரியம். நாந்தா இளிச்சவாயி.
எல்லாருக்கும் வடிச்சுக் கொட்டன்னு எங்கப்பா சீனுவாசனும் எங்கம்மா ஜெயந்தியும் என்னப் பெத்துப் போட்ருக்கா” மூக்கைச் சிந்தினாள் மோகனா.

“த பாருங்கோ! உங்க பெங்களுர் பெரியண்ணாவுக்கும் ஒங்க அக்கா ஹைதராபாத் சுபத்ராக்கும் ஃபோனப் போடுங்கோ. எனக்கொரு ஞாயம் கெடைக்கனும். ஆமா சொல்லிட்டே. வியாழக்கெழம உங்க அம்மா கெழவி இங்க இருக்கப்படாது.

மீறி இருந்தா நா ஒருமாசம் மெடிகல் லீவப் போட்டுட்டு எங்கம்மாவாத்துக்குப் போயிடுவேன். அப்பறம் நீங்குளுமாச்சு ஒங்க புள்ளையாச்சு பொணணாச்சு ஒங்கம்மா குந்தானியாச்சு. எப்டியோ போங்கோ” காளியாய் மாறி சாமியாடிக் கத்தினாள் மோகனா.

அடுத்த ரெண்டு மணி நேரம் பெங்களூர் அண்ணா ஹைதராபாத் சுபத்ரா அக்கா என இருவரிடமும் மாறிமாறி சம்பாஷணைகளும் சண்டையும் நடந்தன.

இடையே திருநெல்வேலி அண்ணாவும் தலையை நுழைக்க வீட்டில் சுனாமியும் சூராவளியும் சுழற்றி அடித்தன.

வராண்டாவில் உட்கார்ந்திருந்த ஜகதாம்பா மாமி இப்போது சுருண்டு படுத்திருந்தார்.

உள்ளே நடந்த சம்பாஷணைகளும் சண்டைகளும் சத்தமும் கத்தலும் ஃபோன் மூலம் ‘பெற்ற பிள்ளைகள் வார்த்தைகளால் அடித்துக் கொள்வதும் தன்னை யார் அடுத்த நாலுமாசம் வைத்துக் கொள்வது?’ என்பதன் பொருட்டே என்பது நன்றாகவே புரிந்தது மாமிக்கு.

மூன்று பிள்ளைகளும் பெண் சுபத்ராவும் என பெற்ற பிள்ளைகள் நாலு பேருமே தன்னை தங்களுக்குரிய நாலுமாதம் என்ன எப்போதுமே வேண்டாம் என மறுத்திருப்பார்கள் என்பது மோகனாவின் காட்டுக் கத்தல் காட்டிக் கொடுத்தது.

காலை ஆறுமணிக்கு காபி என்ற பெயரில் கொண்டு ‘நக்’கென்று பக்கத்தில் வைக்கப்பட்ட சுடுதண்ணீரைக் குடித்ததோடு சரி.

பத்து மணிக்கு தரும் கழுநீர் டீ கூட தரப்படவில்லை. மணி பதினொன்னு பதினொன்னரை இருக்கும். பசி காதை அடைத்தது மாமிக்கு. ஒரு டபரா
சாதம் சாப்பிட்டால் அதுவே பெரிது.

ஞாயிறு தவிற மற்ற நாட்களில் சாப்பாட்டை மேஜைமீது வைத்துவிட்டு ஆஃபீஸ் போய் விடுவாள் மோகனா.

ஆறிப் போய் ‘விரைவிரை’யாய் இருக்கும் சாதத்தில் ரசத்தை ஊற்றி எப்படி அழுத்திப் பிசந்தாலும் சாதமும் ரசமும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாமல் தனித்தனியாகவே நிற்கும்.

ஒருபல்கூட இல்லாத எண்பத்து நாலு வயசு மாமியால் சாதத்தைக் கடித்து விழுங்கவே முடியாது.

மென்னியை அடைத்து கண்களில் தண்ணி வந்து புரையேறி தவித்துப் போவார் மாமி. வயிற்றில் பசியும் வீட்டில் யாருமில்லா தனிமையும் மாமியை அழவைக்கும்.

இன்று மாமிக்குப் பசித்தாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. ‘சாப்புடு’ன்னு சொல்லாமல் இருந்தாலே போதுமென்று இருந்தது.

மதிப்போ மரியாதையோ அம்மாங்கறப் பாசமோ இல்லாத பெற்ற பிள்ளைகள். பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை எப்படி இவர்களால் அன்போ பாசமோ
இன்றி நடத்த முடிகிறது.

பெத்த தாயை சுமையாகக் கருத இவர்களால் எப்படி முடிகிறது?

சுமந்தவள் எப்படி பெற்ற பிள்ளைகளுக்கு சுமையாவாள்?

சாதாரண வக்கீல் குமாஸ்தாவுக்கு வாக்கப்பட்டு, மூணு ஆம்பள பசங்களையும் ரெண்டு பொண்ணுங்களையும் பெத்து புருஷங்கொண்டு வர கொறஞ்ச வருவா பத்தாம, பல்பொடி தயாரிக்கிற கம்பெனில பாக்கெட் போடுற வேல பாத்தும், கல்யாண வீடுகளுக்கு முறுக்கு சுத்தப் போறதும் யாராத்துலயாவது சமைக்க கூப்ட்டா போறுதுன்னும் கஷ்டப்பட்டு வேல செஞ்சு என்னால முடிஞ்ச வருவாய சம்பாதிச்சு இவா அஞ்சு பேரையும் வளத்து ஆளாக்கினேனே.

இவாளுக்கெல்லாம் தெரியும்தானே?

இவாளயெல்லாம் நா வளக்க எவ்வளவு கஷ்டப்பட்டேங்கறது மறந்தா போயிடும்?

பெத்தவள தலேல தூக்கி வெச்சு ஆட வேண்டாம்.

வாய் நிறைய ‘அம்மான்னு கூப்ட்டு, சாப்டியாம்மா நா கடத்தெரு போறேன் ஒனக்கு எதாவது வேணுமாம்மா ரொம்ப நாளா கண்ணு டெஸ்ட் பண்ணணும்னு சொன்னியே டாக்டர பாக்கலாம் வாயேன், கோவிலுக்குன்னா போய்ட்டு வரலாமா?’ இப்பிடி ஏதாவது எந்தப் புள்ளையும் கேக்கிலியே,

ஆம்பள பசங்கதான் அப்டீன்னா பொண்ணு?

“வசுமதி!” வாய் தானாகவே உச்சரித்தது. கண்களிலிருந்து கண்ணீர் பிரவாகமெடுத்து மார்புப் புடவையை நனைத்தது.

விசும்பலும் கேவலும் தொண்டையிலிருந்து கிளம்பி வெடித்து வெளியே வந்தது.
இந்த அழுகையும் விசும்பலும் இன்று நேற்றல்ல இருபத்தெட்டு வருடமாகத் தொடர்வது.

“தெரியுமோ! வெங்கிட்டா பொண்ணு அதான், ஜகதாம்பா பொண்ணு வசுமதி இருக்காளோனோ அவ எவனையோ இழுத்துண்டு..” ஆளாளுக்கு காரித் துப்பினார்கள். ஊர் சிரித்தது.

உறவுகள் முகத்தில் வருத்தம் காண்பித்து மனதில் சந்தோஷப்பட்டார்கள். வசுமதியின் கூடப்பிறந்த அண்ணன்மார்களும் தம்பியாய்ப் பிறந்த கணேசனும் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தார்கள்.

கிணற்றில் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றிக்கொண்டு “இது வசுமதிக்காக பண்ணும் ஸ்னானம்!” என்றார்கள்.

வெங்கிட்டா முகத்தில் அறைந்துகொண்டு அழுதார்.

ஜகதாம்பாளிடம் “அந்த ஓடுகாலி என்னிக்காவது வீட்டு வாசல்ல வந்து நின்னா சாணியக் கரச்சு ஊத்தி செருப்பால அடிச்சி வெரட்டனும். பெத்துட்டேன்! அவள வேண்டான்னு எப்பிடி சொல்லுவேன்னு அவளக் கட்டிப்புடிச்சி அழுதுண்டு ஆத்துக்குள்ள அழச்சிண்டு வரக்கூடாது. சத்தியம் பண்ணுடி! சத்தியம் பண்ணு!” கத்தினார்.

யாருக்கும் எந்த பதிலும் சொல்லாது பிரமை பிடித்து அமர்ந்திருந்தார் அப்போதைய அம்பத்தாறு வயது ஜகதாம்பா.

‘ஏண்டி! ஏண்டி இப்பிடி செஞ்ச? அம்மா அம்மான்னு சுத்திசுத்தி வருவயேடி. இந்த அம்மா வேண்டாம்னு எவனோடயோ போக ஒனக்கு எப்டிடி மனசு வந்துது’ மனதுக்குள் பாச மகளிடம் கேள்வி கேட்டுக் கேட்டு அழுதார் ஜகதாம்பா.

அன்றிலிருந்து இன்றுவரை அழாத நாளே கிடையாது.

“டீ, வசு! நீ ஒடம்பு கிடம்பு வந்து செத்துப் போயிருந்தாகூட என்னமோ ஆண்டவன் குடுத்தான். குடுத்தத பறிச்சிண்டுட்டான்னு மனச தேத்திக்கலாம்.

அதுகூட பெத்தவளாள முடியாதுதான். ஆனா இந்த பூமீல உயிரோட நீ இருக்கியா இல்லையான்னு கூட தெரியாம இருக்கறது ஒரு தாய்க்கு எவ்வளவு கொடுமைனு தெரியுமாடி ஒனக்கு?”

நீ செஞ்ச காரியத்தால யார் மூஞ்சிலயும் முழிக்க முடியாம ஒங்கப்பா ஆறே மாசத்துல போய்ச் சேந்துட்டார். ஆனா நா.. நா.. பெத்த புள்ளைங்களாலயே புறக்கணிக்கப்பட்டு, தினம் தினம் சாகாம செத்துண்ருக்கேன்.

ஒருவேள பெத்தவா பாத்து வெச்ச மாப்ளய நீ கல்யாணம் பண்ணியிருந்தா நீயும் இவாளப் போலதான் இருப்பியோ? என்னவோ யார் கண்டா?”

“இந்தா சாப்டு!” ‘தட்’டென்று தட்டைவைக்கும் சப்தமும் கணேசனின் குரலும் மாமியை நிகழ்வுக்கு மீட்டு வந்தது.

“வேண்டாம் கணேசா! எனக்குப் பசிக்கில” எழுந்து அமர்ந்த மாமிக்கு ‘கிர்’ரெனத் தலையை சுற்றியது. சமாளித்தார்.

“தோ பாரு! சாப்புடு. நாம வெளியே கெளம்பிப் போறோம்.”

எங்க போறோம்?”

“அதெல்லாம் ஒனக்குத் தேவையில்ல. சாப்டு!”

“இல்ல, வேண்டாம் பசிக்கில”

வாசலில் ஆட்டோ வந்து நின்றது.

உள்ளே போன கணேசன் சட்டென வெளியே வந்தான். கையில் ஒரு கட்டைப்பை.

“த பாரு! இதுல மூணு பொடவ, மூணு ஜாக்கெட் ரெண்டு உள்பாவாட இருக்கு. ஒனக்குதான். டெய்லி யூஸ்க்கு. வா, ஆட்டோ காத்துண்ருக்கு”

“எங்க போறோம் கணேசா? திருநெல்வேலிக்கா? ராத்திரிதானே ட்ரெயின்!”

“தொண தொணன்னு எதாவது கேட்டுண்டே இருக்காத. வா”

“மோகனா, பேரன், பேத்தி சொல்லிக்கிலியே யாரண்டயும்”

“நீ சொல்லிண்டதா நா அவாட்ட சொல்லிர்றேன், கெளம்பு”

உட்கார்ந்த இடத்திலிருந்து மாமி எழுந்த போது தடுமாறியது. ‘குப்’பென்று கண்களை இருட்டியது.

சுவற்று மூலையில் சார்த்தி வைத்தி ருந்த மூங்கில் குச்சியை எடுத்துக் கொண்டு கூன் விழுந்த முதுகோடும் தளர்ந்த நடையோடும் மெலிந்த தேகத்தோடும் வீட்டின் வாசல் படியிலிருந்து தெருவில் கால் வைத்தார் மாமி.

ஆட்டோவிலேயே முக்கால் மணி நேரப் பயணமிருக்கும்.

“என்ன திருநெல்வேலிக்குப் போறதா இருந்தா ரெயில்வே ஸ்டேஷனுக்குனா போணும். ஆட்டோ வேற எங்கியோன்னா போறாப்ல இருக்கு. கணேசா எங்க போறோம்?”

“ம், போனா தானா தெரியும்”

பிரபலமான அந்த வார இதழில் அன்னையர் தினத்துக்காக, “தாய் யார்?” என்ற
தலைப்பில் வெளியாகியிருந்த கவிதையைப் படித்துக் கொண்டிருந்த, ‘அன்பு அன்னையர் இல்லம்’ என்ற பெயரோடு இயங்கும் வயது முதிர்ந்த ஆதரவற்ற பெண்களுக்கான முதியோர் இல்லத் தலைவி திருமதி.வசுமதியின் மனது கவிதை தந்த தாக்கத்தால் கொஞ்சம் தவித்து நெகிழ்ந்து போனது.

அன்னையர் தினச் சிறப்புக் கவிதையது. தாய்க்கு பெற்ற பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளை நெகிழ்ச்சியோடு சுட்டிக் காட்டும் கவிதை.

படித்து முடித்துவிட்டு நிமிர்ந்த ஐம்பது வயது வசுமதியின் கண்களில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன. “அம்மா!” என்றன உதடுகள்.

‘அம்மா! அம்மா! நீ எப்டிம்மா இருக்க? நீ இருக்கியா இல்லையான்னே தெரியலயேம்மா. அம்மா நா ஒம் பொண்ணு வசும்மா, நா பண்ணின காரியத்துக்கு அப்பா, அண்ணாக்கள், அக்கா, தம்பி எல்லாருமே என்ன வெறுத்துருப்பா. ஆனா நிச்சயமா நீ என்ன வெறுத்திருக்க மாட்டம்மா. அது ஒன்னால முடியாதும்மா.

நம்ம குடும்பத்த நா ஒருநாளும் மறக்கலம்மா. அதுவும் ஒன்ன நெனச்சு நெனச்சு அழாத நாளில்லம்மா அம்மா. நான் இவரோட வாழ்ந்தது வெறும் பத்து வருஷம்தாம்மா.

தோ!தோ! தலைவியா ஒக்காந்திருக்கேனே இந்த முதியோர் இல்லம் அவர் நடத்தின்ருந்ததுதாம்மா.

அவர் விபத்தொன்னுல காலமானதும் நாந்தாம்மா இத நடத்திண்டு வரேன். ஆண்டவன் எனக்கு தாயாகும் பாக்கியத்தக் குடுக்கல. ஆனா ஆதரவற்ற தாய்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் பாக்கியத்த எனக்குக் குடுத்துருக்கார்ம்மா.

என்னவோ தெரியல; இன்னிக்கு ஏனோ அம்மாவின் நினைவு அதிகமாக வருது எனத் தோன்றியது’ வசுமதிக்கு.

அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் முகப்பில் அகலமும் உயரமுமாய் இருந்த
பெரிய கிரில் கேட்டின் முன்னால் வந்து நின்றது ஆட்டோ.

‘எந்த எடம் இது? இங்கவந்து ஆட்டோ நிக்கறது?’ வலது கையை கண்களுக்குமேல் குடைபோல் வைத்து கேட்டின் அருகே சுவற்றில் மாட்டியிருந்த பெயர்ப் பலகையைக் கண்களை இடுக்கிப் பார்த்தார் ஜகதாம்பா மாமி.

‘ஐயோ! இதென்ன அன்பு அன்னையர் இல்லம். ஆதரவற்ற முதிய பெண்களுக்கான ஆதரவு இல்லம்னுனா போட்ருக்கு. அப்ப இது முதியோர் இல்லமா? என்னை ஏன் இங்க அழச்சிண்டு வரான் கணேசன்!’

“கணேசா! என்ன எதுக்குடா இங்க அழச்சுண்டு வர?”

“ம்.. சொல்றேன்”

கேட்டின் முன் நின்றிருந்த செக்யூரிட்டி கேட்டைத் திறந்துவிட உள்ளே நுழைந்தது ஆட்டோ.

ஆட்டோவை நோக்கி நடந்து வந்தார்கள் யூனிஃபார்ம் அணிந்த இரண்டு பெண்கள்.

ஆட்டோவிருந்து இறங்கிய கணேசன் “ம்.. எறங்கு!” என்றான் தாயிடம்.

“எதுக்கு நா இங்க எறங்கனும்? இது ஆதரவு இல்லாத வயசானவா தங்கற இல்லம்னா!”

“எறங்குன்னா எறங்கு! இனிமே நீ இங்கதான் இருக்கப் போற”

“ஐயோ! முடியாது! முடியாது! நா இங்க ஏ இருக்கனும். அஞ்சு புள்ளைங்கள பெத்த நான் யாருமில்லாத ஆதரவற்ற அனாதயா?

அஞ்சு பேர்ல ஒத்தி இல்லேன்னாலும் மத்த நாலு பேர் இருக்கேளேடா!

நாலு பேரையும் நாந்தானேடா இந்த வயத்துல சொமந்து பெத்தேன்.

ஒங்கள சொமந்து பெத்த நான் ஒங்குளுக்கு சொமையாயிட்டேனா!

பாவிங்களா, ஆதரவில்லா அனாதன்னு என்ன இங்க கொண்டு வந்து தள்ள எப்டீடா ஒங்குளுக்கு மனசு வந்துது?

எறங்க முடியாது; எறங்க மாட்டேன்” கத்திக் கொண்டே பிடிவாதமாய் ஆட்டோவிலிருந்து இறங்க மறுத்து, அமர்ந்திருந்த மாமியை வலுக்கட்டாயமாய்க் கையைப் பற்றி இழுத்து வெளியே இறக்கினான் கணேசன்.

படபடப்பும் மயக்கமுமாய் வந்தது மாமிக்கு. சட்டென மயங்கி கீழே சாய்ந்தார் மாமி.

‘விருட்’டென ஆட்டோவில் கணேசன் ஏற ஆட்டோ யூடர்ன் எடுத்துப் பறந்து கேட்டைக் கடந்து வேகமெடுத்தது.

“மேடம்! மேடம்!” கத்திக் கொண்டே உள்ளே ஓடிவரும் பணிப்பெண்ணைப் பார்த்து
ஜோதியம்மா, “என்னாச்சு ஏன் இப்பிடி ஓடி வறீங்க?” என்றார்.

“மேம்! வாசல்ல ஒரு ஆட்டோ வந்திச்சி. அதுல ஒரு வயசான அம்மா இருந்தாங்க. அவுங்க நா இங்கல்லாம் இருக்க மாட்டேன். அஞ்சு புள்ளைங்கள பெத்த நா அனாதையா? ஆதரவு இல்லாதவளா? ஒருத்தி தா இல்லாம போய்ட்டா, மீதி நீங்க நாலுபேரு இல்லியா? என்ன ஏன் ஆதரவு இல்லாதவன்னு இங்க கொண்டு வந்து சேக்குறீங்கன்னு கத்தி அழுதாங்க.

ஆனா கூடவந்த ஆளு கொஞ்சங்கூட எரக்க மில்லாம அந்த வயசான அம்மாவ வலுக்கட்டாயமா ஆட்டோலேந்து புடிச்சி இழுத்து எறக்கவும் அந்தம்மா அப்டியே
மயங்கி கீழ சாஞ்சுட்டாங்க.

கூட வந்த ஆளு ஆட்டோவுல ஏறிப் போய்ட்டாரு மேம். அந்தம்மா உயிரோட இருக்காங்களா இல்லியான்னு தெரியல மேம்.

‘சடாரெ’ன நாற்காலியிலிருந்து எழுந்தார் வசுமதி. மேஜை மீதிருந்த தண்ணீர் பாட்டிலைக் கையோடு எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தார்.

தளம் போடப்பட்டிருந்த நடைபாதையில் விழுந்து கிடந்த மாமியை நெருங்கினார் வசுமதி.

ஏனோ இனம் தெரியாத தவிப்பு ஏற்பட்டது மனதிற்குள். மெலிந்த தேகமும் சுருங்கிப் போன தோலுமாய் ஒருக்களித்துக் கிடந்த அந்த உடலின் கிட்டத்தில் சென்றபோது வசுமதியின் உடலும் மனமும் பரபரத்தன.

“என்னது அம்மா மாரியே இருக்கு பாத்தா!

ச்சீ! அம்மா ஏன் இங்க?” மனதைத் தேற்றிக் கொள்ள நினைத்தார்.

உடலருகே சென்று மண்டியிட்டு அமர்ந்து ஒருக்களித்துக் கிடந்த முகத்தைத் திருப்பிப் பார்த்தவர் திடுக்கிட்டுப் போனார்.

அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று கிளம்பிவந்து நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.

‘சொரேர்’ என்ற ஓர் உணர்ச்சி மனதைத் தவிக்க வைத்தது. ரத்தம் மொத்தமுமாய் சூடாகித் தணிந்தது.

“இது.. இது.. அம்மாவேதான்.

இடம், பொருள், சூழல் அனைத்தயும் தாய்ப்பாசம் மறக்க வைத்தது.

“அம்மா!” வாய்விட்டு அலறினார் வசுமதி.

சம்மணமிட்டு அமர்ந்து தாயின் தலையை மெதுவாய் எடுத்துத் தன் மடிமீது வைத்துக் கொண்டார். தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொஞ்சமாய்ச் சாய்த்து சிறிதளவு தண்ணீரைத் தாயின் வாயில் ஊற்றினார்.

ஒரு மிடறு தண்ணீர் தொண்டையில் இறங்கியது.

“அம்மா! அம்மா! கண்ணத் தொறந்து பாரும்மா! உன் வசுமதிம்மா. உன் செல்லப் பொண்ணும்மா. அம்மா!” தாயின் முகத்தருகே தன் முகம் வைத்து அழைத்த வசுமதியின் கண்களிலிருந்து கண்ணீர் மாமியின் நெஞ்சில் விழுந்து நனைத்தது.

பாட்டிலைச் சரித்து இன்னும் கொஞ்சமே கொஞ்சமாய் தண்ணீரைத் தாயின் வாயில் ஊற்ற, ஊற்றிய தண்ணீர் தொண்டைக்குள் இறங்காமல் வாய்க்குள்ளேயே நின்றது.

“அம்மா!” என்று தாயின் உடலை சற்றே தூக்கி முகத்தைத் தன் மார்போடு அணைத்துக் கதறினார் வசுமதி.

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்