மாலை அலுவலகம் முடிந்து மறுநாளைக்குத் தேவையான காய்கறிகளை ஒவ்வொன்றாய் பார்த்து வாங்கி பையில் நிரப்பிக் கொண்டு, ரொம்பவும் களைப்புற்றவனாய் தளர்ந்த நடையுடன் ‘அண்ணா நகர்’ பஸ்ஸைப் பிடிக்க வந்து கொண்டிருந்தபோது, வழி நெடுக பல ஹோட்டல்கள் கண்ணில் பட, விலைப்பட்டியலோ பயமுறுத்த, உள்ளே நுழையத் தயங்கினான் சேகர்.
தெப்பக்குளம் எதிரிலிருந்த சிந்தாமணி கேண்டீனைக் கண்டதும் மனதில் ‘குபுக்’கென மகிழ்ச்சி பொங்கியது அவனுக்கு.
மிகக் குறைந்த விலை. இருபது, முப்பது ரூபாய்க்குள் டிஃபனை முடித்து விடலாம். வயிறும் நிரம்பும். அண்ணாநகர் செல்லும் வரை தாக்குப் பிடிக்கும்.
யோசித்தவாறே சிந்தாமணி கேண்டீனுக்குள் நுழையப் போனவன். மனதில் திடீரென ஒரு தயக்கம்.
குறைந்த விலை டிஃபன் எல்லாம் சரிதான். உள்ளே போனோமா, சாப்பிட்டோமா, பில் தொகையைக் கொடுத்தோமா என வர முடியாது.
முதலில் பணத்தை கொடுத்து டோக்கன் வாங்க வேண்டும்.
அயிட்டம் வாரியாக வாங்கிய டோக்கனை ஸ்டாலில் கொடுத்து, சாப்பிட வேண்டியவற்றைத் தானே வாங்கி டேபிளுக்குக் கொண்டு வந்து, குடி தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட்டு முடிந்து, காபி டோக்கனைக் கொடுத்து அதற்காகக் காத்து நின்று, வாங்கிக் குடித்துப் பிறகு வெளியே வரவேண்டும்.
சுய சேவை! காதை அடைக்கிற பசியில், உடம்புக் களைப்பில் யாரால் முடியும் இவ்வளவும்?
எரிச்சல் கொண்டவனாய் உள்ளே நுழையாமல், பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான். வீடு போய்ச் சேர்ந்தால் போதும் என்றிருந்தது சேகருக்கு.
அரை மணியில் வீடு போய்விடப் போகிறோம். கையிலிருப்பதை அப்படி அப்படியே போட்டு விட்டு, டிரஸ்ஸைக் கழற்றி எறிந்துவிட்டு, கை, கால், முகம் கழுவி வருவதற்குள், மனைவி சாப்பாட்டை ரெடியாகப் பரிமாறி மேஜையில் வைத்திருப்பாள். அலுங்காமல், கொள்ளாமல் திருப்தியாய் சாப்பிட்டுவிட்டு, படுக்கையில் போய் விழுந்து விடலாம்.
பஸ் பிடித்து அண்ணா நகரில் இறங்கி வீடு போய்ச் சேர்ந்தவனை, வாசலில் நின்றவாறே மனைவி வரவேற்றாள்.
“கிட்டே வராதீங்க. நான் வீட்டுக்கு வெளியே. நீங்க எப்ப வருவீங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன். சாயங்காலத்திலேருந்து பசி காதை அடைக்குது. சீக்கிரமா உள்ளே போய் குக்கரை வைச்சு சமையலை ஆரம்பியுங்க.”
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
மறுமொழி இடவும்