சுரைக்காய் கூட்டு சுவையானதும் சத்து மிகுந்ததும் ஆகும். இக்காயில் தண்ணீர் சத்து அதிகம். சுரைக்காய் சாப்பிட சிறுநீர் நன்கு பிரியும்.
சுரைக்காயினை கூட்டு செய்தும், குழம்பு செய்தும் சாப்பிடலாம். நம் நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலைக்கு சுரைக்காய் மிகவும் ஏற்றது.
இனி எளிமையான சுவையான சுரைக்காய் கூட்டு செய்முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
சுரைக்காய் – ¼ கிலோ
மல்லிப் பொடி – 1½ ஸ்பூன்
வத்தல் பொடி – ¾ ஸ்பூன்
சீரகப் பொடி – ¾ ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
பொரிகடலை – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 எண்ணம்
கறிவேப்பிலை – 2 கீற்று
கடுகு – ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் சுரைக்காயின் தோலினை சீவிக் கொள்ளவும்.
பின் குறுக்குவாக்கில் வெட்டி நடுவில் உள்ள சதைப்பகுதியினுள் உள்ள விதைகளை நீக்கி கொள்ளவும்.

பின் சுரைக்காயின் மென்மையான மற்றும் கடினமான சதைப்பகுதிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பொரிகடலையை மிக்ஸியில் போட்டு மென்மையாக பொடித்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
குக்கரில் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளைச் போடவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.

குக்கரில் உள்ள சுரைக்காய் துண்டுகளுடன் தாளித்தக் கலவையைச் சேர்க்கவும்.

பின் குக்கரில் மல்லிப் பொடி, சீரகப் பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

குக்கரில் 3 குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். பின் சுரைக்காய் கலவையை நன்கு கிளறி குக்கரை மூடி விடவும்.

குக்கரில் விசில் வந்ததும் அடுப்பின் தணலை சிம்மில் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து குக்கரை அணைத்து விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.

பொடித்துள்ள பொரிகடலையை சுரைக்காய் கலவையுடன் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

சுவையான சுரைக்காய் கூட்டு தயார்.

இதனை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மிளகாய் பொடி, மல்லிப் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடிக்கு பதிலாக மசாலா பொடி 2½ ஸ்பூன் சேர்த்து கூட்டு தயார் செய்யலாம்.
சுரைக்காய் தண்ணீர் விடும் காயாதலால் சிறிதளவு தண்ணீரே சேர்க்கவும்.
குக்கரின் மூடியை திறந்தபின் சுரைக்காய் அதிகம் தண்ணீருடன் இருந்தால் சிறிது நேரம் அடுப்பில் வைத்து பின் பொரிகடலை மாவினைச் சேர்க்கவும்.
–ஜான்சிராணி வேலாயுதம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!