நிலத்தடி நீரை
உறிஞ்சி வெக்கைப் படுத்தும்
கருவேல மரத்தின் முட்களுக்கு
காற்றை
குத்தவும் கிழிக்கவும் தெரியவில்லை
அதைத் தான்
கோடாலியுடன் இவன் செய்கிறான்
ஓசோனைக் குத்தவும்
நிழலை எரிக்கவும்…
வெட்டிக்
கிழித்துப் போனவனுக்கு
தன் வியர்வைக் கூட தணிக்கவில்லை
தாகம்…
வேற்றூர் மரமென்றாலும்
எறும்புகளுக்காவது கொடுக்கிறது
நிழல்…
இவனுக்கு
இவன் நிழலே
இளைப்பாற தருவதிலை…
எவருக்கும்
குடை பிடிக்காதவனுக்கு
யார் பிடிப்பார்
குடை…
மயானமென
மரங்களை எரித்துப் போட்டவனை
அனல் காற்றுதான் அரவணைக்கிறது
முள்ளால
முள்ளெடுப்பதுப் போல…
வினை அறுப்பதில்லை
திணை விதைத்தவன்
ஏரிக் குளங்களை
தூர்த்து
குடியிருந்தவன் கதறுகிறான்
கரை நின்று…
வனத்திற்கு நிலத்திற்கு
ஊறுவிளைவித்தவன் மட்டும்
அமைதியிழப்பதிலை
சுற்றி இருப்பவன் கூட
நலம் தொலைக்கிறான்…
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432