சுற்றுச்சூழல் மாசுபாடு

சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது இன்றைக்கு நம் உலக‌ம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை.

நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களான மண்,நீர்,காற்று ஆகியவற்றின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் விரும்பத்தகாத மாற்றத்தை ஏற்படுத்தி உயிரினங்களுக்கு சுகாதாரக்கேடு விளைவிக்கும் நிகழ்வே சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும்.

சுற்றுச்சூழல் மாசுபாடு தற்போது உலகெங்கிலும் பரவி கடுமையான பேரிடர்களை உண்டாக்கி உயிரினங்களின் வாழ்விற்கும் அச்சுறுத்துதலை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கும் மக்கள் நகர்புறங்களில் அசுத்தமான காற்று, மாசுபட்ட தண்ணீர் மற்றும் ஒலியின் பேரிரைச்சல் ஆகியவற்றுடனே தங்கள் வாழ்க்கையைக் கழிக்கின்றனர். உலகில் சுமார் 200 மில்லியன் மக்கள் சுற்றுச்சூழல் மாசினால் பாதிப்படைந்துள்ளனர்.

நவீனகால தொழில்நுட்பத்துடன் கூடிய மனித செயல்பாடுகள் மற்றும் மக்கள்தொகை பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக சுற்றுசூழல் சீர்கேடு நாள்தோறும் பெருகி வருகிறது.

இந்நிகழ்வினால் உயிர்களின் வாழ்க்கைமுறை பாதிக்கப்படுவதோடு நாம் வாழும் பூமியின் தன்மையும் மாறி எதிர் காலத்தில் உயிரினங்களின் வாழ்வினை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

மனிதன் தீயினை கண்டறிந்த நாள் முதலே சுற்றுசூழல் மாசுபட ஆரம்பித்துவிட்டது.

 

சுற்றுசூழல் மாசுபாட்டின் வகைகள்

சுற்றுசூழல் மாசுபாட்டினை நில மாசுபாடு, நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, ஒளி மாசுபாடு, ஒலி மாசுபாடு, கதிரியக்க மாசுபாடு என வகைப்படுத்தலாம்.

நில மாசுபாடு

கழிவு மற்றும் வேதியியல் பொருட்களை நிலத்தில் கொட்டுவ‌தால் இந்நிகழ்வு ஏற்படுகிறது.

தீங்கு விளைவிக்கும் பொருட்களை நிலத்தில் கொட்டுவதால் அவை உணவுச்சங்கிலியில் பெரும் மாற்றத்தை உண்டாக்குகின்றன.

காடுகள் அழிக்கப்படுவதால் மண்அரிப்பு ஏற்படுவதோடு வளமான மண் இல்லாமல் தாவர வளர்ச்சி தடைபெறுகிறது. இந்நிகழ்வு சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறது.

 

நீர் மாசுபாடு

மனித நடவடிக்கையினால் ஏற்படும் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவை ஆறு, குளம் மற்றும் கடல்களில் மாசுபாட்டினைத் தோற்றுவிக்கின்றன.

இதனால் குடிநீர் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வாழிடங்கள் பாதிப்படைகின்றன.

 

காற்று மாசுபாடு

உயிரினங்களின் வாழ்வில் காற்று மாசுபாடு பெரும் மாற்றத்தையும், ஆபத்தையும் விளைவிக்கக் கூடியது.

தொழிற்சாலைகள், வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியிடப்படும் புகை மற்றும் உடலுக்கு தீமை செய்யும் வாயுக்களான கார்பன்டைஆக்ஸைடு, கார்பன்மோனாக்ஸைடு, சல்பர்டைஆக்ஸைடு, மீதேன் போன்றவை இம்மாசுபாட்டிற்கு முக்கிய காரணிகளாகும்.

இம்மாசுபாடு பசுமை இல்ல விளைவு, உலக வெப்பமயமாதல், எல்நினோ போன்றவற்றை உருவாக்கி பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

ஒளி மாசுபாடு

இம்மாசுபாடு பெரும் வெளிச்சத்தினால் இரவில் ஏற்படுகிறது. இரவில் நடத்தப்படும் பொழுதுபோக்கு நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரப்பலகைகள் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

இவை விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்களின் தூக்கத்தைக் கெடுப்பதோடு வாழ்க்கை முறையினையும் மாற்றிவிடுகின்றன.

 

ஒலி மாசுபாடு

தொழிற்சாலைகள், வாகனங்கள், ஒலிபெருக்கிகள் ஆகியவற்றால் ஏற்படும் இரைச்சல்கள் இவையே இம்மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாகும். இவை முதியோர் மற்றும் பச்சிளம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கின்றன.

இவற்றால் காதுகேளாமை, உயர் இரத்த அழுத்தம, இதயக்கோளாறுகள் போன்றவை ஏற்படுகின்றன.

கப்பல் போக்குவரத்தால் கடலுக்கடியில் ஏற்படும் ஒலி மாசுபாட்டினால் திமிங்கலம் உள்ளிட்ட நீர்வாழ்விலங்குகள் பாதிப்படைகின்றன.

 

கதிரியக்க மாசுபாடு

அணுஉலைககள், கைபேசி டவர்கள், கம்பி இல்லா இணைய மோடம்கள் ஆகியவற்றிலிருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சுக்கள் போன்றவை இம்மாசுபாட்டிற்கு காரணமாகும். இவை பேராபத்தை விளைவிக்கக் கூடியவை.

இவை உயிரினங்களில் பார்வையின்மை, கேன்சர், மலட்டுத்தன்மை, பிறவிக்குறைபாடுகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

 

சுற்றுசூழல் மாசுபாட்டின் விளைவுகள்

மனிதனின் உடல் நலம் பாதித்தல்

காற்றுமாசுபாடு மனிதனுக்கு சுவாசக்கோளாறுகளையும், நுரையீரல் பிரச்சினை, ஆஸ்துமா, இதயநோய், மார்புவலி, நெஞ்செரிச்சல், தொண்டை வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன‌.

நீர்மாசுபாட்டினால் டைபாய்டு, மஞ்சள்காமாலை, தோல்வியாதிகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றது.

ஒலிமாசுபாட்டினால் காதுகேளாமை, ஒளிமாசுபாட்டினால் தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்றை ஏற்படுகின்றன.

 

உலக வெப்பமயமாதல்

காற்றுமாசினால் உண்டாகும் கார்பன்டைஆக்ஸைடின் அளவு அதிகரித்து வெப்பநிலை அதிகரிக்கிறது.

இதனால் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வறட்சி, வெள்ளப்பெருக்கு, கடல்மட்டம் உயருதல், நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன.

 

ஓசோன் மண்டலத்தில் பாதிப்பு

ஓசோன் படலம் என்பது வளிமண்டலத்தில் இருக்கும் கூரை போன்ற அமைப்பாகும். இவை சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களை தடுத்து புவியில் உள்ள உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

காற்று மாசுபாட்டினால் ஓசோன் படலத்தில் துளைகள் ஏற்பட்டு அவை பாதிக்கப்பட்டுள்ளன.

 

வளமில்லா நிலம்

நிலமாசுபாட்டினால் மண் தன் வளமையை இழந்துவிடுகிறது. இதனால் தாவரங்களின் வளர்ச்சி தடை செய்யப்படுகிறது. இதனால் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிகளின் வாழ்க்கைநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சுற்றுசூழல் சீர்கேட்டினால் பாதிப்படைந்த நாம் வாழும் பூமியின் தன்மையை மாற்றுவதோடு நம் வருங்கால சந்ததியினருக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், காற்று ஆகியவற்றை மாசில்லாமல் கொடுப்பதற்கு நம்மால் ஆன முயற்சிகளை எல்லோரும் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

சீர்கேட்டினை ஏற்படுத்தும் செயல்கள் பற்றிய விழிப்புணர்வை எல்லோரிடமும் எடுத்துச் சொல்லி அவற்றை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

வளமையான சுற்றுசூழல் வலிமையான சந்ததியை உருவாக்கும் என்பதனை எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

– வ.முனீஸ்வரன்

One Reply to “சுற்றுச்சூழல் மாசுபாடு”

Comments are closed.