வயநாடு நிலச்சரிவு பேரிடர் பற்றிய கவிதை
அனைத்தும் மடிந்துபோன
மரணச்செய்தியை
விடியலுக்குள் அறிவித்துவிட்டது
பேய் மழையின் பெரும்
துணையோடு நிலச்சரிவுகளின்
நெடும் குரலொன்று
நொடிப்பொழுதில்!
சரித்திரங்கள் படைத்திருக்கலாம்
நாளைய தினமொன்றில்
மண்ணுக்குள் மறைந்து கொண்ட
பொக்கிஷங்கள் யாவும்
தடம் பதித்திருக்கலாம்
பாய்ந்து வந்து பாழாக்குதலை
ஆழ்ந்த உறக்கத்தினூடே
உடுத்து கிடந்த அமைதியை
உருவி எடுத்து கோரக்கரங்களில்
ஆரத்தழுவியது கலவர கசடு
மார்பகங்களில் புதைந்துறங்கிய
புதுப்புது தளிர்கள்
புதைந்து போயின
புரியாமலும் புலராமலும்
உயிர்துடிப்பை உணர்ந்தும்கூட
உருவி எடுக்க இயலாது
உறைந்து கிடக்கிறது
இன்னும் எங்கெங்கோ சடலங்களாய்
துடித்தபடி துவண்டோடும்
அடித்துச்செல்லும் ஆறுகளின்
அடர்த்தியில் கருணைக்கரங்களை
எதிர் நோக்கியபடி
உறைகிறது உயிர்…
கனத்த நெஞ்சாகி
கண்ணீர் வடிக்கிறது
நேற்றைய நிலவரங்களில்
நிழலாடியவைகள் யாவும்
கலவரங்களாய் கரைந்து
சுவடுகளற்று சூன்யமானதில்
தார்மீக பொறுப்பேற்கும்
தகுதி அறியாமையின்
அரைகுட மனிதனுக்குண்டு
மாமழையும் மண்ணும்
இயற்கையின் இதிகாசங்களென
கோபங்களில் கொந்தளிக்காமல்
தளர்வுகள் சில தந்திருக்கலாம்
தவறுகளுக்கான தண்டனைகளை
சற்றேனும் சகித்து
பூமி பிளந்தோடிய வெள்ளம்
கிராமங்கள் புதைத்த மண் சரிவுகள்
கொத்துக்கொத்தாய் உயிர்கள்
செத்துப் போனதாய் சடலங்கள்
பயம் கவ்வியதொரு நாடாய்
இவ்வையகத்தில் வயநாடு!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250