சுவாதி கொலைக்கு தமிழ் சினிமா காரணமா?

எங்கும் சுவாதி எதிலும் சுவாதி என்று ஒரு வாரம் ஓடி விட்டது. சுவாதியைக் கொலை செய்தவன் யார் என்ற மர்மம் விலகிவிட்டது. ராம்குமார் என்ற இளைஞன் கொலையாளி என்று அவனைக் காவலர் கைது செய்திருக்கின்றனர்.

நேற்று என் அலுவலகத்திற்கு வந்த என் நண்பன் சுவாதி கொலைக்குத் தமிழ் சினிமாதான் காரணம் என்று போகிற போக்கில் சொல்லிப் போனான்.

இன்று காலை நான் கடைவீதிக்குச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு முதியவர் இன்னொருவருடன் காரசாரமாக சுவாதி கொலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அவரும் இந்த மாதிரியான‌ இழிசெயலுக்குக் காரணம் சினிமா என்றே சொன்னார்.

தமிழ் சினிமா நம் இளைஞர்களைப் பாழ்படுத்துகிறதோ என்று இரண்டு பேரும் என்னை யோசிக்க வைத்தார்கள்.

ஒரு குடும்பத்தின் முதல் பட்டதாரி மற்றும் இரு தங்கைகளின் அண்ணன் என்ற நிலையோடு கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு இளைஞனின் குறிக்கோள் என்னவாக இருந்திருக்கின்றது என்பதை நினைக்கும்போது மிகவருத்தமாக இருக்கின்றது.

தான் இருக்கும் நிலைக்கு மிகவும் முரண்பட்ட ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காக முயற்சி செய்ய அவனுக்குக் கற்றுக் கொடுத்தது தமிழ் சினிமாதானா?

அழகான‌, நன்கு படித்த, பணக்கார, மேல்தட்டுப் பெண் ஒரு படிக்காத, ஏழை அடித்தட்டுப் பையனைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு விதிவிலக்கான விசயம் என்றே நான் நினைக்கின்றேன்.

ஆனால் அது ஒரு எளிதான அடிக்கடி நடக்கும் விசயம் என்பது போல சித்திகரிக்கும் நிறைய திரைப்படங்கள் ஏழை இளைஞர்கள் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கின்றன என்பதே உண்மை.

மேலும் காமம் என்பதும் காதல் என்பதும் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்காவிட்டாலும் காமம்தான் காதல் எனத் திரைப்படங்கள் கற்றுக் கொடுப்பது போல் தெரிகிறது.

உயர்ந்த லட்சியங்கள் இருக்க வேண்டிய வயதில் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் காசு சம்பாதிக்கிறார்கள்.இதனைப் புரியாத இளைஞர்கள் விட்டில் பூச்சிகளாகி விடுகிறார்கள்.

தான் அழிவதோடு தன்னை நம்பிப் பழகும் அப்பாவிகளின் வாழ்வையும் அழித்துவிடுகிறார்கள்.

மிக அதிகமான சமூக மாற்றம், கடுமையான போட்டி, அதிகமான தொழில் நுட்ப மாற்றம், பரபரப்பான வாழ்க்கை ஆகியவற்றுடன் ஏற்கனவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நல்வழி காட்டாவிட்டாலும் தவறான வழி காட்டாமலிருந்தாலே போதும் என்று தமிழ்ச் சமூகத்தின் சார்பில் தமிழ்த் திரையுலகை வேண்டிக் கொள்கிறோம்.

– வ.முனீஸ்வரன்