ஆதியில் நின்ற அருமொழியாம் – அணி
ஆயிரம் கொண்ட தனிமொழியாம்
ஓதிடும் செம்மொழி யாவினுமே – புகழ்
ஓங்கி இருக்கும் தமிழ்மொழியே!
அறிவு சிறந்திட நெறியருளும் – அன்பு
ஆர்ந்த வழிசொலும் நூல்கள்தரும்
செறிவு மிகுந்த பொருளுணர்த்தும் – பல
தீங்கவி யாக்கித் தெளிவளிக்கும்
சோர்வுறும் போது துணிவுதரும் – துயர்
சூழ்ந்திடும் போது துணையிருக்கும்
ஆர்வம் உடையவர்க் காற்றல்தந்தே – அவர்க்கு
அருங்கவி பாடும் வலிமைதரும்
விருத்தம் எனும்சுவை விருந்தளித்தே – உயர்
வெண்பா எனும்நறும் தேன்பொழிந்து
பொருந்தும் கலியினில் பண்ணமைத்தே – புகழ்
புரிந்து மிளிர்பவள் தமிழன்னை
சிந்து கவிதையில் களிநடனம் – ஆடிச்
சிந்தை களிப்புறச் செய்திடுவாள்
சந்தம் மிகுந்திடும் பள்ளுச்சொல்லித் – தினத்
தாளத் திசைமழை பெய்திடுவாள்
கன்னல் கரும்பின் சுவையதனை – வெல்லும்
காதல் சுவையுடை காவியங்கள்
அன்னை எமக்களித் தேற்றமுற்றாள் – நெஞ்சை
ஆளும் தமிழமு தூற்றிவிட்டாள்!
இமயவரம்பன்