சூடு – சிறுகதை

சூடு

இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு சூடு வைக்கப் போகிறார்கள்…

அடுப்பு நன்றாக எரிந்து கொண்டிருந்தது. அம்மா அதில் இரும்புக் கம்பியை சொருகி வைத்திருந்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு கையில் சூடு வைக்கப் போகிறார்கள்.

கம்பி சூடாகும் வரை எனக்கு அடி விழுந்து கொண்டிருந்தது. அதுவும் உள்ளங்கையில்தான்

நல்ல கட்டை கம்பால், “இந்த கை தானே எழுதியது, இந்த கை தானே எழுதியது” என விடாமல் அம்மா திட்டிக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தாள்.

எதிரே வந்தனாவின் அப்பா கோபமாக உட்கார்ந்திருந்தார்.

 

வெளியில் இரண்டு பேர் பிடித்திருக்க நடுவில் ரொம்ப கவலைக்கிடமான நிலையில் மதியழகன் நின்று கொண்டிருந்தான்.

அவன்தான் காரணம், துரோகி.

அவன் முகம் வீங்கியிருந்தது. ஏற்கனவே நல்ல கவனிப்பு போலும். ஆனால் கையில், காலில் எதுவும் சூடு வைத்தது போல் தெரியவில்லை.

எனக்கு சூடு உறுதியாகி விட்டது.

அது சரி, குற்றத்திற்கு ஏற்ற தண்டனைதானே கிடைக்கும்.

எல்லாவற்றையும் போட்டுக் கொடுத்து விட்டான்.

 

நான், மதியழகன், செல்லப்பாண்டியன் மூவரும் நண்பர்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் செல்லப்பாண்டியன் காதல் விவகாரம் யாருக்கும் அவ்வளவாக தெரியாது.

செல்லப்பாண்டியன் எங்கள் மூவரில் நான்கு வயது மூத்தவன். கொஞ்சம் விபரம் தெரிந்தவன். ஸ்டைலான ஆளும்கூட. அவன் வந்தனாவுக்கு மிகப் பொருத்தமானவன்தான்.

வந்தனாவும் செல்லப்பாண்டியனும் நேற்று இரவு ஊரைவிட்டு போய்விட்டார்கள். பதிவு திருமணம் செய்து கொண்டு பாண்டிச்சேரியில் வீடு எடுத்து தங்குகிறார்கள் என மதியழகன் எல்லா கதையும் ஒன்று விடாமல் சொல்லி விட்டான். சொல்லி அப்ரூவராக மாறி விட்டான்.

செல்லப்பாண்டியன், வந்தனா காதல் வளர உதவி செய்த விபரத்தையும், வந்தனாவுக்கு 100-க்கு மேல் காதல் கடிதத்தை, கவிதையை செல்லப்பாண்டியன் எழுதுவது போல் எழுதிக் கொடுத்தது மணிகண்டன்தான் என்ற என்னை முதல் குற்றவாளியாக சேர்த்து விட்டுவிட்டான்.

 

அம்மா அடித்தால் நான் சிறுவயதாக இருக்கும் காலத்தில் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிவிடுவேன்.

இப்போது வளர்ந்த மாடாக இருப்பதால், அம்மாவை விட உயரம் அதிகம் என்பதால் மற்றும் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் வசதியாக கீழே உட்கார்ந்து முழு ஒத்துழைப்பு தருகிறேன்.

அடிப்பதால் எதுவும் பிரச்சினை இல்லை. அம்மாவுக்குத்தான் கை வலிக்கும்.

வந்தனாவின் அப்பா வீடு தேடி வந்தது, அம்மா சூடு வைக்கும் முடிவுக்கு போனது, அப்பாவுக்கு மேட்டர் தெரிந்தால் என்னவாகும் என்பதெல்லாம் தான் கம்பெனிக்கு பெரும் கவலையாக இருந்தது.

அந்த காட்டிக் கொடுத்த நாய் மதியழகன் வேறு, எப்படா எனக்கு சூடு வைப்பார்கள் என்று ஆவலாக பார்த்துக் கொண்டு நிற்கிறான்…

அடி, விடாமல் விழுந்து கொண்டிருந்தது. கம்பியும் சூடாகி விட்டது.

அம்மா துணியை வைத்து பிடித்து கம்பியை எடுத்து வந்து விட்டாள். கம்பி நன்றாக சூடாகி புகைந்து கொண்டிருந்தது.

கையை தயாராக நீட்டி வைத்திருந்தேன். அம்மா திட்டிக் கொண்டே நெருங்கினாள்…

திடீரென வந்தனா அப்பா எழுந்து கம்பியைப் பிடுங்கி வெளியில் தூக்கி எறிந்தார்.

“விடுங்க அண்ணி, காலேஜ் படிக்கிற வயசு, அடிக்கிறது, சூடு வைக்கிறது, எல்லாம் சரிப்பட்டு வராது. அப்புறம் அந்த நாய்ங்க ஓடி போனதுக்கு இவன தண்டித்து என்ன புண்ணியம்…” என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்.

அப்பாடா சூட்டிலிருந்து தப்பித்தோம்….

கடவுள் இருக்காண்டா குமாரு மொமெண்ட்.

 

காலம் உருண்டோடியது. செல்லப்பாண்டியனும், மதியழகனும் ஸ்டேட் போலீசில் வேலைக்கு சேர்ந்தார்கள். நான் மத்திய போலீசில் ஐக்கியமானேன்.

ஒருநாள் மதியழகன் எனக்கு போன் செய்தான்.

செல்லப்பாண்டியன் மனைவி வந்தனா, தன்கூட படித்த வேறு ஒரு பையனுடன் கைக்குழந்தையையும் எடுத்துக் கொண்டு போய் விட்டாள் என்றும், செல்லபாண்டியன் மிகவும் உடைந்து போய் கூனி, குறுகி இருப்பதாகவும் சொன்னான். எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

பின்பு விடுப்பில் போனபோது செல்லப்பாண்டியன் வீட்டுக்கு போனேன். என்னைப் பார்த்ததும்  ரொம்பவும் உற்சாகமாக வரவேற்றான்.

செல்லப்பாண்டின் நல்ல ஸ்மார்ட்டாக இருந்தான். தொப்பைகூட இல்லை. எந்த வருத்தமும் இல்லாமல்தான் இருப்பதுபோல் தெரிந்தது.

நான் மத்திய போலீஸ் பற்றியும், அவன் மாநில போலீஸ் பற்றியும் மாறி மாறி பேசினோம். வந்தனாவை பற்றி கேட்காமல் வந்து விடலாமா என நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் வந்தனா பற்றி பேச ஆரம்பித்தான்.

 

நான் எழுதிக் கொடுத்த காதல் கடிதங்கள், கவிதைகள் எல்லாவற்றையும் சொல்லி கேலி செய்தான். அதெல்லாம் இன்னமும் வந்தனாவின் அலமாரியில்தான் இருக்கிறது என திறந்து காண்பித்தான்.

அதில் வந்தனாவின் உடைகள், தலைக்கு போடும் கிளிப் இன்னும் பல அவளின் பொருட்கள் அனைத்தும் அடுக்கி பத்திரமாக வைத்திருந்தான்.

அவன் கண் திடீரென்று கலங்குகிறது. எனக்கும் ஒருமாதிரி கலக்கமாக இருந்தது.

எப்படி வந்தனாவால் போக முடிந்தது. உருகி உருகி காதலித்த இவர்கள் எங்கே தடுமாறிப் போனார்கள்… எல்லாம் புதிராக இருந்தது.

நான் எழுதிய கவிதை தாள்களை எடுத்து என் கையில் கொடுத்தான்.

நான் ஒரு நோட்டம் விட்டுவிட்டு “எல்லாம் பொய் செல்லப்பாண்டி, பொய் கவிதைகள்” என்று சொன்னேன்.

“இல்ல மணி, கவிதைகள் அனைத்தும் உண்மை. மனிதர்கள்தான் பொய்யானவர்கள்” என்றான்.

நான் அவன் தோள்களை பிடித்துக் கொண்டேன்.

“நீ, ஏன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது?” என்றேன்.

“வேண்டாம் மணி, எல்லா பெண்களுக்கும் போலீஸ் யூனிஃபார்ம், அந்த தோற்றம் எல்லாம் பிடிக்கும். அந்த வேலை பிடிக்காது. போலீஸ் வேலைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் ஏழாம் பொருத்தம்தான்…”

 

என் வீட்டிற்குச் சென்ற போதும் மனம் செல்லப்பாண்டியனையும் வந்தனாவையும்தான் யோசித்துக் கொண்டிருந்தது.

அம்மா அன்று சூடு வைத்திருந்தால் கூட இன்னேரம் காயம், தழும்பு எல்லாமே ஆறி இருக்கும்…

செல்லப்பாண்டியன் வாழ்க்கை ஆறாத காயமாகி நிற்கிறதே…

“என்ன கையையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்; வலிக்குதா?” என கேட்டாள் அம்மா.

“இல்லம்மா” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்து விட்டேன்.

இன்னமும் மனது வலித்து கொண்டுதான் இருக்கிறது…

முனைவர் க. வீரமணி
சென்னை
9080420849

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“சூடு – சிறுகதை” அதற்கு 8 மறுமொழிகள்

  1. Kavinraj K

    அற்புதமான நெகிழ்வான கதை. நட்பு மற்றும் காதல் பற்றிய தெளிவு மிகவும் பிடித்திருந்தது.. பாராட்டுக்கள் மற்றும் நன்றி தேவரே! மறவாமல் அடுத்த படைப்பினை அனுப்ப வேண்டுகிறேன்…
    Excellent 😊👌☺️

  2. பாரதிசந்திரன்

    தங்கள் சிறுகதை காதல் உணர்வு.சமூகத்தாக்கம். எதார்த்தத்தை மீறிய செயல் காதல் தோற்ற வலி.நினைவுகள். இவையெல்லாம் சிறுகதையில் அழகாக படமாக்கப்பட்டுள்ளது சிறப்பு இன்னும் இன்னும் நிறைய சிறுகதைகள் தங்களிடம் எதிர்பார்க்கின்றோம்

  3. komalavalli

    உண்மை தான். காக்கி சட்டை போடுபவருக்கும் குடும்ப வாழ்கைக்கும் ஏழாம் பொருத்தம். அருமையாக எதார்த்தமாக எழுதி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

  4. இராமையா

    கதையை வாசித்து முடிக்கும் போது மனம் கனக்கின்றது.

    கையில் சூடு பட்டு விடுமோ என்று பதறிய நமது மனம், அந்தக் காதல் தோற்றதை அறிந்ததும், அதை விட‌ மிக அதிகமாய்ப் பதறுகிறது.‌‌

    வந்தனாவையும் வில்லியாக்க விரும்பாத செல்ல்ப்பாண்டியன் மனமும் நம்மைக் காயப்படுத்துகிறது.

    மணியின் கையில் படாத காயம் நம் மனதில் பட்டு விடுகிறது. ‌

  5. Archana S

    This story conveyed the Matter of reality which circulate in the social context. Dr.Veeramani portrays that in a short but it paved the content deep. CONGRATS SIR

  6. Mahi M

    கதை இன்னும் என் மனதை விட்டு மீளவில்லை சிறப்பு ஐயா..

  7. Parameswari

    Very Nice Story and excellent finishing dialogue. Keep going sir. Expecting more stories like this. Waiting for that……