ரஜினி தனது நடை, உடை, பாவனை மற்றும் பேச்சில் தனக்கென்று தனி பாணிகளைக் கொண்டு ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளையடித்தவர்.
ரசிகர்களால் இவர் தலைவா என்று அழைக்கப்படுகின்றனர். தமிழ் திரைப்பட உலகில் புகழ்பெற்ற நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார்.
ரஜினி இந்தியாவில் மட்டுமல்லாது ஜப்பான் நாட்டிலும் ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
இவருடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவைகளே இவரை சாதாரண நிலையிலிருந்து இன்று சூப்பர் ஸ்டார் நிலைக்கு மாற்றியுள்ளது.
1975-ல் தொடங்கிய இவரது கலைப் பயணம் தற்போதும் தொடர்கிறது. இதுவரை சுமார் 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி பத்ம பூசண், பத்ம விபூசண் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.
சாதாரண பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கி நடிப்புத்துறையில் சிறுவேடத்தில் நடித்து பின் வில்லனாகி, வில்லனிலிருந்து கதாநாயகனாக மாறி பின் சூப்பர் ஸ்டாராக உருவான வர் ரஜினி.
இளமைக் காலம்
இவர் 12.12.1950-ல் பெங்களுரில் மராட்டியக் குடும்பத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சிவாஜிராவ் கைக்வாட். இவரது பெற்றோர் ராமோசி ராவ், ராமாபாய் ஆவர்.
இவருக்கு இரு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உண்டு. இவரது தந்தை கர்நாடக மாநிலத்தின் காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்தவர். இவர் தனது ஐந்து வயதில் தாயை இழந்தார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை பெங்களுரில் உள்ள ஆசாரிய பாடசாலையில் கற்றார். உயர்நிலைக் கல்வியை விவேகானந்த பால சங்கத்தில் பயின்றார்.
இவர் இளம் வயதிலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். தச்சுத் தொழிலாளியாகவும், கூலித் தொழிவாளியாகவும் பணிபுரிந்துள்ளார். பின் பெங்களுரு பேக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்தார். அப்போது மேடை நாடகங்களில் பங்கேற்றார்.
சிவாஜிராவ் ரஜினிகாந்தாக மாறியது
நடிப்பில் ஆர்வம் கொண்டதால் நண்பரின் உதவியுடன் 1973-ல் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சியை மேற்கொண்டார்.
திரைப்படக் கல்லூரியில் பயின்ற போது அங்கு வந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் இவருக்கு அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். இப்படத்தில் சிறிய வேடத்தில் வயதான நோயாளியாக நடித்தார். இதுவே இவரது முதல் படமாகும்.
இப்படத்தில்தான் இவருக்கு இயக்குநர் கே. பாலச்சந்தர் தான் எழுதிய மேஜர் சந்திர காந்த் நாடகத்தில் இடம் பெறும் சந்திரகாந்தின் இளைய மகனான ரஜினிகாந்த் என்ற பெயரை இவருக்கு வைத்தார். அப்பெயர் மூலமே தற்போது வரை இவர் எல்லோராலும் அறியப்படுகிறார்.
திரைப்படத்தில் வில்லனாக
அபூர்வ ராகங்களைத் தொடர்ந்து கதாசங்கமா என்ற கன்னடப் படத்திலும், அந்துலோனி கதா என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
மூன்று முடிச்சுப் படத்தில் நடித்ததன் மூலம் தான் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். இப்படத்தில் சிகரட்டை தூக்கிப் போட்டு வாயில் பிடிப்பது என்ற தனிபாணியை வெளிப்படுத்தினார்.
அதன்பின் அவர் பாலுஜூனு என்ற கன்னடப்படத்தில் நடித்தார். பின் 1977-ல் அவர்கள், கவிக்குயில், 16 வயதினிலே, ஆடுபுலிஆட்டம், புவனா ஒரு கேள்விக் குறி உள்ளிட்ட 15 படங்களில் நடித்தார். மூன்று முடிச்சு, 16 வயதினிலே, அவர்கள் படங்களில் சிறந்த வில்லனாக நடித்து தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.
கதாநாயகனாக
இயக்குநர் எஸ்.பி.முத்து ராமன் தான் வில்லனாக நடித்து வந்த ரஜினியை நல்லவனாக புவனா ஒரு கேள்விக் குறி படத்தில் நடிக்க வைத்தார். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். இப்படங்களில் பாசமிகு அண்ணனாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பெற்றார்.
பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை போன்ற படங்களில் அதிரடிக் கதாநாயகனாக நடித்தார். இப்படங்களில் தனக்கேயான தனிப்பாணியில் நடை, உடை, பாவனைகளை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
தில்லு முல்லு படத்தில் நடித்து தனது நகைச்சுவை உணர்வினை வெளிப்படுத்தினார். இவரது 50-வது படம் டைகர் என்ற தெலுங்குப் படமாகும். ரஜினியின் 100-வது படமான ஸ்ரீராகவேந்திராவில் ராகவேந்திரராக நடித்து தனது அமைதியான மற்றும் ஆழமான நடிப்பினை வெளிப்படுத்தினார்.
1978-ல் ப்ரியா, பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது, ஆயிரம் ஜென்மங்கள், தப்புத் தாளங்கள் உள்ளிட்ட 21 திரைப்படங்களில் நடித்தார்.
1979-ல் அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை, நினைத்தாலே இனிக்கும், டைகர், அலாவுதீனும் அற்புதவிளக்கும் உள்ளிட்ட 14 திரைப்படங்களில் நடித்தார்.
1980-ல் ரஜினி நடித்து வெளி வந்த ஜானி, காளி, அன்புக்கு நான் அடிமை, பொல்லாதவன், முரட்டுக் காளை, பில்லா ஆகியவை ரஜினிக்கு பேருரையும் புகழையும் பெற்றுத் தந்தன.
1981-ல் வெளி வந்த ராணுவவீரன், தில்லு முல்லு, நெற்றிக்கண், கழுகு, தீ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பை மிளிர வைத்தன. 1982-83-ல் வெளி வந்த புதுக்கவிதை, தங்கமகன், அடுத்தவாரிசு ஆகிய திரைப்படங்கள் ரஜினியை துடிப்பான இளம் காதலானாக ஜொலிக்கச் செய்தன.
1985-1990க்குள் வெளி வந்த படிக்காதவன், மிஸ்டர் பாரத், வேலைக்காரன், மனிதன், குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, பணக்காரன், அதிசயப்பிறவி போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றன.
1990-2000க்குள் ரஜினி நடிப்பில் வெளிவந்த தளபதி, மன்னன், அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா ஆகியவை அதிக வசூலைக் குவித்தவை.
அதன்பின் சந்திரமுகி, சிவாஜி, பாபா, எந்திரன், குசேலன், கோச்சடையான், லிங்கா ஆகிய திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளி வந்துள்ளன.
தற்போது எந்திரன்-2 திரைபடத்தில் ரஜினி நடித்துக் கொண்டுள்ளார். ரஜினியின் நடிப்பில் தற்போது கபாலி திரைப்படம் வெளிவந்துள்ளது.
பஞ்ச் டயலாக்ஸ்
ரஜினி தனது படங்களில் பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். இவருடைய பஞ்ச் டயலாக்குகள் சாதாரண மக்கள் முதல் பெரிய மனிதர்கள் வரை பேச்சுவாக்கில் பயன்படுத்தப்படுகின்றன. இன்றுவரை இவரது பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களை ரசிக்கச் செய்கின்றன.
16 வயதினிலே – இது எப்படி இருக்கு?
முத்து – எப்ப வருவேன் எப்ப வருவேன்னு தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில கரக்டா வருவேன்
அண்ணாமலை – கஷ்டபடாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்கும் நிலைக்காது.
பாட்ஷா – நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.
படையப்பா – என் வழி தனி வழி, அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும், அளவுக்கு அதிகமாக ஆசைப்படுற ஆம்பிளையும் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை.
பாபா – நா லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்.
சிவாஜி – பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல, சிங்கம் சிங்குளாதான் வரும், பன்னிங்கதான் கூட்டமா வரும்.
குடும்ப வாழ்க்கை
ரஜினி லதா என்பவரை 1981-ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஐசுவர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர்.
ரஜினி பற்றிய புத்தகங்கள்
ரஜினியின் பஞ்ச தந்திரம் என்னும் தலைப்பில் இவரது படங்களில் உள்ள முத்திரை வசனங்கள் மூலம் மேலாண்மை தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன. இது ஆங்கில வடிவிலும் கிடைக்கிறது.
பாபாவும் நானும்: ரஜினியை சந்தித்தது முதல் ரஜினியுடனான சம்பவங்களை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார்.
ரஜினி: இப்புத்தகத்தில் அபூர்வ ராகங்கள் முதல் எந்திரன் வரையிலான ரஜினியின் திரைப்பட விமர்சனங்கள் பைம்பொழில் மீரான் என்பவரால் எழுதப்பட்டுள்ளன.
விருதுகள்
2000-ல் பத்ம பூசன், 2016-ல் பத்மவிபூசன் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
1984-ல் கலைமாமணி விருது
1989-ல் எம்.ஜி.ஆர் விருது
1978-ல் முள்ளும் மலரும், 1982-ல் மூன்று முகம், 1984-ல் நல்லவனுக்கு நல்லவன், 1994-ல் முத்து, 1999-ல் படையப்பா, 2005-ல் சந்திரமுகி, 2007-ல் சிவாஜி ஆகியவைகளுக்கு தமிழக அரசு திரைப்பட விருதுகளை வழங்கியுள்ளது.
1977-ல் புவனா ஒரு கேள்விக்குறி, 1978-ல் முள்ளும் மலரும், 1979-ல் ஆறிலிருந்து அறுபது வரை, 1982-ல் எங்கேயோ கேட்ட குரல், 1984-ல் நல்லவனுக்கு நல்லவன், 1985-ல் – ஸ்ரீராகவேந்திரா, 1991-ல் தளபதி, 1992-ல் அண்ணாமலை, 1993-ல் வள்ளி, 1995-ல் முத்து, பாட்ஷா ஆகியவைகளுக்கு பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நகைசுவை, அதிரடி, காதல், வில்லன், குணச்சித்திரம் என எல்லா நிலையிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்.
சாதாரண நிலையில் இருந்து தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி மூலம் சூப்பர் ஸ்டார் நிலைக்கு உயர்ந்துள்ள ரஜினியின் வாழ்க்கை முயன்றால் முடியும் என்பதற்கு உதாரணம். நாமும் முயற்சி செய்து முன்னேறுவோம்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!