மூலிகைச் சரக்குகளை நன்கு இடித்து சலித்துச் சுத்தி செய்து பயன்படுத்தும் முறை சூரணம் எனப்படும். இவ்வாறு தயார் செய்யப்படும் சூரணத்தை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
அசைச்சூரணம்
175 கிராம் சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் மூழ்குமாறு ஊற வைத்து நிழலில் உலர்த்தவும். இதே போல் முறையே கருப்பஞ்சாறு, முசு முசுக்கைச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு, தூதுவேளைச் சாறு, வேம்பின்பட்டைச் சாறு, தும்பை இலைச்சாறு ஆகியவைகளிலும் ஊற வைத்து நிழலில் உலர்த்தவும். நன்கு காய்ந்ததும் பொடித்துக் கால்பங்கு சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட கலவையிலிருந்து ஒன்று முதல் இரண்டு கிராம் வரை எடுத்து தினமும் இரு வேளை வீதம் நாற்பது நாட்கள் உண்ணவும். இவ்வாறு செய்தால் பித்தம், கிறுகிறுப்பு, வாந்தி, சூடு, மந்தம் ஆகியன தீரும்.
பஞ்சதீபாக்கினிச் சூரணம்
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் ஆகியன வகைக்கு 35 கிராம் எடுத்து, இளவறுப்பாய் வறுத்து இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும். இதனுடன் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட கலவையிலிருந்து ஒன்று முதல் இரண்டு கிராம் வரை எடுத்து தேன் அல்லது நெய்யில் உண்ணவும். இவ்வாறு செய்தால் சூடு, சூலை, செரியாமை, மயக்கம், வெள்ளை படுதல், மூலம் ஆகியவை குணமாகும்.
அமுக்காராச் சூரணம்
கிராம்பு – 1 பங்கு
சிறுநாகப்பூ – 2 பங்கு
ஏலம் – 4 பங்கு
மிளகு – 8 பங்கு
திப்பிலி – 16 பங்கு
சுக்கு – 32 பங்கு
அமுக்கரா – 64 பங்கு
சர்க்கரை – 128 பங்கு
மேற்கண்ட சரக்குகளில் சர்க்கரை நீங்கலாக அனைத்தையும் சுத்தி செய்து இடித்து தூளாக்கி சர்க்கரையுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட கலவையில் இருந்து ஒன்று முதல் இரண்டு கிராம் வரை எடுத்து பாலுடன் தினமும் இரு வேளை உண்ண வேண்டும். இதனால் வாய்வு, வயிற்றுப்புண், ஈரல் நோய், விக்கல், பாண்டு, வறட்சி, கைகால் எரிவு ஆகியன தீரும்.
ஏலாதிச் சூரணம்
கிராம்பு – 1 பங்கு
மிளகு – 2 பங்கு
சிறுநாகப்பூ – 4 பங்கு
தாளிசம் – 8 பங்கு
கூகைநீறு – 16 பங்கு
சுக்கு – 32 பங்கு
ஏலக்காய் – 64 பங்கு
மேலே கூறிய சரக்குகள் அனைத்தையும் சுத்தி செய்து இடித்துத் தூளாக்கிக் கொண்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட கலவையிலிருந்து ஒன்று முதல் இரண்டு கிராம் வரை எடுத்து தினமும் இருவெளை உண்ண வேண்டும். இவ்வாறு செய்து வர பித்தம், வாந்தி, வயிற்றுப் பொருமல், பெரும்பாடு ஆகியன தீரும்.
காவிக்கல் சூரணம்
ஏலவரிசி, காவிக்கல் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துச் சுத்தி செய்து பொடித்துக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட கலவையிலிருந்து ஒன்று முதல் இரண்டு கிராம் வரை எடுத்து நீரில் தினமும் இரு வேளை கலந்து குடிக்க மூலம், வயிற்றுப்புண், வாய்குமட்டல் ஆகியன தீரும்.
திரிபலாச் சூரணம்
கடுக்காய்த் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய்த் தோல் ஆகியவைகளைத் தனித் தனியே பொடித்துச் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட கலவையிலிருந்து ஒன்று முதல் ஐந்து கிராம் வரை தினமும் இருவேளை உண்ண மலக்கட்டு, கழிச்சல் மற்றும் சோகை ஆகியன தீரும்.
திரிகடுகுக் சூரணம்
சுக்கு (தோல் நீக்கியது), மிளகு, திப்பிலி வகைக்குச் சம அளவு எடுத்து பொன் வறுவலாக வறுத்து நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் சம பங்கு சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும்.
மேற்கண்ட கலவையிலிருந்து ஒன்று முதல் இரண்டு கிராம் வரை தினமும் மூன்று வேளை தேனுடன் கலந்து உண்ண அசீரணம், வயிற்றுப் பொருமல், பசியின்மை ஆகியன தீரும்.