“விஸ்வேஸ்வர் சார் வர்ற வாரத்திலே ரிடையர் ஆகப்போகிறாரே? பிரிவுபசார விழா ஏதாவது நடத்த வேண்டாமா?”
“ஆமாங்காணும், நீங்களும் நானும் பேசி என்ன பண்றது? எல்லோருமாச் சேர்ந்து ஒத்துழைச்சாத்தானே ஏதாவது செய்யலாம்.”
“இந்த ஸ்கூல்லே ஏழெட்டு குரூப் இருக்கேய்யா? எல்லோருமா எப்படிச் சேர்ந்து ஒத்துழைக்கிறது?”
“பாவம் மனுஷர்! முப்பத்தஞ்சு வருஷ சர்வீசிலே, எத்தனை பேரோட பிரிவுபசார விழாவிலே கலந்துக்கிட்டிருக்கிறார்? தானே முன்நின்னு பணம் வசூல் செஞ்சு எவ்வளவு சிறப்பாய் ஒவ்வொருத்தரையும் வழி அனுப்பி வச்சிருக்கிறார்? இப்போ, இவருக்குச் செய்ய நாதியில்லாமப் போயிடுச்சு!”
“பிரிவுபசார விழா மட்டுமா? ஆபீஸ் ஆட்கள் கல்யாணம், மாற்றலாகிப் போறவங்க – இப்படி எத்தனை பேர்களுக்கு அவரும் தன் பங்காகப் பணம் கொடுத்திருக்கிறாரே?”
‘எப்படி இருந்த ஸ்கூல் எப்படி ஆயிடுச்சு பாருங்க! ஓழுங்காய்ச் செயல்பட்டுக்கிட்டிருந்த ஸ்டாஃப் கிளப் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்த இடம் தெரியாம ஆயிடுச்சு!”
“இருந்தாலும், ரொம்ப அநியாயம் சார்… யாரோ ஒரு சிலருக்காக ஒட்டு மொத்தமா ஸ்டாஃப் கிளப்பே இல்லாமல் இருக்கிறது. அவ்வளவு சரியாப்படலே!”
“மனசுக்குப் பிடிச்சவங்க தனியா பார்ட்டி நடத்தறதும், பிடிக்காதவங்க ஒதுங்கியிருப்பதும்… சகிக்கலை… பேரேடுத்த ஒரு கல்வி நிறுவனத்திலே இவ்வளவு பாலிடிக்ஸா? ரொம்ப மோசம்…! சே….!”
அப்பள்ளியின் மதிய இடைவேளையில் ஆசிரியர்கள் அறையில் அமர்ந்திருந்த ஏழெட்டு ஆசிரியர்கள் திடீரென்று மௌனம் ஆயினர்.
ஆயிரத்தைந்நூறு மாணவ-மாணவியர்களையும், அறுபத்தைந்து ஆசிரிய ஆசிரியைகளையும் கொண்ட ஒரு மேல்நிலைப் பள்ளி அது.
நகரின் மிகச் சிறந்த பள்ளிகளுள் ஒன்றாக இருந்த காலம் போய், ஆளாளுக்கு விமர்சிக்கக்கூடிய நிலைக்கு அது இப்போது ஆளாகியிருக்கிறது!
அரசுப் பள்ளியாதலால், ஆசிரிய ஆசிரியைகள், நினைத்த நேரத்தில் மாற்றலாகிப் போவதும், விதவிதமான தலைமையாசிரியர்கள் வருவதும், வகை வகையான ஆசிரிய ஆசிரியைகள் வந்து போவதுமாக நறுமணமற்ற கதம்ப மாலையாக அப்பள்ளி மாறிவிட்டது. பிரிவுகள் ஏற்பட்டு, தான் தோன்றித்தனமாய் செயல்படும் ஓர் அவலநிலை ஏற்பட்டுவிட்டது.
மாணவ–மாணவிகளின் ஒழுங்குநிலைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரிய குடும்பத்திற்குள்ளேயே அதிருப்தி மனப்பான்மையும், ஒருவித அலட்சியப்போக்கும் நிலவ ஆரம்பித்து விட்டது.
இப்படிப்பட்ட ஆரோக்கியமிழந்த சூழ்நிலையில்தான், பழம்பெரும் ஆசிரியரான விஸ்வேஸ்வரன் இன்னும் ஒருவாரத்தில் ஓய்வு பெறப்போகிறார்!
விஸ்வேஸ்வரன் அப்பள்ளியின் ஆரம்பகால ஆசிரியர். மாற்றல் எதுவும் இல்லாமல் அதே பள்ளியில் வெகுகாலமாக இருப்பவர்.
ஏழாண்டுகளுக்கு முன்புதான் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராக அதே பள்ளியில் பதவி உயர்வு பெற்றவர். விஸ்வேஸ்வரனுக்காகவே கணிதப் பாடத்தை விரும்பி எடுத்துக் கொண்டு முன்வரும் மாணவர்கள் ஏராளம்.
எந்த ஒரு பின்தங்கிய மாணவனையும் அதிசயிக்கத்தக்க வகையில் மதிப்பெண்கள் பெறவைப்பதில் அவருக்கு நிகர் அவரே!
விஸ்வேஸ்வரன் கணிதம் கற்றுக் கொடுக்கும் அழகைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
தன்னுடைய ‘ரிடையர்மெண்ட்’ ஆசிரிய – ஆசிரியைகளுள் ஓர் இக்கட்டானப் பிரச்சனையைத் தோற்றுவித்திருப்பதை அறிந்த விஸ்வேஸ்வரன் தனக்காக எவரும், எவ்வித சிரமமும் மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறி, பிரிவுபசார விழாவை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.
அன்று விஸ்வேஸ்வரன் ஓய்வு பெறும் நாள். பள்ளியின் காலைப் பிரார்த்தனை நடந்து முடிந்ததும் மாணவ, மாணவிகளும், ஆசிரிய ஆசிரியைகளுமாகச் சிலர் விஸ்வேஸ்வரனைப் பற்றி, அவர் ஆற்றிய அரியபணி குறித்துப் பேசினர்.
தலைமை ஆசிரியரின் உரைக்குப் பின், மாணவ – மாணவிகள் கலைந்து அவரவர் வகுப்பிற்குச் சென்றனர்.
ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் அவருக்குப் பரிசுப் பொருட்களை வழங்கிப் பாராட்டுக்களும், கைத்தட்டல்களுமாய் உற்சாகமாய் அவரை வழி அனுப்பிக் கொண்டிருந்தனர்.
பின், விஸ்வேஸ்வரன் சக ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் தானே நேரில் விடைபெற்றுக் கொண்டு, பள்ளியைவிட்டு நிரந்தரமாய்ப் பிரியும் துயரம் உள்ளத்தை அழுத்தப் புறப்பட்டுச் சென்றார்.
மறுநாள்.
பள்ளியில் வழக்கமான பிரார்த்தனைக் கூட்டத்திற்காக அனைவரும் குழுமியிருந்தனர். பிரார்த்தனை, உறுதிமொழி எடுத்தல், செய்தி வாசிப்பு யாவும் முடிவடைந்தன. தேசிய கீதத்திற்கு முன், தலைமை ஆசிரியர் ‘மைக்’ முன் வந்து பேச ஆரம்பித்தார்.
“எனதருமை மாணவ -மாணவிகளே, ஆசிரிய நண்பர்களே!
ஒரு சந்தோசமான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் இப்போது உங்கள் முன்வந்து நிற்கிறேன். மதிப்பிற்குரிய நம் விஸ்வேஸ்வரன் சார் அவர்கள் முப்பந்தைந்து வருடங்களாக மகத்தான சேவை புரிந்து நேற்று ஓய்வு பெற்றுச் சென்று விட்டார்.
இன்று அவர் இங்கு இல்லை. ஓய்வுக்குப் பின் அவருக்குக் கிடைக்கவிருக்கும் பி.எஃப், கிராஜூடி பணத்திலிருந்து ஒருதொகையை நன்கொடையாக வழங்கி, வருடா வருடம் பத்தாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பிலும் கணிதத்தில் முழுவதாகத் தேர்ச்சியுறும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபாய் வீதம் ரொக்கப் பரிசு அளிக்கும்படிக் கேட்டுக் கொண்டு, அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.
அடுத்த கல்வி ஆண்டிலிருந்து, அவரது இந்த கோரிக்கையைப் பள்ளி நிறைவேற்ற ஆரம்பிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
மாணவ-மாணவியரின் கைத்தட்டல்களால் அதிர்ந்த மைதானம் அமைதியுற்றதும் தேசிய கீதத்திற்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
அன்று மாலை, பள்ளியின் நூலகத்தில் ‘ஸ்டாஃப் மீட்டிங்’ ஏற்பாடு செய்யப்பட்டது.
தலைமை ஆசிரியர் எவ்விதப் பீடிகையுமின்றி நேராக விஷயத்திற்கு வந்தார்.
“உங்கள் எல்லோருக்கும் உங்கள் சம்பந்தப்பட் ஒரு நல்ல செய்தியைக் கூறவே இந்த சந்திப்பு. விஸ்வேஸ்வரன் சார் மாணவர்களுக்கு மட்டும் அவரது நினைவாக நன்கொடை வழங்கிவிட்டுச் செல்லவில்லை.
அவருக்குக் கிடைக்கவிருக்கும் பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை மாணவ மாணவி மற்றும் ஆசிரிய – ஆசிரியைகளின் சேஷம நலத்துக்காக நன்கொடையாக எடுத்துக் கொள்ளும்படியும், அத்தொகையைப் பள்ளித் தலைவர் பொறுப்பில் ‘விஸ்வேஸ்வர ஆசிரியர் – மாணவர் சேமநலநிதி’ என்கிற கணக்கில் வைத்துக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரது விருப்பப்படி, வருடா, வருடம் ஒரே சமயத்தில் ஐந்து பேர் பயனடையக்கூடிய வகையில் அவரவர்களின் அவசரத் தேவைக்கேற்ப இத்தொகையிலிருந்து ஒவ்வொருவருக்கும் இருபதாயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும்.
மாதம் ஒருசதவிகித குறைந்த வட்டியுடன், பத்துமாத சுபலத் தவணைகளில் அப்பணத்தை திருப்பிச் செலுத்தலாம். முடிவில் கிடைக்கும் வட்டித் தொகையில் பத்தாம் வகுப்பிலும் பன்னிரெண்டாம் வகுப்பிலும் கணிதத்தில் முதலாவது வரும் மாணவனுக்குத் தலா ஐயாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்க ஏற்பாடு செய்துவிட்டு போயிருக்கிறார்.
அவருடைய பரந்த நோக்கத்தையும், தாராள மனப்பான்மையையும் மனமாரப் பாராட்டுகிறேன்.”
ஆசிரிய-ஆசிரியைகள் சிலையென அமர்ந்திருந்தனர். யார் முகத்திலும் ஈயாடவில்லை. விஸ்வேஸ்வரன் சாரின் பெருந்தன்மையான செயல் அவர்கள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனிய வைத்தது.
அப்பள்ளியில் ‘ஸ்டாஃப் கிளப்’ ஒன்றை மீண்டும் தொடங்குவதற்கான உத்வேகமும், தீர்மானமான முடிவும் அவ்வினாடியே அனைவரது மனதிலும் ஒருசேரத் தோன்ற ஆரம்பித்தது.
அடுத்த சில நிமிடங்களில் பள்ளி அலுவலர் சங்கத்தினருக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்னும் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில், ‘ஆசிரிய-ஊழியர் சங்கம்’ எதிர்காலத்திலாவது கடமை தவறாது செயல்பட, தானே கண்ணொளியாக இருந்து, அனைவரது சிறுபிள்ளைத்தனமான போக்கையும் வினாடியில் உணர வைத்து, எல்லோரையும் கண்கள் இருக்கும்போதே, ‘சூரிய நமஸ்காரம்’ செய்ய வைத்த விஸ்வேஸ்வரன் சாரை முதன்முதலாக ஒவ்வொருவரும் நன்றியுடன் நினைக்க ஆரம்பித்தனர்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!