சூறாவளி / சூறைக்காற்றுகள் – பேரிடர் மேலாண்மை

சூறாவளி

சூறாவளி என்பது தீவிர சழற்சியுடன் சுழலும் காற்றுத் தொகுதி ஆகும். அதனை சூறைக்காற்று என்றும் அழைக்கலாம்.

இக்காற்றினால் உருவாகும் கார் திரள் மேகமானது பூமியின் தரைப்பகுதியை புனல் வடிவத்தில் தொட்டுக் கொண்டிருக்கும்.

இக்காற்று சுழற்சியின் அகலம் சில மீட்டரிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக இருக்கும்.

இதன் சுழற்சி வேகம் மணிக்கு 64-509 கி.மீ இடைப்பட்டதாக இருக்கும்.

தீவிர அழுத்தத்தின் காரணமாக இவை உருவாகின்றன. நிலத்தின் மீது உருவாகும்போது வேகமான சுழல் காற்றினை தோற்றுவிக்கின்றன. இவை மேகங்களைத் தொட்டுக் கொண்டு நிலப்பரப்பில் உள்ள எல்லாவற்றையும் சூறையாடிவிடும் தன்மை உடையவை. இவை வானத்தின் சுனாமி என்றழைக்கப்படுகின்றன.

சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் டுவிஸ்டர் என அழைக்கின்றனர். ஏனெனில் சுருள் போல் சுழன்று புனல் வடிவ மேகத்தினை உருவாக்குவதால் இப்பெயர் வழங்கப்பட்டது.

 

சூறாவளி உருவாகும் விதம்

குறிப்பிட்ட திசையிலிருந்து வீசும் வறண்ட வெப்ப காற்றும் அதன் எதிர் திசையில் இருந்து வீசும் ஈரப்பதமான குளிர் காற்றும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது வெளிப்படும் விசையின் காரணமாக சூறாவளி ஏற்படுகின்றது.

மோதல்களால் ஏற்படும் விசையானது அதிகரிக்கும்போது சூறாவளிக்கு பலம் கூடுகிறது. இவை புயலைப் போலவே மிகப்பெரிய உயிர்ச் சேதங்களையும் மற்றும் பொருட்சேதங்களையும் ஏற்படுத்துகின்றன.

வானத்தில் ஏற்படும் சூறாவளியானது பூமியை அடைய 12-13 நிமிடங்கள் எடுத்துக்கொள்கின்றன. இவற்றின் ஆயுட்காலம் 2 முதல் 6 நாட்கள் ஆகும்.

சூறாவளியில் சிக்கும் மனிதர்கள், கால்நடைகள், வாகனங்கள் போன்றவை தூக்கி எறியப்படுகின்றன.

 

சூறாவளியின் வகைகள்

சூறாவளியை மேகச்சூறாவளி, நிலச்சூறாவளி, வன்சுழல் சூறாவளி, நீர்சூறாவளி, தூசிகளின் சாத்தான் சூறாவளி, நெருப்புச்சூறாவளி என வகைப்படுத்தலாம்.

 

மேகச்சூறாவளி

இவ்வகை நிகழும்போது மேகங்களை மையமாக வைத்து கனத்த மேகங்களை இழுத்துக் கொண்டு சுழன்று அடிக்கும்.

இந்நிகழ்வின்போது மழைச் சாரல்கள் ஒருபக்கம் வீசிக்கொண்டும், மற்றொரு பக்கம் சூறைக்காற்றை சுழற்றியபடியும் வீசி பலகிலோமீட்டர் பரப்பளவில் உள்ள எல்லாவற்றையும் சூறையாடி நாசம் உண்டகிறது.

இவ்வகைச் சூறாவளிகள் நிலத்தைத் தொடும்போது அதன் வேகம் 200 கி.மீவரை இருக்கும். இவை பெருத்த சேதத்தினை ஏற்படுத்துகின்றன.

 

நிலச்சூறாவளி

இவ்வகை சூறாவளியானது பலவீனமான மேகங்களை இழுத்துக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும். இவை நிலத்தில் உள்ள மணல் மேடுகளிலிருந்து மணலை வீசிய வண்ணம் சுழன்றடிக்கின்றது.

இவை மேகச்சூறாவளிக்கு அடுத்தபடியாக வேகமாக வீசும் ஆற்றல் பெற்றவை.

 

வன்சுழல்காற்றுச்சூறாவளி

இவை சற்று பலவீனமானவை. இவை வேகம் குறைந்ததாகவும், விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படுகின்றது. இவற்றிற்கு மேகங்களின் தொடர்பிருக்காது.

காற்றின் வேகமே இவை உருவாகக் காரணமாகும். இவ்வகை நிகழும்போது தூசிப்படலம் சற்று அதிகமாகக் காணப்படும்.

 

நீர்சூறாவளி

இவை நீர்நிலைகளில் ஏற்படுகின்றன. இவை நிலத்தில் வீசக்கூடிய மேகச்சூறாவளியைப் போலவே அதிபயங்கரமானவை.

ஆனால் இவைகள் நீரில் ஏற்படுவதால் இவற்றால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவு. இவை நிலத்தை தொடுவதற்குமுன் தன் சக்தியை இழந்து விடுகின்றன.

 

தூசிகளின் சாத்தான்

இவை அதிகமாக பாலைவனங்களில் ஏற்படுகின்றன. இவை உச்சிவெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவை மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும்.

இவைகள் மேகத்துடன் எவ்வித தொடர்பையும் பெற்றிருப்பதில்லை. ஆனால் காற்றின் அழுத்தமே இவை ஏற்படக் காரணமாகும்.

இவை சில நிமிடங்கள் சுழன்றடித்துவிட்டு தனது சக்தியினை இழந்து விடுகின்றன. இவைகள் மிகவும் பலவீனமானவை. இவை தூசிப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களை மிகவும் பாதிக்கின்றன.

இவை சற்று வேகமாக வீசும்போது ஒரு வாகனத்தை தலைகுப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றவை.

 

நெருப்புச்சூறாவளி

இவ்வகை நிகழும்போது காற்றின் உராய்வினால் இலைதழைகள் கருகி நெருப்பை உண்டாக்குகின்றன. இவ்வாறு உருவாகும் நெருப்பை தன்னுள் இழுத்துக் கொண்டு பிற இடங்களுக்கும் பரவச் செய்து பெரும் நாசத்தை ஏற்படுத்துகின்றன.

இவை பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகளை பெருமளவு பாதிப்படைச் செய்கின்றன. 50அடி உயரமான மரத்தைக்கூட இவை சில விநாடிகளில் அழித்துவிடும்.

இவை பொதுவாக 10 முதல் 50மீ உயரமும், 10மீ அகலமும் கொண்டிருக்கும் இவ்வகையில் காற்றின் வேகமானது மணிக்கு 160கி.மீ வேகத்தில் வீசும்.

இவ்வகை சூறாவளி 1923-ல் ஜப்பானின் டோக்கியோவின் அருகே உள்ள கிராமத்தில் ஏற்பட்டு 38000க்கும் மேற்பட்டோரை 15 நிமிடத்தில் நெருப்பால் பொசுக்கி அழியச் செய்தது.

 

இந்தியாவில் ஏற்பட்ட சூறாவளிகள்

மார்ச் 24, 1998-ல் மேற்கு வங்காளம் மற்றும் ஒரிஸாவின் கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களில் 20 கடற்கரையோர கிராமங்களைத் தீவிர சூறைக் காற்றுகள் தாக்கின. 2000 பேர்கள் காயமடைந்தனர்.

படகில் பயணம் செய்த 10 பேர்கள் காற்றினால் ஏறத்தாழ 20 அடி உயரம் வரை தூக்கி எறியப்பட்டு இறந்தார்கள்.

ஒரிசாவில் பலசூர் மாவட்டத்திலுள்ள கோபுர்காட்டா என்ற ஊரில் சூறைக்காற்றினால் பள்ளிக்கட்டிடத்தின் கூரை இடிந்ததில் 35 பள்ளிச் சிறுவர்கள் நசுங்கி மாண்டனர். 15,000 வீடுகள் சேதமடைந்தன மற்றும் 10,000-க்கும் மேலான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.

 

பேரிடர் தணித்தல்

சூறைக்காற்றின் தாக்கம் அறிந்தவுடன் தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் அல்லது வீட்டிலோ பாதுகாப்பு மையத்திலோ இருக்க வேண்டும்.

பழுதடைந்த கட்டடங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். சூறைக்காற்றின் போது வீட்டிற்கு வெளியே இருக்க நேர்ந்தால் அங்கேயே இருக்க வேண்டும்.

சூறைக்காற்றின் வேகம் குறைந்து விட்டது என உறுதியான தகவலை அறிந்த பின்னே வீட்டிற்குச் செல்ல வேண்டும். காயமடைந்த அல்லது காப்பாற்றப்பட்ட மக்களுக்கு உதவுதல் மற்றும் முதலுதவி உடனடியாக கொடுக்க வேண்டும்.

சூறாவளி ஏற்படுத்தும் அழிவினைத் தடுக்க கடற்கரையோரங்களில் காற்றின் சக்தியைத் தடுக்கும் தாவரங்களான பனை, சவுக்கு மற்றும் தென்னை போன்றவற்றை வரிசையாக நடுதல் அவசியம். இவை காற்றின் வேகத்தைக் குறைக்கும் அரண்களாகச் செயல்பட்டு அழிவைக் குறைக்கும்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.