சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்

சூழல் மண்டலம் ஏதோ புதுவார்த்தையா இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறதா?.

இன்றைக்கு, சுற்றுசூழலில் எக்கோ சிஸ்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாக்கியத்தை நாம் அடிக்கடி கேட்க, பார்க்க, படிக்க நேரிடுகிறது.

எக்கோ சிஸ்டம் என்பதே தமிழில் சூழல் மண்டலம் என்றழைக்கப்படுகிறது.

இன்றைக்கு மனிதனின் செயல்பாடுகளால் சூழல் மண்டலம் பெரிய அளவு பாதிக்கப்பட்டு அதனால் கடுமையான விளைவுகளையும் நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.

சூழல் மண்டலம் என்றால் என்ன, அதன் வகைகள், மனித நடவடிக்கைகளால் அதற்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 

சூழல் மண்டலம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் , அவ்விடத்தில் உள்ள உயிரற்ற பொருட்களுடன் ஒன்றுக்கொன்று இயற்கையாகவே தொடர்பு கொண்டு இருப்பதை சூழல் மண்டலம் என்கிறோம்.

சூழல் மண்டலமானது இயற்கை அமைப்பில் வாழும் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது.

தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள், நுண்ணுயிரிகள், நிலம், காற்று, நீர், சூரிய ஒளி, வானிலை, காலநிலை ஆகியவைகள் சூழல் மண்டலத்தில் முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.

 

சூழல் மண்டலத்தின் அமைப்பு

ஆற்றல் கடத்தல் மற்றும் உணவு சங்கலி ஆகிய காரணிகள் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளை சூழல் மண்டலத்தில் ஒன்றுடன் ஒன்றாக இணைத்துள்ளன.

சூழல் மண்டலத்தில் ஆற்றலானது முதலில் சூரியன், வளிமண்டலம் ஆகியவற்றிலிருந்து கடத்தப்படுகிறது.

அதாவது உற்பத்தியாளர்கள் எனப்படும் தாவரங்கள் சூரிய ஒளி, காற்று ஆகியவற்றின் மூலம் உணவினைத் தயாரித்து ஆற்றலை சேமிக்கின்றன.

முதல்நிலை நுகர்வோர்களான மான், முயல், மாடு போன்றவை தாவரங்களை உண்டு ஆற்றலைப் பெறுகின்றன.

இரண்டாம்நிலை நுகர்வோர்களான சிங்கம், புலி  உள்ளிடவை தாவரஉண்ணிகளை உண்டு ஆற்றலை அடைகின்றன.

தாவர, விலங்குகளின் கழிவுகள் மற்றும் இறந்த உடல்களை நுண்ணுயிரிகள் மட்கச் செய்து வளிமண்டலத்திற்கு கார்பன் உள்ளிட்டவைகளை அனுப்புகின்றன.

மீண்டும் இவ்வாற்றலை உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஆற்றல் சூழல் மண்டலத்தில் கடத்தப்படுகிறது.

 

சூழல் மண்டலத்தின் வகைகள்

சூழல் மண்டலமானது நிலச்சூழல் மண்டலம், நீர்ச் சூழல் மண்டலம் என்று இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

நிலச்சூழல் மண்டலமானது காட்டுச்சூழல் மண்டலம், பாலைவனச்சூழல் மண்டலம், புல்வெளிச்சூழல் மண்டலம், மலைப்பகுதிச்சூழல் மண்டலம் என நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

 

காட்டுச்சூழல் மண்டலம்

காடு
காடு

இச்சூழல் மண்டலத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. மிகக்குறைந்த பரப்பில் அதிகமான சிறிய உயிரினங்களை காட்டுச்சூழல் மண்டலம் கொண்டிருக்கிறது.

எனவே காட்டுச்சூழலில் சிறிய பாதிப்பு ஏற்படும்போது அது எதிர்விளைவுகளை அதிகளவில் உண்டாக்கிவிடும். இச்சூழல் மண்டலம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

 

வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்

மழைப்பொழிவு அதிகமாக உள்ள இவ்வகைக் காட்டில் தாவரங்கள் மிகநெருக்கமாகக் காணப்படுகின்றன. இங்கு மரங்கள் உயரமாக வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன.

ஒவ்வொரு மரமும் ஏராளமான விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு புகலிடமாக விளங்குகின்றது.

 

வெப்பமண்டல இலையுதிர் காடுகள்

இவ்வகைக் காட்டில் மரங்களுடன் குற்றுச்செடிகளும், புதர்களும் அதிகளவில் காணப்படுகின்றன. உலகின் சில பகுதிகளில் காணப்படும் இவ்வகைக்காடானது பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு புகலிடமாக உள்ளது.

 

மிதவெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்

இக்காடானது பாசிவகைகள் மற்றும் கூரிய இலைகளை உடைய பூக்காத பன்னம் வகைத் தாவரங்களுக்கு புகலிடமாக உள்ளது.

இக்காட்டில் உள்ள மரங்கள் நீராவிப்போக்கைத் தடுக்க ஊசிவடிவ இலைகளைப் பெற்றுள்ளன.

 

மிதவெப்பமண்டல இலையுதிர் காடுகள்

இக்காடுகள் மிதமான ஈரப்பதத்தையும், போதுமான மழைப்பொழிவையும் பெற்றுள்ளன. இக்காடுகளில் கோடை மற்றும் குளிர் காலம் தெளிவாகப் பிரித்தறியப்படுகிறது. இவை ஏராளமான உயிரினங்களுக்கு புகலிடமாக உள்ளன.

 

ஊசியிலைக் காடுகள் (தைகா)

ஆர்டிக் கடல்பகுதியினை ஒட்டி இருக்கும் ஊசியான இலைகளை உடைய இவை தைகா என்று அழைக்கப்படுகின்றன.

ஆண்டின் பாதிநாட்களில் இங்கு வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவாகவே இருக்கும்.

மீதி நாட்களில் இங்கு இடம் பெயரும் பறவைகள், பூச்சிகள் காணப்படுகின்றன.

 

பாலைவனச்சூழல் மண்டலம்

பாலைவனம்
பாலைவனம்

 

ஆண்டின் மழைப்பொழிவு 25மிமீக்கு குறைவாக இருக்கும் பகுதிகளில் இச்சூழல் மண்டலம் காணப்படுகிறது. உலகின் பரப்பில் 17 சதவீத்தை இவ்வகைச்சூழல் மண்டலம் கொண்டுருக்கிறது.

அதிக வெப்பம், குறைந்த நீர், தீவிரமான சூரியஒளி ஆகியவற்றால் இங்கு உயிரினங்கள் அரிதாகவும், குறைவாகவும் காணப்படுகின்றன.

இங்கு புதர்கள், குற்றுச்செடிகள், அரிய மரங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள தாவரங்களின் தண்டுகள் மற்றும் இலைகள் நீரினை தக்கவைக்கும் வகையில் தகவமைப்பினைப் பெற்றுள்ளன.

இங்குள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் கற்றாழைகள், ஒட்டகங்கள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன ஆகியவை இங்கு காணப்படுகின்றன.

 

புல்வெளிச்சூழல் மண்டலம்

புல்வெளி
புல்வெளி

 

இச்சூழல் மண்டலம் வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் காணப்படுகின்றது. இங்கு அதிகளவு புற்களும், குறைந்தளவு குற்றுச்செடிகள், மரங்கள் காணப்படுகின்றன.

இங்கு புல்கள், செடிகள், பருப்பு வகைகள் என கலந்து உள்ளன. இங்கு தாவரஉண்ணிகள், பூச்சிஉண்ணிகள் காணப்படுகின்றன. சவானா, ஸ்டெப்பி ஆகியவை புல்வெளிச்சூழல் மண்டலத்திற்கு எடுக்காட்டு ஆகும்.

 

மலைப்பகுதிச்சூழல் மண்டலம்

மலைப்பகுதி
மலைப்பகுதி

 

இச்சூழல் மண்டலம் வேறுபட்ட தாவர விலங்குகளைக் கொண்டிருக்கின்றன. உயர்ந்த மலைப்பகுதிகளில் குளிரினைத் தாங்கும் பொருட்டு பைன் வகை மரங்கள் காணப்படுகின்றன.

மேலும் இங்குள்ள விலங்குகள் குளிரினை எதிர்கொள்ள அடர்த்தியான ரோமங்களைப் பெற்றிருக்கின்றன.

மலைச்சரிவுப்பகுதிகளில் ஊசியிலை மரங்கள் உள்ளன.

 

நீர்ச்சூழல் மண்டலம்

நீர்ச்சூழல் மண்டலத்தில் நீரினை பயன்படுத்தி வாழும் உயிரினங்கள் காணப்படுகின்றன.

இச்சூழல் மண்டலம் நன்னீர்சூழல் மண்டலம், கடல்சூழல் மண்டலம் என இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 

நன்னீர்ச்சூழல் மண்டலம்

இது சூழல் மண்டலத்தில் 0.8 சதவீத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் உலகின் நன்னீரானது மேற்பரப்பு நீரில் 0.009 சதவீதத்தினை மட்டுமே பெற்றுள்ளது. இது லென்டிக், லோடிக் மற்றும் நீர்த்தடம் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.

லென்டிக் என்பது குளம், கண்மாய் போன்ற நிலையாக நீர்நிற்கும் நீர்நிலைகளைக் குறிக்கும்.

ஏரி
ஏரி

 

லேடிக் என்பது ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, நீரோடை போன்றவை ஆகும்.

 

ஆறு
ஆறு

 

நீர்த்தடம் என்பது சகதியும், நீரும் உடைய சதுப்பு நிலம், காயல் உள்ளிட்டவைகளைக் குறிக்கும்.

சதுப்பு நிலம்
நீர்த்தடம்

 

நன்னீர்ச்சூழல் மண்டலம் ஊர்வன, இருவாழ்விகள், மீன்கள் ஆகியவற்றிற்கு புகலிடமாக உள்ளது.

உலகில் 41 சதவீத மீன்கள் இச்சூழல் மண்டலத்தில் இருக்கின்றன.

ஓடிக்கொண்டிருக்கும் நீரில் அதிகளவு ஆக்ஸிஜன் உள்ளதால் அதிகளவு நீர்வாழ் உயிரிகளை இச்சூழல் மண்டலம் பெற்றிருக்கிறது.

 

கடல்சூழல் மண்டலம்

 

 

இதுவே உலகின் பெரிய சூழல் மண்டலம் ஆகும். ஏனெனில் கடலானது உலக மேற்பரப்பில் 71 சதவீதத்தைப் பெற்றுள்ளது. மொத்த நீர்ப்பரப்பில் 97 சதவீத நீரினைக் கடல் கொண்டுள்ளது.

இது ஆழமற்ற கடல்சூழல் மண்டலம், ஆழமான கடல்சூழல் மண்டலம், குளிர்நீர்கடல் சூழல்மண்டலம், வெப்பநீர்கடல் சூழல்மண்டலம் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

 

ஆழமற்ற கடல்சூழல் மண்டலம்

 

நிலத்தினை ஒட்டியுள்ள இதில் சிறிய மீன்கள், பவளப்பாறைகள் காணப்படுகின்றன.

 

ஆழமான கடல்சூழல் மண்டலம்

 

உலகின் மிகப்பெரிய உயிரினங்கள், பெரிய மீன்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன. கடலின் அடிப்பரப்பில் வேறுபட்ட உயிரினங்கள் உள்ளன.

 

வெப்பநீர் கடல்சூழல் மண்டலம்

பசிபிக் கடல்
பசிபிக் கடல்

இச்சூழல் மண்டலம் அதிக கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. ஏனெனில் இங்கு வேறுபட்ட உயிரினங்கள் அதிகளவு உள்ளன. பசிபிக் பெருங்கடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

 

குளிர்நீர் கடல்சூழல் மண்டலம்

இது மாறுபட்ட சிக்கலான சூழல் மண்டலம் ஆகும். இங்குதான் மீன்களின் அடிப்படை உணவான பிளாங்டன் அதிகளவு காணப்படுகிறது.

பிளாங்டனை உண்ணும் மீன்களை உணவாகக் கொள்ளும் பெங்குயின், சீல் போன்றவை இச்சூழல் மண்டலத்தில் காணப்படுகின்றன.

பெங்குயின்
பெங்குயின்

 

சீல்
சீல்

மாசுபாட்டினால் சூழல்மண்டலத்தில் ஏற்படும் தாக்கங்கள்

இந்த உலகமானது மாறுபட்ட சூழல் மண்டலங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. மனிதனின் செயல்பாடுகளால் உண்டாகும் மாசுபாடு இவற்றைப் பெரும் அளவில் பாதிக்கின்றன.

நிலமாசுபாடு, காற்று மாசுபாட்டின் காரணமாக நிலச்சூழல் மண்டலம் பெரிதும் பாதிப்படைகிறது.

நீர்மாசுபாடு, காற்று மாசுபாட்டால் நீர்ச்சூழல் மண்டலம் சீர்கேடு அடைகிறது. இதனால் சுற்றுசூழல் சீர்கேடு உண்டவதோடு நாம் பல அரிய உயிரினங்களை இழந்து விடுகிறோம்.

மாசுபாட்டினை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும், நம்மால் முடிந்தளவு தவிர்க்கலாம். எனவே மாசுபாட்டினை தவிர்த்து சூழல் மண்டலத்தை பாதுகாக்க உறுதி கொள்வோம்.

-வ.முனீஸ்வரன்

 

2 Replies to “சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்”

Comments are closed.