செங்கணவன் பால் திசைமுகன் பால்

செங்கணவன் பால் திசைமுகன் பால்

செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால் எனத் தொடங்கும் இப்பாடல், திருவெம்பாவையின் பதினேழாவது பாடல் ஆகும்.

பாண்டிய அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடல்களை, ஒப்பற்ற பேரின்பத்தை அருளும் இறைவரான சிவபெருமானின் மீது பாடினார்.

கி.பி.9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற திருவெம்பாவை பாடல்கள், இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது,  பாடப்படும் சிறப்பினைக் கொண்டுள்ளன.

உயிர்களிடத்து காணப்படும் குற்றங்களை நீக்கி, அவ்வுயிர்கள் ஈடேற்றம் பெறும் பொருட்டு ஒப்பில்லாத பேரின்பத்தை அருளும் இறைவனின் திறத்தினை பற்றிக் கூறுவதாக திருவெம்பாவையின் பதினேழாவது பாடல் அமைந்துள்ளது.

“திருமால், நான்முகன், தேவர்கள் உள்ளிட்டவர்களிடத்து காட்டாத ஒப்பற்ற பேரன்பினை, உயிர்களிடம் அவற்றின் குற்றங்களை நீக்கி வழங்குகிறான். எல்லோருக்கும் அமுதன் போன்று இருப்பவனும் எங்களது தலைவனுமாகிய சிவபெருமானை போற்றிப்பாடி தாமரைக் குளத்தில் நீராடுவோம்.” என்று பாவை நோன்பிருப்பவர்கள் கூறுகின்றனர்.

தன்னுடைய அடியர்களின் உண்மையான அன்பிற்கு ஆட்பட்டு, இறைவன் வானவர்களுக்கும் வழங்காத பேரின்பத்தை தேடி வந்து அருளுவான் என்று இப்பாடல் கூறுகிறது.

இனி திருவெம்பாவை பதினேழாவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 17

செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்

எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக்

கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

இங்கு நம்இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை

அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடலோர் எம்பாவாய்

விளக்கம்

பாவை நோன்பிருக்கும் பெண்கள், “வாசனை நிறைந்த கருமையான கூந்தலை உடைய பெண்களே, சிவந்த கண்களை உடைய திருமாலிடத்தும், நான்கு திருமுகங்களை உடைய பிரம்மனிடத்தும், இந்திரன் முதலான தேவர்களிடத்தும் இல்லாத ஒப்பற்ற பேரின்பத்தை நம்மிடம் இறைவனான சிவபெருமான் வைத்துள்ளார்.

அவர் நம்மிடம் உள்ள குற்றங்களை நீக்கி, அடியார்களின் மனமாகிய வீட்டில் எழுந்தருளி, சிவந்த தாமரை மலரை ஒத்த தன்னுடைய திருவடிகளால் அருள் புரிகிறார்.

அவர் வீரனாகவும், அழகிய கண்களைக் கொண்டு அருள் பார்வை தரும் அரசனாகவும், அடியவர்களுக்கு அரிய அமுதம் போன்றவனாகவும் திகழ்கிறார்.

நம் தலைவனாகிய இறைவனை, நன்மை பயக்குமாறு போற்றிப் பாடி, தாமரை மலர்கள் மலர்ந்துள்ள இப்பொய்கையில் நீராடுவோமாக” என்று கூறுகின்றனர்.

இறைவனிடத்தில் நாம் கொண்டுள்ள நிபந்தனையற்ற அன்பானது,  தேவர்களுக்கும் கிடைக்காத ஒப்பற்ற பேரின்பத்தை நமக்கு பெற்று தரும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.