செங்கல் ‍- சிறுகதை

ஐந்தாயிரம் சதுரடியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தின் ஒரு தளத்தில் நான்கு மணி நேரமாக கரண்ட் இல்லாமல் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.

நூற்றி ஐம்பதிற்குக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேப்பரால் விசிறிக் கொண்டும், திறக்க முடியாத கண்ணாடி ஜன்னல்களை திறக்க முயற்சித்தும் புழுங்கி தவிக்கிறார்கள்.

ஐம்பது கோடி ரூபாய் ப்ராஜெக்ட். ஏற்கனவே இந்த ப்ராஜெக்ட் தாமதமாகி விட்டது. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.

மும்பையிலிருக்கும் கம்பெனிச் சேர்மன் நிமிடத்திற்கு ஒருமுறை போன் செய்கிறார்.

தலைமை ப்ராஜெக்ட் லீடர் செங்கலை பத்ரகாளியாய் மாறி நிற்கிறாள்.

செங்கலை இது போல் பல‌ ப்ராஜெக்ட்டுகளை கனகச்சிதமாக முடித்துக் கொடுத்து இந்த பதவிக்கு வந்திருப்பவள்.

இதுபோல் எத்தனையோ சோதனைகள். தற்போது வந்திருப்பது அடுத்தவர்களின் அலட்சியத்தால் வந்த கஷ்டம். ஃபால் சீலிங் உள்ளே எலி புகுந்து எல்லா வயர்களையும் கடித்துக் குதறி விட்டது.

‘முன்கூட்டியே பார்க்கவில்லை. ஃபால் சீலிங் டிராப் டோரை சரியாக மூடவில்லை. எலி நடமாட்டத்தை கவனிக்கவில்லை’ என்று பல குறைபாடுகள்.

செங்கலை, அட்மின் டிபார்ட்மெண்டை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாள். கொலை மட்டும்தான் செய்யவில்லை.

பெரிய பெரிய இன்ஜினியர்கள் எல்லாம் சூழ்ந்து கொண்டு சரி செய்ய முயற்சிக்கிறார்கள். முடியவில்லை.

செங்கலைக்கு டென்ஷன் ஏறிக்கொண்டே போகிறது.

செங்கலையின் பதற்றத்தை சக அதிகாரிகள், ஊழியர்கள் ரசிக்கிறார்கள்.

“நன்றாக படட்டும்” என்று பேசிக்கொள்கிறார்கள்.

செங்கலைக்கு நண்பர்களைவிட எதிரிகள் அதிகம். குறிப்பாக ஆண்கள்.

செங்கலைக்கு ஆண்கள் என்றாலே பெருங்கசப்பு. எல்லோரும் பொய்யானவர்கள், சீன் போடுபவர்கள், காம பிசாசுகள், போதை ஆசாமிகள் என்று பொதுப்படையான கருத்து கொண்டவள்.

யாரையும் மதிப்பதில்லை. யாரையும் நம்புவதில்லை. 35 வயதாகிறது, காதலுமில்லை கத்தரிக்காயுமில்லை, கல்யாணமும் செய்து கொள்ளவில்லை.

தன் அம்மாவை ஏமாற்றி கைக்குழந்தையுடன் விட்டு சென்ற தன் தகப்பனின் மீதுள்ள பெருங்கோபம் இன்னமும் கனலாய் தகிக்கிறது.

அம்மாவும் உறவினர்களும் எவ்வள‌வோ சொல்லிவிட்டார்கள். செங்கலை கேட்பதாயில்லை.

யாருக்கும் இரக்கம் காட்டாத, கொஞ்சம்கூட அன்பற்ற இவள், அணுகுமுறையால் ஓர் உணர்ச்சியற்ற சுட்ட ‘செங்கல்’ என்ற பட்டப்பெயரை அலுவலக ஊழியர்களால் பெற்றுள்ளாள்.

அலுவலகம் முழுதும் இவள் பட்ட பெயர் பிரபலம்.

சாதாரண ஹவுஸ் கீப்பிங் பையன் முதல் அதிகாரிகள் வரை இவளை “செங்கல் மேடம், செங்கல் மேடம்” என்றுதான் அழைக்கிறார்கள்.

செங்கலை என்கிற அந்த பெண்சிங்கம் இந்த கரண்ட் கட் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் உறுமுகிறது.

“இதோ இப்போது சரி செய்து விடலாம்” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நடந்த பாடில்லை.

மும்பையிலிருந்து சேர்மன் “என்ன செய்தால் சரியாகும்? யார் வந்தால் சரியாகும்? எவ்வளவு செலவானாலும் பரவயில்லை. பெரிய எஞ்சினியரை உடனே கூப்பிடுங்கள்” என்று உத்தரவிடுகிறார்.

பெரிய இன்ஜினியர் எல்லாம் தேவையில்லை; இந்த கம்பெனியின் ஆஸ்தான எலக்ட்ரீசியன் வாசுதேவன் போதும். இந்த ஒயரிங் மொத்தமும் அவனுக்கு அத்துப்படி. அவன் கட்டாயம் சரி செய்து விடுவான்.

ஆனால் அவன் நான்கு நாட்களாய் வேலைக்கு வரவில்லை. அவன் அம்மாவுக்கு எப்போது வேண்டுமானாலும் உயிர் போகலாம் என்ற ரொம்ப மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதால் அவன் விடுப்பில் இருக்கிறான்.

இந்த செய்தியை தயங்கி தயங்கி செங்கலையிடம் அட்மின் மேனேஜர் சொன்னார். அவ்வளவுதான் செங்கலை எரிமலை வெடிப்பது போல் வெடித்தாள்.

“எல்லோருக்கும் அம்மா இருக்கிறார்கள். எல்லா அம்மாவும் வயதானவர்கள்தான். எல்லாருக்கும் வியாதி வரும். இது ஒரு காரணமா விடுப்பு எடுக்க? யார் அந்த எலெக்ட்ரிஷியனுக்கு லீவ் கொடுத்தது? லீவு கொடுத்த மேலதிகாரியை உடனே சஸ்பெண்ட் செய்யுங்கள். அந்த எலெக்ட்ரிசியன் லீவை கேன்சல் செய்யுங்கள். அந்த எலெக்ட்ரிசியன் 10 நிமிடத்தில் இங்கு வர வேண்டும். இல்லையென்றால் போலீசில் கம்பளைண்ட் செய்து அவனை கைது செய்து அழைத்து வர நேரிடும்” என்று கர்ஜித்தாள்.

அந்த எலெக்ட்ரிசியனின் அம்மா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள் என்று சொன்னதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

“யார் செத்தாலும் பரவயில்லை. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் இந்த ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பிக்க வேண்டும்” என்று தீ பிழம்பாய் வார்த்தைகளைக் கொட்டினாள்.

வாசுதேவனுக்கு போன் போகிறது. கம்பெனி நிலவரத்தை, செங்கல் மேடம் கொதி நிலையில் இருப்பதை சொல்கிறார்கள்.

படுக்கையில் இருக்கும் அம்மாவிடம் சொல்கிறான். அம்மா கையால் சைகை காட்டி போக சொல்கிறாள். வாசுவுக்கு அம்மாவை விட்டு போக மனமில்லை.

வாசுவுக்கு அப்பா இல்லை. அம்மாவும் அவன் தம்பியும்தான் உலகம். தொடர்ந்து போன் வந்து கொண்டேயிருக்கிறது.

“சீக்கிரம் போ” என்று அம்மா சைகை காட்டி இருமுகிறாள்.

தம்பியிடம் அம்மாவை கவனிக்க சொல்லிவிட்டு அரைமனதாய் கம்பெனிக்கு விரைகிறான்.

“ஐஐடியில் இருந்து படித்து வந்த பெரிய இன்ஜினியர்கள் யாராலும் சரி செய்ய முடியாத இந்த கோளாறை ஒரு எலக்ட்ரீசியன் எப்படி சரி செய்வான்? பார்க்கலாம்” என்று ஊழியர்கள் எகத்தாளம் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் செங்கலையின் கோபத்தை கிளறிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

வாசுதேவன் ஒரு அழுக்கு பையில் தன்னுடைய ஆயுதங்களுடன் தாடியும் தலையுமாய் மருந்து நெடியுடன் வந்து சேர்ந்தான்.

செங்கலை வாசுதேவனை ஒரு முறை முறைத்தாள். அவன் தலையைக் குனிந்து கொண்டே போனான்.

ஃபால்சீலிங் ட்ராப் டோரை திறந்து ஒரு பாம்பு போல் உள்ளே நுழைந்தான். கடகடவென்று எல்லா வயர்களையும் உருவி தள்ளி மாற்றி புது வயர்களை பொருத்தினான்.

அரைமணி நேரமாக மூச்சுகூட விடமுடியாத ஃபால்சீலிங் இடைவெளியில் வேர்வையில் நனைந்தான்.

கீழே இறங்கி ஜங்ஷன் பாக்சை கழட்டி அதன் உள்ளே போய் நிறைய பேனல்களை மாற்றி மெயின் ஸ்விட்சை ஆன் செய்தான்.

மொத்த அலுவலகமும் ஒளிர்ந்தது. ஒரு சிலர் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். அலுவலகம் இயங்க ஆரம்பித்து விட்டது.

செங்கலை மும்பைக்கு போன் செய்து “மின்சார கோளாறு சரியாகிவிட்டது. கம்பெனி எலெக்ட்ரிசியனே சரி செய்து விட்டான். அவன் விடுப்பில் போனதால்தான் இப்படி ஆகிவிட்டது” என்று ரிப்போர்ட் கொடுத்தாள்.

சேர்மேன் அந்த எலெக்ட்ரிசியனை கூப்பிட்டு பாராட்டி, 5 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை கொடுக்க சொன்னார்.

செங்கலைக்கு இஷ்டமே இல்லை.

“அவன் வேலையத்தானே செய்தான். எதற்கு பாராட்டு? பணம்?” என்று புலம்பி தள்ளினாள்.

இருந்தும் சேர்மன் சொல்லிவிட்டதனால் வேண்டா வெறுப்பாய் வாசுதேவனை கூப்பிடச் சொன்னாள்.

“வாசுதேவன் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவன் அம்மா உயிர் பிரிந்துவிட்டது. அவன் அழுது புரண்டு ஆஸ்பத்திரிக்கு போய்விட்டான்” என்று தகவல் சொன்னார்கள்.

‘யார் செத்தாலும் பரவாயில்லை’ என்று செங்கலை கோபத்தில் சொன்னதை விதி நிஜமாக்கிவிட்டது .

“அவ பொம்பளயே இல்ல. சத்தியமா சுட்ட செங்கல் தான்.” என்று செங்கலையை எல்லோரும் சபித்தார்கள்.

செங்கலைக்கு முதல் முறையாக ஓர் குற்ற உணர்வு வந்தது.

வாசு அம்மா இறந்த செய்தி சேர்மனுக்கு போனது.

சேர்மன் 10 ஆயிரம் ருபாய் பணம், ஒரு மாலை சகிதம் வாசு வீட்டுக்கு போக செங்கலைக்கு உத்திரவு போட்டார்.

செங்கலை குறுகலான தெருவில், ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் வாசுவின் வீட்டுக்கு, கம்பெனியின் ஆடிக்காரில் உதவியாளர்கள் புடை சூழ போய் இறங்கினாள்.

பிணமாய் கிடக்கும் தன் அம்மாவின் காலடியில் விரக்தியுடன் வாசு உட்கார்ந்திருந்தான்.

செங்கலை அருகில் போனாள். வாசு எழுந்து கும்பிட்டான்.

“சாரி வாசு, என்னை மன்னித்துவிடு” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னு இல்ல மேடம். எங்கம்மா செத்துடும்ன்னு எங்களுக்கு தெரியும்.” என்று சொல்லும்போதே அழ தொடங்கி விட்டான்.

“எங்களுக்கு அம்மாவை விட்டால் வேறு யாரையும் தெரியாது மேடம்” என்று உயிர் குழைத்து அவன் அழுகிறான்.

குழந்தையைப் போல் உடைந்து அழும் வாசுவை செங்கலை தன்மீது சாய்த்துக் கொள்கிறாள். அவள் சுடிதார் கண்ணீரும் எச்சிலுமாய் நனைகிறது.

செங்கலைக்கு முதன் முறையக ஒரு ஆண் மீது இரக்கம் வருகிறது.

வாசுவை கீழே உட்கார வைத்து தண்ணீர் கொடுக்க சொல்கிறாள். தானும் பக்கத்தில் அமர்ந்து அவனை தலைகோதி தேற்றுகிறாள்.

கடைசி வரை வாசு வீட்டிலேயே இருந்து எல்லா காரியங்களையும் கவனிக்கிறாள்.

எல்லோருக்கும் ஆச்சரியம்.

மொத்த அலுவலகத்திலும் ‘செங்கலையின் மாற்றம் நிஜமா? நடிப்பா?’ என்று விவாத பொருளானது.

நடிப்பில்லை; செங்கலை வாசுவை காதலிக்கத் தொடங்கினாள்.

வாசுவை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு உற்சாகம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. ‘நான் இத்தனை காலமாய் தேடும் எனக்கான மனிதன் இவன்தான்” என்று உணர்ந்தாள்.

செங்கலைக்காக தவம் கிடந்த நவ நாகரிக, நுனிநாக்கு ஆங்கில நபர்களை புறந்தள்ளி அழுக்கு பையும், கறைச் சட்டையுமாய் திரியும் வாசுவை செங்கலை காதலிப்பது எல்லோர் வாயிக்கும் அவலும் பொரியுமாய் ஆகி போனது.

கேலியும் கிண்டலும் விண்ணை தொட்டது. சுட்ட செங்கல் எதற்கும் அஞ்சவில்லை; மேலும் உறுதியானது.

தன்னைவிட மூன்று வயது குறைந்த வாசுவிடம் ஒருநாள் “நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?” என்று கேட்டாள்.

வாசு பயந்தான்.

“லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெரிய அதிகாரி நீங்கள். மாதம் 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் அதிகம் படிக்காத ஓர் எலெக்ட்ரிசியன் நான். எப்படி மேடம் உங்களை திருமணம் செய்ய முடியும்? ஏற்கனவே ஊர் உலகம் ஒரு மாதிரி பேசுகிறது என்று நடுங்கினான். இது எப்படி சாத்தியமாகும்?” என்று கேட்டான்.

“ஊர், உலகம் மை ஃபூட், என் காதல் உன் அம்மாவின் மரண சாசனம், கட்டாயம் சாத்தியமாகும்” என்று செங்கலை உறுதியாக நின்றாள்.

வாசுவை வேலையை விட்டு நிற்க சொன்னாள். 25 லட்சம் முதல் போட்டு ஒரு எலக்ட்ரிகல் பொருள்கள் கடையை திறந்து வாசுவை முதலாளி ஆக்கினாள். ‘செங்கலை எலக்ட்ரிகல்ஸ்’ வியாபாரம் கொடிகட்டி பறந்தது.

ஒரு சுபயோக சுபதினத்தில் வாசுவும் செங்கலையும் எளிமையாக திருமணம் செய்துகொண்டார்கள். வாசு அம்மாவின் ஆன்மா குதூகலித்தது.

முதலிரவில், வாசு செங்கலையை பார்த்து “பயமாக இருக்கிறது மேடம்” என்று சொன்னான்.

“முதலில் மேடம் என்று சொல்வதை நிறுத்து” என்று சிரித்தாள்.

“உங்களை ஏன் எல்லோரும் ‘செங்கல்’ என்று கூப்பிடுகிறார்கள்?” என்று கேட்டான்.

“களிமண்ணாக இருந்தால் இந்த உலகம் நம்மை குழைத்து பொம்மை செய்து விளையாடிவிடும் வாசு. சில இடங்களில் செங்கல்லாகத்தான் இருக்க வேண்டும். நீ பயப்படாதே” என்று வாசுவைத் தன் மடியில் கிடத்திக் கொண்டாள்.

செங்கல்லில் மின்சாரம் பாய்ந்தது.

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

9 Replies to “செங்கல் ‍- சிறுகதை”

 1. அற்புதமான கதை. மனம் சார்ந்த உளவியல் கதை.

  திபெத்யப் படமான ஜின்பா படத்தில், குற்றவுணர்வால் தவிக்கும் இரு ஜின்பா கதாபாத்திரங்கள் அடையும் மனவோட்டங்களை இயக்குனர் அழகாகக் கூறியிருப்பார் என்பார் எஸ்.ராமகிருஷ்ணன்.

  அதே போல் குற்ற வுணர்வால் தவித்த செங்கலை, அவனையே திருமணம் செய்வது அதற்குப் பரிகாரம் தேடும் இயல்பூக்கம்தான். அழகான உளவியல் விளக்கம்.

  கதை கூறும் அழகு வீரமணி அவர்களுக்கு மெருகேறி இருக்கிறது.

  அற்புதம்!

 2. இறுக்கமான மனதை லேசாக்குவதே இறப்பும் காதலும் தான்.

  இறப்பில் பொங்கி அழுவார்கள்; காதலில் திளைத்துப் போவார்கள்.

  ஒரு இறுக்கமான மனது, இறப்பால் காதலைக் கண்டடைந்த‌ கதையை, வீரமணி அப்பா மிக அழகாகவும் ஆழமாகவும் நம் மனதில் கடத்தியுள்ளார்.

  செங்கலை வைத்து மிக அழகான காதல் ஓவியம் தீட்டியுள்ளீர் அப்பா. வாழ்த்துக்கள்.

 3. வாசு போன்ற கரைப்பான் கரைத்தால் செங்கலை போன்ற கல்லும் கரைந்து தான் ஆக வேண்டும்…

  இயற்கையான தவறான மனித சுபாவங்கள், சில சமயங்க‌ளில் சில அனுபவங்களிடம் இருந்து பிரிய வாய்ப்பு கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தியவர்கள் பயனடைவர்… அதற்கு செங்கலை விதி விலக்கு அல்ல…

  சிறுகதை உத்தி, சிறுகதையின் ஐந்து கூறுகள், கதாபாத்திரத்தில் தெளிவு, தலைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விதம் மிகவும் சீராகவும் சிறப்பாகவும் இருந்தது…

  வந்தனங்கள்…

  புதினத்திற்கான காத்திருப்பு இக்கதை படித்த நொடியிலிருந்து துவங்கியது…

 4. Superb story sir

  2 True workers

  Honesty is too 💯 good….

  Its specially செங்கல்லில் மின்சாரம் பாய்ந்தது real feeling….

  வாசுதேவன் ஒரு அழுக்கு பையில் தன்னுடைய ஆயுதங்களுடன் தாடியும் தலையுமாய் மருந்து “”நெடியுடன்”” வந்து சேர்ந்தான்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.