செத்தாண்டா சேகரு!

கைகால்களைப் பரத்திப் போட்டபடி சற்றே வாய் திறந்திருக்க லேசானக் குறட்டையோடு மல்லாந்து படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தான் சேகர்.

“ஏங்க! மணி மூணாச்சு. காலேல எட்டு மணிக்கு கம்பங்கூழு குடிச்சது. அது அப்பிடியேவா வயத்துல இருக்கு. பசிக்கில. எந்திருச்சி வாங்க சாப்புடலாம்.” அசந்து தூங்கும் கணவனை தோளைத் தட்டி எழுப்பினாள் மஞ்சுளா.

“ம்..ம்..ம்..” என்றபடி இடது பக்கமாகப் புரண்டு படுத்த சேகர் வலதுகை முழங்கைக்கு மேல் அரித்ததோ என்னவோ இடதுகையால் அரித்த இடத்தைப் ‘பட்’டனெத்தட்டி ‘பரக் பரக்’கெனச் சொரிந்து கொண்டான்.

“பகல்லயும் கொசுத் தொல்ல தாங்க முடியல. கொசுத் தொல்ல மட்டுமா பொண்டாட்டி தொல்லையும் தாங்க முடியல. நிம்மதியா தூங்க முடியுதா? நய்யி நய்யினு எழுப்பிக்கிட்டே..”

“ஓ! நா எழுப்புறது மாமாக்கு தொல்லையா இருக்குதோ! அய்யோ! நம்ம புருஷனுக்கு, ஆச மாமாவுக்கு பசிக்குமே! நேரத்தோட சுடச்சுட ஆக்கிப் போடனும்னு ஆச ஆசயா சோறாக்கி வெச்சிட்டு எழுப்புனா. நா நய்யி நய்யின்றேனா! கொசுவும் நானும் ஒன்னாயிட்டோமா!”

“என்னா ஆக்கிருக்க?”

“ம்.. தேங்கா தொவையலும் ரசமும்”

“இன்னாது, தேங்கா தொவையலும் ரசமுமா? யாரு துண்றது தேங்கா புண்ணாக்கயும் ரசம்கிற பூன மூத்தரத்தையும். காரசாரமா மணக்க மணக்க கருவாட்டுக் கொழம்பும் வாய்க்கு ருசியா நெத்திலி வறுவலும் ஆக்க மாட்டியா? தொவையலும் ரசமுமாம். நீயே துண்ணு. இதுக்குதான் தூங்கினவன தட்டித் தட்டி எழுப்புனியா?”

“கருவாட்டுக் கொழம்பும் நெத்திலி வறுவலும் செய்யனுமா எந்தொரைக்கு? மூணு வார சம்பளத்த மொத்தமால்ல கைல கொணாந்து குடுத்திருக்க. வஞ்சிர மீன் வறுவலும் எறாலு தொக்கும், கருவாட்டுக் கொழம்பும் வெக்க வேண்டிதுதான்”

“சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுவியே! சந்து கெடச்சா போதும் சிந்து பாடிடுவியே! எ அக்காவுக்கு ரெண்டாயிரம் பணங்குடுத்தத சொல்லி காட்டுறியா? கூடப்பொறந்த பொறப்பு நா வேல செய்யுற எடத்துக்கு வந்து நிக்கிது.

தம்பி ஒம்மாவுக்கு ஒருவாரமா காச்சலு. வேலைக்கு போவுல. ஏதோ ரத்தத்துல டெஸ்டு பண்னனுமா! அதுக்கு எட்டுநூறு ஆவுமா. அப்புறம் மருந்து, டாக்டரு பீஸுன்னு எம்புட்டு ஆவும்னு தெரியல. அதா ஒங்கிட்ட ஏதாச்சும் கெடைக்குமான்னு வந்தேங்குது. ஒங்கிட்டயும் சொல்லச் சொல்லிச்சு.

போனு பண்ணுறேன் மஞ்சுளாவுக்குன்னும் அக்கா சொல்லிச்சு. கையில இருந்த ரெண்டாயிரத்தக் குடுத்துட்டேன். கூடப்பொறந்த பொறப்பு கேக்கும்போது என்னா பண்ணச் சொல்லுற?”

“ஐயோ! மாமா, அக்காவுக்கு குடுக்குறத பத்தி நா என்னா மாமா சொல்லப் போவுறேன். நாமளே அக்கா வீட்டுக்குப் போயி மாமாவப் பாத்துட்டு வரலாம் மாமா. சரி சாப்புட வாங்க”

“க்கும்! ரசமும் தொவையலும்” முணுமுணுத்தான்.

“அப்ப சாப்புட வரமாட்டீங்க. நானும் சாப்புடல. நாம சாப்புடாம கெடக்கலாம். ஆனா எ வயத்துல இருக்குற ஒங்க புள்ளையோ பொண்ணோ அதும் நம்மோட பட்டினி கெடக்குனுமா? சரி அதுகிட்ட சொல்லிடறேன்.

இல்ல, இல்ல நா ஏன் சொல்லுறேன்? நீங்களே ஒங்க புள்ளையிட்ட சொல்லிடுங்க. “ஓ! ஆத்தாக்காரி ரசமும் தொவையலுந்தான் ஆக்கிருக்கா. நாம சாப்புட வேண்டாம் பட்டினி கெடப்போமுனு. அது சரின்னு சொல்லிச்சுனா எனக்கு ஒன்னுமில்ல” மஞ்சுளா சிரித்தபடி சொல்லிக் கொண்டிருக்க, அவள் சொல்லி முடிப்பதற்குள், ‘சடக்’கென எழுந்து உட்கார்ந்து கொண்டான் சேகர்.

“தட்டு வையி! தட்டு வையி! எம்புள்ள, எம்புள்ள எம்புள்ளக்கி ரொம்ப பசிச்சிருக்குமோ. சோத்தப் போடு! சோத்தப் போடு!” சிரித்தான் சேகர். சிரித்தாள் மஞ்சுளா.

சேகருக்கு முன்னால் தட்டுகொண்டு வைத்து செம்பில் தண்ணீர் கொண்டு வைத்துவிட்டு சாப்பாடு எடுத்துவர மஞ்சுளா சமையலறைக்குச் சென்றபோது வாசலில் கதவு தட்டப்படும் சப்தமும் “சேகர் சேகரு” என்ற குரலும் கேட்டது.

‘வீராண்ணன்! எதுக்கு கூப்புடுது?’ என்று நினைத்தவனாய், “தோ! வரேண்ணே!” என்றபடி வாசல் கதவைத் திறக்கப் போனான். மனதில் கலக்கம் எட்டிப் பார்த்தது.

“வாங்கண்ணே! என்ன இந்தப் பக்கம்? உள்ள வாங்கண்ணே!”

“இல்ல சேகரு! கொஞ்சம் வேல இருக்கு. கொஞ்சம் என்ன நெறையாவே இருக்கு. நீயும் வந்தீன்னா எனக்கு வேல சுளுவா இருக்கும். அதான் கூப்புட வந்தேன்”

“இன்னும் சாப்புடல! சாப்டதான் ஒக்காந்தேன். வாங்கண்ணே சாப்புடுவோம்!”

“இல்ல சேகரு! நா சாப்ட்டேன்! நா பன்னீரு டீக்கடேலதான் இருப்பேன் வந்துடு. கொஞ்சம் வெரசலா வா!”

“அண்ணே! தப்பா நெனைக்காதீங்கண்ணே, என்னா வேலண்ணே..” இழுத்தான்.

“அட! சீக்கிரம் சாப்ட்டு வாப்பா. நம்ம தலைவருதான் ஒன்னய இட்டாரச் சொன்னாரு .என்னா வேலையின்னு சொன்னாத்தா வருவியா?”

“அண்ணே!” நெளிந்தான் சேகர்.

“சேகரு! என்னா ரொம்ப நெளியிற, தலைவரு கூப்புடுறாரு. நீ வர விருப்பமில்லேன்னு சொன்னதா சொல்லிடவா எனக்கொன்னுமில்ல. ஓ இஷ்டமு”

“இல்லண்ணே பொஞ்சாதி மாசமா இருக்கு. அத தனியா வுட்டுப்புட்டு அங்கயிங்க வந்து தங்க முடியாதண்ணே!”

“அட! அதெல்லாம் பாத்துக்குலாம் வா. அப்றம் வீண் பொல்லாப்பு ஒனக்குதா வரும். சொல்லிப்புட்டேன்”

“ம்! சரியண்ணே! வர்றேன்” அரைமனதாய் சம்மதித்தான் சேகர்.

‘சரக் சரக்’ என்று செருப்பு தரையில் தேய்ந்து சப்தமெழுப்ப, பின்னால் அள்ளக்கைகள் ஐந்தாறுபேர் தொடர, சிமெண்ட் ரோட்டில் கால் வைத்து, அணிந்திருந்த சட்டையின் காலரை கொத்தாய்ப் பிடித்து முதுகின் பக்கம் தள்ளிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த புலி நகம் டாலர் தொங்கும் தங்கச் செயின் வெளியே தெரிய நடந்து சென்றான் வீரா எனும் வீரண்ணன்.

வீரண்ணனுக்கும் கணவன் சேகருக்கும் நடந்த உரையாடலைக் கொஞ்சம் மறைவாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த மஞ்சுளாவுக்கு அடர்த்தியாய்ப் பயம் நெஞ்சுக்குள் எட்டிப் பார்த்தது.

கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்த சேகருக்கு முகம் வாடிப் போயிருந்தது. அவனும் குழப்பத்திலும் யோசனையிலும் ஆழ்ந்துவிட்டதை வாடிய முகம் காட்டிக் கொடுத்தது.

யோசனையோடு தட்டின் முன்வந்து அமர்ந்த கணவனிடம் மஞ்சுளா எதுவும் கேட்கவில்லை.

தட்டின் முன் வந்து அமர்ந்தவனுக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை.சட்டெனப் பசி அடங்கிப் போயிருந்தது. மஞ்சுளாவின் முகத்தைப் பார்த்தான்.

‘வீரண்ணனுடன் பேசினதை மஞ்சுளா கேட்டிருப்பாளோ? வீரண்ணன் கோஷ்டியைக் கண்டாலே மஞ்சுளாவுக்குப் பிடிக்காது. தான் மனக்கிலேசத்துடன் இருப்பதை மஞ்சுளா அறிந்துவிடக் கூடாது.

வீரண்ணனைப் பார்த்ததுமே மனக்கலக்கத்தில் பசி மரத்துப் போய்விட்டாலும் விரும்பிச் சாப்பிடுவதுபோல் நடிக்க வேண்டும். தான் ஒழுங்காகச் சாப்பிடவில்லை யென்றால் வயத்துப் புள்ளக்காரி தானும் சாப்பிடமாட்டாள்’ என்ற முடிவோடு,

“மஞ்சு என் ஆசப் பொஞ்சாதியே! நீயும் வாலே, ரெண்டுபேருமா சாப்புடுவோம்” என்றான் வெகு இயல்பாய் இருப்பதுபோல் காட்டிக் கொள்ள.

தன் கணவன் இயல்பாய் இல்லை தனக்காக நடிக்கிறான் என்பது நன்றாகவே புரிந்தது மஞ்சுளாவுக்கு.

‘வீரண்ணனுடன் தான் பேசினதை நான் கேட்ருக்கமாட்டேன்னு நெனச்சுக்கிட்டு நடிக்கிறாரு. நாமளும் எதையும் கேக்க மாதிரியே நடிப்போம். அப்பதான் இயல்பா இருந்தா எப்பிடி ஒழுங்கா சாப்புடுவாரோ அப்பிடி சாப்புடுவாரு. நடிப்போ கிடிப்போ நல்லா சாப்ட்டா சரி’ என்று நினைத்தவாறு மூடியிருந்த தட்டை எடுத்து கீழே வைத்துவிட்டு கரண்டியால் நெத்திலி வறுவலைத்தட்டில் அள்ளி வைத்தாள்.

செக்கச் சிவக்க மசாலா தடவப்பட்டு பதமான முறையில் வறுக்கப்பட்டிருந்த நெத்திலி வறுவல் சேகரைப் பார்த்துச் சிரித்தது.

சாதாரணமாய் இருந்தால் சேகர் ‘ஆஹா! ஊஹு!’வென்று அலம்பல் செய்வான். கைதட்டுவான்.

“ஆஹா! பாக்கும்போதே வாயில எச்சில் ஊறுது மஞ்சு!” என்று சொல்லி தட்டில் சோறு வைப்பதற்குள் வறுவலைக் கொத்தாய் அள்ளி வாயில் போட்டுக் கொள்வான்.

இப்போதும் அப்படித்தான் செய்தான். ஆனாலும் நிஜமான சந்தோஷம் தரும் பிரதிபலிப்பு நடிப்பில் வர மறுத்தது.

செயற்கையாய் அவன் வரவழைத்துக் கொண்ட துள்ளலும் ஆரவாரமும் பல்லிளித்து விடுமோ எனத் தோன்றியது.

சோற்றின் மீது எண்ணை மினுமினுக்கும் கருவாட்டுக் குழம்பை கரண்டியால் அள்ளி ஊற்றினாள் மஞ்சுளா.

சாதாரணமாய் இருந்தால் “ஹாய் மஞ்சூ! கருவாட்டுக் கொழம்பா! யப்பா, வாசம் தூக்குதே! என்ன இன்னக்கி, மீனு வறுவலு கருவாட்டுக் கொழம்பு. யம்மாடி! ஒருபுடி புடிச்சுட வேண்டியதுதான்!” என்றபடி

தட்டு நிறைய குழம்பு சோற்றைப் பிசைந்து முதல் கவளத்தை “மஞ்சு! ஆ.. ஆ.. வாயத் தொற! வாயத் தொற!” என்றபடி குழம்பு சோற்றோடு கையை மஞ்சுளாவை நோக்கி நீட்டுவான்.

“மாமா! நீங்க சாப்புடுங்க மாமா!” என்பாள் மஞ்சுளா.

“ஊகூம்! ஊகூம்! நீதான் மொதல்ல” என்று பிடிவாதம் பிடித்து அவளுக்கு ஊட்டிவிட்ட பிறகே தான் சாப்பிட ஆரம்பிப்பான்.

ரசித்து ருசித்து தன் கணவன் சாப்பிடுவதை மகிழ்ச்சியோடு பார்த்தபடி அமர்ந்திருப்பாள் மஞ்சுளா.

இன்றும் கருவாட்டுக் குழம்பை சோற்றின் மீது ஊற்றியபோது பழைய புளியும் புதுப்புளியும் கலந்து கரைத்து செய்ததால் லேசான பிரவுன் கலரில் பூண்டுப் பல்லும் கருவாட்டுத் துண்டுகளுமாய் எண்ணை மினுமினுப்போடு சோற்றின் மேலிருந்து வழியும் குழம்பும் அதன் வாசமும் சேகரைத் தேடி வந்த பிரச்சனையே நொடி நேரம் மறக்க வைத்து, நாக்கை மேலண்ணத்தில் கொண்டுபோய் இடித்து.

‘தக்!’ என்று நாக்கைச் சப்புக் கொட் டவைத்தது. “ஹை!” என்றான் தன்னை மறந்து.

சூடான சோற்றின் மீதிருந்து வழியும் குழம்பை சுட்டு விரலையும் நடு விரலையும் சேர்த்து வைத்துத் தொட்டு நாக்கில் வைத்துக் கொண்டவன் ஊறுகாயைத் தொட்டு நாக்கில் வைத்துவிட்டு “அஹ்கா!”என்று ஏதோ ஒரு திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு சொல்வதைப் போல், தானும் சொன்னான்.

“அடேங்கப்பா! வடிச்ச சோறு அத்தனையையும் நா ஒத்தனே சாப்டுடுவேன் போலல்ல இருக்குது. அம்புட்டு அட்டகாசம் சூப்பர் டேஸ்ட்டு மஞ்சு” என்றான்.

சிரிப்பும் வேடிக்கையுமாய் பேசுவதுபோல் பேசி தன் கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் நடிப்பது சிரமமாகத்தான் இருந்தது சேகருக்கு. சாப்பிட்டதாய்ப் பேர் பண்ணிவிட்டு எழுந்து விட்டான் சேகர்.

“மாமா ஆச ஆசயா சமச்சேன். ஆனா நீங்க சரியாவே சாப்புடல. ஏம்மாமா? ஏதோ டென்சனா இருக்காப்ல இருக்குறீங்க.”

“என்னாது டென்சனா எனக்கென்ன மஞ்சு டென்சனு? இன்னும் எப்புடி சாப்புடறது. தோ பாரு வயித்த பான மாதிரி” வயிற்றைத் தட்டிக் காட்டி சிரித்தான்.

“இல்ல மாமா! நீங்க டென்சனா இல்லாம சாதாரணமா இருந்தா கொழம்பு சோத்த பெசஞ்சதுமே, மஞ்சு ஆ காட்டு, ஒனக்கு ஒருவாயி ஒவ்வயுத்துல இருக்குற எம் புள்ளைக்கி ஒருவாயின்னு ஊட்டி விடுவீங்க.

ஆனா இன்னைக்கு நீங்க அப்புடி செய்ய மறந்துட்டீங்க மாமா. அப்ப நீங்க ஏதோ யோசனேல இருக்குறதாதானே அர்த்தம் மாமா!” என்றாள் மஞ்சு.

‘பக்’கென்று ஆனது சேகருக்கு. திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் விழித்தான். தொண்டையில் மீன் முள் மாட்டியதுபோல் பதில் சொல்ல வார்த்தை வெளிவராமல் நெஞ்சில் சிக்கியதுபோல் தவித்தான்.

“அது.. அது.. அதுவந்து மஞ்சு! ஆ.. ஆமான்ல!”

“சரி! சரி! விடுங்க மாமா! பன்னீரண்ணன் டீக்கடையில வீரண்ணன் காத்துட்ருப் பாரில்ல. சீக்கிரம் போங்க. போவலன்னா ப்ரர்ச்சனை ஆயிடப் போவுது”

பகீரென்றது சேகருக்கு. ‘அப்ப மஞ்சு வீரண்ணனும் நானும் பேசினதக் கேட்ருக்கணும். கேட்ருக்க மாட்டான்னு சாப்புடும் போது நடிச்சது மஞ்வுக்குப் புரிஞ்சி போயிருக்கும்’

“மஞ்சூ!”

“எல்லாத்தியும் நா கேட்டுக்கிட்டுதான் இருந்தேன் மாமா. நா வல்லேன்னு நீங்க சொல்லிருக்குலாமில்ல. அவுரு எதுக்கு வந்து கூப்புடுறாரு? தேர்தலு நடக்கப் போவுற இந்த நேரத்துல தலைவரு இட்டாரச் சொன்னாருன்னா என்னா மாமா அர்த்தம். போன தேர்தலுல பட்ட பாட்ட மறந்துட்டீயளா மாமா” கேட்டுக் கொண்டே சேகரின் அருகில் வந்தவள் சட்டென அவன் அணிந்திருந்த பனியனை மேல் நோக்கித் தூக்கினாள்.

முதுகில் இரண்டும் விலாவில் ஒன்றுமாய் நீளவாக்கில் ஆழமான வெட்டுத் தழும்புகள் தூர்ந்துபோய் கரடுமுரடாய்க் காணப்படன. அவற்றை ஒவ்வொன்றாய் விரல்களால் தொட்டவள் அழ ஆரம்பித்தாள்.

“மாமா! வேண்டாம் மாமா! நாம இன்னிக்கே கெளம்பி வேற ஊருக்குன்னா குடி போய்டலாம் மாமா!

முடீல மாமா! நடந்தத எல்லாம் மறக்கமுடீல மாமா!

தேர்தலும் கட்சி வேலையும் ஒங்குளுக்கு வேண்டவே வேண்டாம் மாமா.

மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த தேர்தல்ல கட்சிக்காக வேல செய்யப் போன ஒங்கள கோஷ்டி சண்டேல பகடக் காயாக்கி வெட்டிப் போட்டத மறந்துட்டீங்களா மாமா?

வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்துல கெடந்த ஒங்கள எந்தக் கட்சிக்காக நீங்க வேல செஞ்சிங்களோ அந்த கட்சியச்சேர்ந்த அந்த பெரிய ஆளே ஒங்குள கண்டுக்கல. இதோ இந்த வீரண்ணன்தானே ஒங்குள அன்னைக்கும் கூப்டுகிட்டுப் போனது.

இந்த ஆளோட நீங்க கட்சி வேல செஞ்சுக்கிட்டுருந்தப்ப தானே ரெண்டு கட்சி கோஷ்டிக்கு நடுவுல சொவத்துல அவுங்க அவுங்க தலைவரு பேரு சின்னத்தோட படம் கட்சி பேரு எழுதுறதுல உண்டான பிரர்ச்சனையில ஏற்பட்ட பொகைச்சலு கொலவெறியா மாறி அருவா வெட்டுல முடிஞ்சிச்சு மாமா.

கொலைகாரப் பாவிங்க! ஒங்க கோஷ்ட்டி காளியப்பன வெட்ட வெரட்டினப்ப கோஷ்ட்டியா தப்பிச்சு ஓடுனவுங்கள்ள ஒருத்தரா நீங்குளுந்தானே ஓடுனீங்க மாமா.

தொரத்தினவுங்க காளியப்பன வெட்ட நெருங்கினப்ப அந்தப்பாவி ஒங்கள கொலைகாரப் பாவிங்ககிட்ட புடிச்சுத் தள்ளிட்டு தான் தப்பிட்டான்ல.

மூணு பேரு சேந்து ஒங்கள வெட்ட தோ! இந்த மூணு வெட்டயும் வாங்கிக்கிட்டு நீங்க ரத்த வெள்ளத்துல சாஞ்சப்ப ஒங்க கோஷ்டியா? ஒங்க தலைவரா? யாரு மாமா ஒங்கள காப்பாத்துனாங்க. பொது ஜனங்கதானே மாமா ஒங்கள ஆஸ்பத்திரியல சேத்தாங்க.

அதிக ரத்தம் சேதாரமாயிடுச்சு. பொழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க கைவிட்டப்ப நா அழுத அழுகையும் தவிச்ச தவிப்பும் யாருக்கு மாமா தெரியும்.

அப்ப தானே வலங்கிமான் மாரியாத்தாகிட்ட ‘ஆத்தா! எம் புருஷனுக்கு உசிர பிச்சயா போடு. அவர பாடேல படுக்க வெச்சு ஒங்கோவிலுக்கு பாட காவடி எடுக்க வெச்சு ஒங்கோவில சுத்த வெக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன்.

கொடமுருட்டி ஆத்துல கொதிக்கிற பங்குனி மாச வெய்யிலிலே ஆத்து மணலுல ஒங்கள பாடேல படுக்க வெச்சு அந்த பாடைக்காவடி அலங்காரம் செஞ்சி தப்படிச்சி பாடைய நாலுபேரு தூக்கிக்கிட்டு நடந்து சீதளாதேவி மாரியாத்தா கோவிலுக்குப் போயி ஆத்தாவ மூணுதரம் சுத்தி வந்து, நேர்த்திக்கடன செஞ்சு முடிச்சமே மறந்துட்டீங்களா மாமா!

அவ போட்ட பிச்ச மாமா ஒங்க உசிரு. அவ எனக்குக் குடுத்த மடிப் பிச்ச மாமா நீங்க! மறுபடியும் இந்த பாவிங்க கூப்புடுறாங்கன்னு கெளம்புறீங்களே மாமா.

மாமா ஒங்குளுக்கு எதாவது ஆச்சுன்னா நா உயிரோடவே இருக்கமாட்டேன் மாமா. வெளி ஒலகத்தையே இன்னும் பாக்காத நம்ம கொழந்த…” சொல்லிவிட்டுத் தேம்பி அழும் மஞ்சுவை கலங்கிப்போய்த் தன்னோடு அணைத்துக் கொண்டான் சேகர்.

“அழுவாத மஞ்சு! பொறியில மாட்டியாச்சு.

ரொம்ப சாக்ரதையாதா வெளியில வரனும்.

கட்சி மேலிடத்த அவ்வளவு சுளுவா பகச்சுக்க முடியாது மஞ்சு.

ரொம்ப தொல்ல தருவாங்க. நம்மால எதிர்க்க முடியாது. தேர்தல் முடியிற வரைக்கும் அவுங்களோட நா இருந்துதான் ஆவனும்.

நெனச்சதும் ஊரவுட்டுலாம் போகமுடியாது. தேர்தல் முடியட்டும் இந்தப் பக்கமே வேணாம்.

நாம எங்கியாச்சும் போயிடுவம். அதுவர நா கவனமா இருப்பேன் மஞ்சு.பேருக்கு கோஷ்டில ஒரு ஆளா நிப்பேன். எனக்கு ஒன்னும் ஆவாது மஞ்சு.

வலங்கிமான் மாரியாத்தா என்னையக் காப்பாத்துவா மஞ்சு .நாம நம்ம புள்ளையோட சந்தோஷமா வாழுவோம் மஞ்சு. சாப்புடு மஞ்சு.

நா போய்ட்டு வந்துடறேன். நேரமாயிடுச்சு. வீரண்ணன் கோச்சுக்கும். தலைவர்ட்ட போட்டுக் குடுக்கும். வரேன் மஞ்சு.

ராத்திரி எந்நேரம் ஆனாலும் வந்துடுவேன். கவலப்படாத!” சொல்லிக் கொண்டே வாசல் கதவைத் திறந்து கொண்டு கனத்த மனதோடு வெளியேறினான் சேகர்.

“மாரியாத்தா! இவுருக்கு ஒன்னும் ஆகிடாத நீதாம்மா பாத்துக்கனும்! காப்பாத்தனும்!” கண்களில் நீர்வழிய கைகூப்பி வேண்டினாள் மஞ்சு.

பன்னீர் டீக்கடை.

“வாய்யா! பெரிய மனுசா! கூப்புடுட்டு வந்து எம்மாம் நேரம் ஆச்சு. இப்பதான் வார. என்னைய வுடு தலைவரு கிட்டயே பயம் வுட்டுப்போச்சா ஒனக்கு. அவுரு ஒனக்காகக் காத்துக்கிட்டு இருக்கனுமா? அம்மாம் பெரிய ஆளாயிட்டியா நீயி?” கோபத்தோடு வரவேற்றான் வீரா.

“இல்லண்ணே! கொஞ்சம் நேரமாயிட்டு”

டீக்கடைக்குச் சற்று தள்ளி நின்றிருந்த அந்த ஆள் செல்போனில் டீக்கடையை பார்த்தபடி யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.

“ம்..ம்.. ஆமாண்ணே! அவந்தா. அவந்தா சேகருதா ம்.. இப்பதான் வந்தாப்ல. வீராவோட பேசிகிட்டுருக்குறானு. என்னண்ணே என்னண்ணே.. என்ன சொல்றீங்கண்ணே..”

“செத்தாண்டா சேகரு! எதிர்முனையில் பேசுபவன் என்ன சொன்னானோ, செத்தாண்டா சேகரு” என்று சொல்லிவிட்டு இவனும் சிரித்தான்.

மஞ்சுவிடம் சொல்லி வந்தது போல இரவு வீட்டுக்குப் போக முடியாமல் தலைவரால் பணி தரப்பட்டது சேகருக்கு.

இரவு இரண்டு மணிவாக்கில் ஊரடங்கிய பின், குறிப்பிட்ட பகுதியிலிருக்கும் வீடுகளுக்கு, வீட்டுக்கு ரெண்டாயிரம் ரூபாய் பணப் பட்டுவாடா செய்ய வேண்டிய வேலை சேகருக்கு ஒதுக்கப்பட்டது.

ஏற்கனவே பகுதி மக்களுக்குச் சொல்லப்பட்டு விட்டதால் வேலையை எளிதாக முடித்து விடலாம் என்றும் சொல்லப்பட்டது.

“தலைவரே பறக்கும் படை., எதிர்க்கட்சி ஆளுங்கன்னு…”

“அதெல்லாம் சாமர்த்தியமா தான் செய்யனும் சேகரு. இதோ பாரு! நேத்து எதிர்கட்சி ராவுல பணம் குடுத்தத நம்ம ஆளுங்க ஃபோனுல வீடியோ எடுத்துருக்கானுவ .

அத நாம போலீசுலயோ பறக்கும் படையண்டயோ சொன்னமா. அப்டி எதிர் கட்சிக்காரனுவ தடுத்து கிடுத்து செஞ்சானு வன்னு வையி இந்த வீடியோவ காமி. வம்பு பண்ணாம ஓடிடுவானுக.”

இரவு மணி பதினொன்று.மஞ்சுவின் நினைவு வந்தது சேகருக்கு.

‘ஃபோன்னா பண்ணுவமா?’ என்ற எண்ணத்தில் ஃபோனை எடுத்து ஆன் செய்ய முயன்றபோது சார்ஜ் தீர்ந்து போய் ஸ்விட்ச்ஆஃப் ஆகியிருந்தது ஃபோன்.

‘திக்’கென்றாகிப் போனது சேகருக்கு.

‘மஞ்சு எத்தனை முறை ஃபோன் செஞ்சாளோ? அவளுக்கு என் ஃபோன் ஸ்விச் ஆஃப் என்ற பதில் தானே கிடைத்திருக்கும். கவலைப்பட்டுப் போயிருப்பாள்’ தவிப்பாய் இருந்தது சேகருக்கு.

மணி இரவு ஒன்று.

கவர் ஒன்றுக்கு ரெண்டாயிரம் வீதம் நாலு லட்சம் ரூபாய்க்கான கவர்களோடு மூன்று பேர் தன்னோடு வர, தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குச் செல்லக் கிளம்பினான் சேகர்.

தெரு விளக்குகள் ஆங்காங்கே இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஒளிர்ந்து கொண்டிருக்க, பெரும்பாலும் இருட்டே ஆட்சி செய்து கொண்டிருந்தது.

தெருவுக்குள் நுழைவதற்கு சற்று தொலைவுக்கு முன்னரே ஆட்டோ நிறுத்தப்பட்டு சேகரும் மற்ற மூவரும் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்.

பத்தடி நடப்பதற்குள் சிறுகும்பல் சேகரையும் மற்ற மூவரையும் சூழ்ந்து கொண்டது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மொத்தப் பணத்தையும் பறித்துக் கொண்டு ஓடியது.

‘நடு இரவு. கத்தினால் ஜனங்கள் கூடி விடுவார்கள். பறக்கும் படையோ, போலீஸாரோ வந்தால் நிலைமை கந்தலாகி விடும். ஓட்டுக்கு நடு இரவில் பணப் பட்டுவாடா என்று சேனல்கள் தன்னைக் காட்டுவார்கள்.

கட்சி மேலிடம் மீது வழக்கு பதியப்படும். செய்வதறியாது தவித்தான் சேகர். கூடவந்தவர்கள் பேசப்பட்டக் கூலிக்கு மேல் தவிப்புக் காட்டினார்கள். பரபரத்தார்கள்.

வீரண்ணனுக்குப் ஃபோன் செய்து நடந்ததைக் கூறிய போது, ஆவேசப்பட்டான். கத்தினான். “தலைவருட்ட எப்பிடிச் சொல்வது?” என கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டான்.

“தலைவரு என்ன ஆக்ஷன் எடுப்பாறோ தெரியலயே!” என்று பயந்து புலம்பினான். “நாலு லட்சம். நாலு லட்சமே”ன்று கத்தினான்.

ஆனாலும் வீரண்ணன் கத்துவதும் புலம்புவதும் நடிப்பு என்பதும், பொய் என்பதும் பணத்தைப் பறித்துச் சென்றவர்கள் வீரண்ணனின் ஆட்களே. நாடகத்தை நடத்தியவன் அவனே என்றும் தன்னோடு வந்த மூவரும் கூட வீரண்ணனின் விசுவாசிகளே என்பதும் பாவம் சேகர் அறிந்திருக்கவில்லை.

முந்தைய தேர்தலில் தனக்கு அரிவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடியபோது கட்சி மேலிடம் மருத்துவமனைக்கு வந்து தன்னைப் பார்க்க விரும்பியதைத் தடுத்ததும்.

‘பாவம் சேகர்! கட்சி வேலையின்போது அருவா வெட்டு வாங்கி சாவக் கெடக்கான். அவன் பொழச்சு கிழச்சு வந்தா வட்டம், மாவட்டம், கவுன்சிலர் ஒன்றியம்னு எதையாவது கை காட்டிவுடனும்னு இரக்கப்பட்டு மேலிடம் பேச, அதை குறுக்கே விழுந்து தடுத்ததும்.

இப்பவும் சேகர்மீது மேலிடத்தின் பரிவுப் பார்வையை மாற்றி எதையாவது செய்து கெடுக்க எண்ணி தன் ஆட்களை ஏவி பணத்தை அடித்து வரச் செய்து அதன் மூலம் சேகர் மீது மேலிடத்திற்கு வெறுப்பு ஏற்பட முயன்றதும் வீரண்ணன்தான் என்று சேகருக்குத்தெரிய வாய்ப்பில்லை.

‘தான் யாரையெல்லாம் நம்பினோமோ அவர்களெல்லாம் தனக்குத் துரோகம் செய்பவர்கள்; தன் முதுகில் குத்த முயல்பவர்கள்’ என்பது சேகருக்குத் தெரியாமலே போனது.

கட்சி மேலிடத்தின் முன் தலைகுனிந்து நின்றிருந்தான் சேகர்.

“த்தூ! கவர்ல வெச்சு பணத்த குடுத்து பட்டுவாடா செஞ்சிட்டு வான்னு அனுப்புனா, பணத்த மொத்தமா லவுட்டிக்கிட்டு நா பணத்த எடுத்துக்குலன்னு பொய்யா சொல்லுற, இந்த பணத்த பத்தி போலீஸ்ல புகார் குடுத்தா எதிர்கட்சிகளோட அழுத்தத்துல பணப்பட்டுவாடா செய்ய முயன்றீங்களான்னு கேஸு எம்மேலயே திரும்புன்னு தானே தைரியமா பணத்த அடிச்ச!”

“ஐயா! ஐயா! தலைவரே! சத்தியமா நா பணத்த எனக்குன்னு வெச்சுகிட்டு ஏமாத்தி நாடகம்லாம் போடலிங்க. என்ன நம்புங்க தலைவரே!” கெஞ்சி மன்றாடினான் சேகர்.

“எலேய்! அடிம நாயே! அரசியல்வாதிட்டியே சத்தியமா? நம்மகிட்ட சத்தியத்துக்கெல்லாம் என்னா மதிப்புன்றது எனக்குத் தெரியாதா? லே! பிச்சக்காரப் பயலே!

நாலு லட்சங்கிறது எவ்வீட்டு நாய்ங்களுக்கு ஒரு மாசத்துக்குப் பிஸ்கெட் வாங்கிப் போடற காசு. ஓடிடு சொல்லிட்டேன்.

நீ தாக்கப்பட்டுக் கெடந்தப்ப ஒம்மேல கொஞ்சம் எரக்கம் இருந்திச்சி. ஒனக்கு எதாச்சும் செய்யனும்னு நெனச்சேன். அதுக்கு இந்த காச ஒனக்கு குடுத்ததா இருக்கட்டும்.

இன்னும் ரெண்டு நாளு ஒனக்கு டயம் தர்றேன். நீ இந்த ஊரவிட்டு ஓடிடனும். இல்ல, நா என்னா செய்வேன்னு ஒனக்கே தெரியும்.

ம்.. ம்.. போ, வெளியே!”

செய்யாத குற்றத்திற்கான பழி நெஞ்சை வாள் கொண்டு அறுக்க தலைகுனிந்து வெளியேறினான் சேகர்.

‘ஆத்தாக்கு தெரியும் அத்தனையும். யார் பணத்த அடிச்சாங்களோ அவுங்களுக்கு அவ வெப்பா ஆப்பு’ என நினைத்துக்கொண்டே வெளி வந்தனை குளிர்ந்த காற்று தழுவிக் கொண்டது.

விடுதலைக் காற்றை சுவாசித்தால் கிடைக்கும் பேரின்பமும் பெரும் அமைதியும் நிம்மதியும் கிடைத்தது சேகருக்கு.

கோவை காந்திநகர் பேருந்து நிலையம்.

‘சீதளாதேவி டீஸ்டால்’ என்ற போர்டோடு இருந்த அந்த டீக்கடையிலிருந்து இஞ்சிடீயின் வாசம் அந்தப் பிரதேசத்தையே கலக்கிக் கொண்டிருந்தது.

கூட்டம் நிமிடு தெரித்தது. சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தான் சேகர். ‘டீக்கடையின் ஓனர்’ என்ற பெருமிதமிருந்தது அவன் முகத்தில்.

‘கொத்தடிமையாக அல்லக்கையாக இல்லாமல் நேர்மையாக உழைத்துப் பிழைப்பது எவ்வளவு சந்தோஷம்?’ என்பது புரிந்தது சேகருக்கு.

“மாமா!” என்றபடி இடுப்பில் ஆறுமாதப் பெண் குழந்தை ஷீத்தலோடு (சீதளா) தூக்கில் வடைமாவை எடுத்துக் கொண்டு கடைக்குள் நுழைந்த மஞ்சுவை நிறைவோடு பார்த்துச் சிரித்தான் சேகர்.

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.