செத்தும் கெடுத்தான் சீரங்கன் என்ற பழமொழியை பெரியவர் ஒருவர் கூட்டத்தில் கூறுவதை வெளவால்குட்டி வாணி கேட்டது.
பழமொழி பற்றிய விளக்கம் பற்றி பெரியவர் ஏதேனும் கூறுகிறரா என்று ஆர்வத்துடன் கூட்டத்தினரைக் கவனிக்கலானது.
பெரியவர் “இந்தப் பழமொழி யாராவது பிறருக்கு தீங்கு செய்து கொண்டிருக்கும் வழக்கத்தை தங்களது பழக்கமாக்கி உள்ள ஒருவரைப் பற்றிக் கூற இப்பழமொழியைச் சொல்வது உண்டு. இந்தப் பழமொழியை விளக்க ஒரு கதையையும் கூறுவர்.
பழமொழிக்கான விளக்க கதை
சீரங்கன் என்ற ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்தான். அவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் அந்த கிராமத்தை சேர்ந்தவருக்கு தீமை செய்வதைத் தவிர வேறு வேலையே இல்லை.
அப்படிப்பட்டி குணமுள்ள சீரங்கன் படுத்த படுக்கையாகி சாகும் நிலையில் கிடந்தான். அப்போது அவன் ஊராரை அழைத்தான். சாகும் தருவாயில் உள்ள அவனிடம் இரக்கம் கொண்ட ஊராரும் அங்கு கூடினர்.
அனைவரிடமும் அவன் அழுது கொண்டே “நான் உங்களுக்கு எவ்வளவோ தீமை செய்து விட்டேன். என்னை அனைவரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
நான் இறந்தபின்பு நீங்கள் அனைவரும் எனது உடலில் கூரிய ஆயுதங்களால் தாக்க வேண்டும். பின் அனைவரும் சேர்ந்து தரையில் இழுத்துச் சென்று பின்பு சிதையில் தீமூட்ட வேண்டும். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும். இது எனது கடைசி ஆசை” என்று கூறினானாம்.
அவன் சில நாட்களில் இறந்து போனான். ஊரார் அவனது விருப்பப்படியே உடலை கூரிய ஆயுதங்களால் தாக்கி கயிறால் பிணைத்து இழுத்துச் சென்று சுடுகாட்டை அடைந்தனர். அப்போது போலீஸ்காரர்கள் வந்து அங்கிருந்த அனைவரையும் கைது செய்தனர்.
ஊராரும் திகைத்தவாறே விசாரிக்க “சீரங்கன் ஊர்காரர்களால் தனது உயிருக்கு ஆபத்து” என்று புகார் கூறியிருந்தார். அதுபடியே நடந்துவிட்டது. எனவே உங்களை கைது செய்கிறோம்” என்றனர் காவலர்கள். அதிலிருந்து ‘செத்தும் கெடுத்தான் சீரங்கன்’” என்ற பழமொழி உருவாகியது.” என்று கூறினார்.
பெரியவரின் விளக்கத்தைக் கேட்டதும் வெளவால்குட்டி வாணி வேகமாக காட்டின் வட்டப்பாறையை நோக்கிப் பறந்தது. அங்கே எல்லோரும் வழக்கமாகக் கூடியிருந்தனர்.
காக்கை கருங்காலன் “குழந்தைகளே உங்களில் யார் இன்றைக்கான பழமொழியைக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.
வெளவால் வாணி “தாத்தா நான் இன்றைக்கு செத்தும் கெடுத்தான் சீரங்கன் என்ற பழமொழியைக் கூறப்போகிறேன்” என்றுதான் கேட்டது முழுவதையும் கூறியது.
செத்தும் கொடுத்த சீதக்காதி
அதனைக் கேட்ட காக்கைக் கருங்காலன் “இந்தப் பழமொழியை வேறு விதமாகவும் கூறுவர். அதாவது வள்ளல் சீதக்காதியை “செத்தும் கொடுத்த சீதக்காதி” என்று கூறுவார்கள்.
இதுவே பொருள் மாறி செத்தும் கெடுத்த சீரங்கன் என்று ஆகிவிட்டதாக சிலர் கூறுவதுண்டு.
புலவர் ஒருவர் யாசகம் கேட்டு சீதக்காதியை அடைய அப்போது சீதக்காதி இறந்து சிதையில் இருந்தாராம்.
புலவரோ சிதைக்கு முன் சென்று பாடினார். பிணமாகக் கிடந்த சீதக்காதி தனது கைகளை நீட்டி மோதிரம் தந்ததாக செவி வழி செய்தி உண்டு.
இதுதான் செத்தும் கொடுத்த சீதக்காதி உருவாகக் காரணமாக அமைந்த நிகழ்ச்சியாகும்.
நிறைவு
என் அருமைக் குழந்தைகளே, இன்றுடன் பழமொழியைத் தெரிந்து நிகழ்ச்சி வடைகிறது. இதுவரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உங்களுக்கு மிக்க நன்றி” என்று கூறியது.
அன்று வட்டப்பாறைக்கு வருகைதந்த சிங்கம் செவத்தையன் “குழந்தைகளே தாத்தா கருங்காலன் நடத்திய பறவைகள் கேட்ட பழமொழிகள் நிகழ்ச்சி எல்லோருக்கும் பிடித்திருந்தது தானே. நீங்கள் எல்லோரும் பழமொழியைப் பற்றி தெரிந்து கொண்டீர்கள்தானே. எல்லோரும் ஒற்றுமையாக இருப்பீர்களா?” என்று கேட்டது.
யானைக்குட்டி குப்பன் “தாத்தா கருங்காலன் நடந்திய பழமொழியைப் பற்றி அறிந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி எங்களுக்கு பிடித்திருந்தது. நாங்கள் இனி ஒற்றுமையுடன் இருப்போம். அன்பு வனத்தின் பெருமையைக் காப்போம்” என்றது.
இதனைக் கேட்ட மற்ற குழந்தைகள் ஒன்றாக இணைந்து “அன்பு வனத்தின் அமைதியைக் காப்போம்” என்று ஒரு சேரக் கூறின.