அகரமுதலி (2019) என்ற பெயருடன் உள்ள tamillexicon.com என்ற இணையதளம், தமிழின் பல்வேறு பரிணாமங்களையும் உலகுக்குக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
பல்வேறு உள்கட்டமைப்புடன், கடினஉழைப்புடன், பலருக்கும் பயன்படும் விதத்தில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேறு மொழிப் பேசும் ஒருவர் இத்தளத்தைக் கொண்டு மிக விரைவாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு விடலாம்.
தமிழர்களாகிய நாம், நமது முன்னோர்களின் ஆழமான, அகலமான அறிவாற்றலையும், மொழிச்சிறப்பின் அறியாத பக்கங்களின் வீரியத்தையும் புரிந்து மேம்படலாம்.
இத்தளத்தில், மிகப்பயனுள்ள தேடுபொறிகளும், மாற்றிகளும் இடம் பெற்றுள்ளன. அவை, இன்றைய தமிழ் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் அடிப்படையாக அமையும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.
தளத்தில் காணப்படும் பகுதிகளைப் பயன்படுத்தி எதிர்கால இளைய தலைமுறையை வழிப்படுத்துவோம்.
தளத்தில் காணப்படும் முக்கியமான பகுதிகள் சிலவற்றின் பயன்பாடுகளை இனி அறியலாம்.
அகர வரிசை
”தமிழ்ச் சொற்களின் விளக்கங்களை அறிய” எனும் தலைப்பில், பழங்காலச் சொற்களுக்கு மட்டுமில்லாமல், தற்கால வழக்கு சொற்களுக்கும் பொருளுரைத்து அதைப் புதிய தமிழ்ச் சொல்லாக இணைத்து இருப்பது சிறந்த பணியாக உள்ளது.
”க” வரிசை சொற்கள் மட்டும் 115 பக்கங்கள் நீண்டு உள்ளன. தேடுபொறியில் ஒரு சொல்லைக் கொடுத்தும் தேடலாம் அல்லது எழுத்துக்களைச் சொடுக்கும் வார்த்தைகளிலும் பொருள் தேடலாம்.
தேடுபொறியில் ஒரு சொல் பதிவிட்டால், தமிழ் மொழிபெயர்ப்பு, கலைச்சொல், திருக்குறள், ஆங்கிலம் என எதைக் குறித்தாலும், அது குறித்துத் தேடும் வசதி உள்ளது.
உதாரணத்திற்கு, ஒரு சொல்லைத் தேடுபொறியில் இட்டு, திருக்குறள் என்பதை குறியீட்டுத் தேடுக எனக் கூறினால், குறிப்பிட்ட வார்த்தை திருக்குறளில் எங்கெங்கெல்லாம் கையாளப்பட்டுள்ளன என்பதைப் பட்டியலிடும்.
கலைச்சொல் பகுதியில் குறியீட்டு, ஒரு தமிழ்ச் சொல்லைப் பதிவிட்டுத் தேடினால், தமிழ்ச் சொல்லுக்கான இணையான பொருள் தரும். ஆங்கில சொற்களையும் அந்த ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் விளக்கத்தையும் தரும்.
எழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்கள் குறித்த அடிப்படை இலக்கணம் ஆங்கில உச்சரிப்புடன் விளக்கப்பட்டுள்ளன.
குறிப்பாகக் கிரந்த எழுத்துகள், தமிழ் எழுத்துடன் இணைந்து எவ்விதம் எழுத்தாகப் பயன்படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளன.
வேற்று மொழியினர் தமிழ்மொழியைக் கற்க வேண்டுமானால், இப்பக்கமானது பெரிதும் பயன்படும். தமிழ் இலக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
எழுதி

மிகப் பயனுள்ள 100% சரியான முறையில் செயல்படும் பக்கமாக இது அமைந்துள்ளது.
தமிழில் வெவ்வேறு எழுத்துருக்களை தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாகவோ, ஒருங்குறி எழுத்துக்களை வெவ்வேறு எழுத்துருக்களாகவோ மாற்றும் பகுதி. எழுத்து மாற்றியாக இப்பகுதி மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றது.
24 வெவ்வேறு மாற்றிகள் இங்கு உள்ளன. எந்த எழுத்துருவாக இருந்தாலும் இப்பக்கத்தில் தேவையான எழுத்துருவாக மாற்றிக்கொள்ளலாம். மிகச்சரியாகவும் மாற்றித் தரும்.
இங்கு, Tamil phonetic Unicode மூலம் தட்டச்சு செய்து எழுதும் தனித்தாள் பக்கமும் இங்கு உள்ளது
தமிழ் அளவைகள்
பண்டையத் தமிழர் பயன்படுத்திய கணிதக் குறியீடுகள், எண்கூறுகளின் பெயர்கள், எண்கூற்று வாய்ப்பாடு, நீள வாய்ப்பாடு, பொன் நிறுத்தல் வாய்ப்பாடு, பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு, முகத்தல் வாய்ப்பாடு, முகத்தலளவை பெய்தல் வாய்ப்பாடு, நிறுத்தலளவை, நாள், ஆண்டு, கால வாய்ப்பாடு, தெளிப்பளவு, திதிகள், தமிழ் மாதங்கள், யுகங்கள், எண் வாய்ப்பாடு, படைகளின் அளவு, திரவளவு, கணித குறியீடுகள், கால அளவுக் குறியீடுகள் ஆகியவை விரிவாகக் கூறப்பெற்றுள்ளன.
தளத்தின் அனைத்துப் பக்கத்திலும் தமிழ் மற்றும் ஆங்கில சொற்களின் விளக்கங்களைத் தேட தேடுபொறி அமைந்துள்ளது .
களஞ்சியம்

பதினெண்கீழ்க்கணக்கு, நீதி நூல்கள், தமிழ் பாடல்கள், தமிழ் இலக்கணம், ஐம்பெரும் காப்பியங்கள், தமிழ் நூல்கள், தமிழ்ச் சான்றோர்கள் என நூல் தலைப்புகள் உள்ளன. ஒவ்வொரு நூல் தலைப்பிலும் அந்நூலில் பகுதிகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.
வினவல்
தமிழியல், கணினியியல், ஆங்கிலம், விடுகதை, பொதுஅறிவு எனும் தலைப்புகளில் கேள்வி-பதில் முறையில் எண்ணற்ற கேள்வி- பதில்கள் உள்ளன.
இணையத் தேர்வானது போட்டிகள் போல் நடத்தப்பட்டு முதன்மையர் பெயர் பட்டியலும் வெளியிடப்படுகின்றன.
அறிவுவளம் பெறவும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும், இப்பகுதி பெருமளவு பயன்படும்.
சொல் ஆட்டம்

ஆரம்ப நிலை, இடைநிலை, தேர்ந்த நிலை என மூன்று பகுதிகளாக இவ்விளையாட்டு உள்ளது. முதலில் பத்து வார்த்தைகள் 45 நொடிகள் காண்பிக்கப்படும்.
பிறகு விளையாட, தொடர் பட்டனை அழுத்தினால் பத்து வார்த்தைகளில் ஒவ்வொன்றாக எழுத்துக்கள் விடுபட்டு தரப்படும்.
அவைகளை சரியாக உள்ளீடு செய்து செய்தால் 10 மதிப்பெண் வழங்கப்படும். இதுபோல் நிறைய விளையாட்டுக்கள் உள்ளன.
இதனைப் பயன்படுத்தி நமது நினைவாற்றல் திறனை பெரியளவில் வளர்த்துக் கொள்ள முடியும்.
பேழை

தமிழர் வரலாறு, சேர, சோழ, பாண்டியர் வரலாறு, கி.முவில் நடந்தவை, யாழ்ப்பாணத்தில் வழங்கும் பேச்சுத் தமிழ் போன்றவை கட்டுரைகளாக போடப்பட்டுள்ளன.
தமிழர் தம் வரலாறைப் பதிவு செய்து வைத்திருக்கும் வரலாற்றுப் பதிவாகும் இது.
திருக்குறள்

திருக்குறள் முழுமைக்குமான பலரது உரைகள், ஆங்கில மொழி பெயர்ப்பு, ஆங்கிலத்தில் விளக்கம் எனத் திருக்குறளை முழுமைப்படுத்தி உள்ளது இப்பக்கம்.
கலைச் சொற்கள்

பல்வேறு துறை சார்ந்த ஆங்கிலக் கலைச் சொற்களுக்குத் தமிழில் மிகச்சரியான கலைச் சொற்களைத் தந்துள்ளனர்.
அகர திரட்டுகள்
பறவைகள், விலங்குகள், மலர்கள், மீன்கள், தானியங்கள், தொகைச் சொற்கள், இலக்கங்கள், பழங்கள், காய்கறிகள் என இவற்றினுடைய அனைத்து வகைகளின் பெயர்களும், அதன் வேறுபெயர்களும், விளக்கங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
சுருக்கச் சொற்கள்
தேடு பொறியில் சுருக்கக் குறியீடுகளைப் பதிவிட்டால் அதுசார்ந்த பல விளக்கங்களைத் தமிழ்ப் பொருளுடன் வெளியிடுகின்றது.
தமிழின் ஓர் அரிய சொத்து என்றே அகரமுதலி இணையதளத்தைச் சொல்லலாம்.
அகரமுதலி இணையதளத்தைப் பார்வையிட www.tamillexicon.com ஐ சொடுக்கவும்.
(இணையம் அறிவோமா? தொடரும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
பயனுள்ள கட்டுரை. தொடரட்டும் பணி…
தமிழ் தகவல்கள் பல கிடைக்கின்றன கட்டுரைக்கு வாழ்த்துக்கள் ஐயா.
Useful information
Essential and vital information.
Systematically arranged.
Thanks lot for for chandran sir for his hard efforts and this publisher too.