சென்னா மசாலா செய்வது எப்படி?

சென்னா மசாலா பூரி, சப்பாத்தி, இட்லி மற்றும் தோசை உள்ளிட்டவைகளுக்கு ஏற்ற அருமையான தொட்டுக் கறி ஆகும். ஹோட்டல்களில் சோலா பூரிக்கு இதனைத் தொட்டுக்கறியாகக் கொடுப்பர்.

ஹோட்டலில் செய்வதைப் போன்றே இதனை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். எளிய முறையில் சுவையான சென்னா மசாலா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டைக் கடலை – ‍ 1/4 கிலோ கிராம்

பெரிய வெங்காயம் – 2 எண்ணம் (பெரியது)

தக்காளி – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

கொத்தமல்லி இலை – 1 கொத்து

இஞ்சி – சுண்டு விரல் அளவு

வெள்ளைப் பூண்டு – 4 பற்கள்

மல்லிப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்

சீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

மிளகுப் பொடி – 1 ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – ‍ 3/4 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி வற்றல் பொடி – 1 ஸ்பூன்

கரம் மசாலா பொடி – ‍ 1.5 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – வெங்காயம் வதக்கத் தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

பெருஞ்சீரகம் ‍- 1/4 ஸ்பூன்

சீரகம் ‍- 3/4 ஸ்பூன்

பட்டை – 2 இன்ச்

ஏலக்காய் – 2 எண்ணம்

அன்னாசிப்பூ – 1 (சிறியது)

கிராம்பு – 2 எண்ணம்

பிரிஞ்சி இலை – 1 (சிறியது)

பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)

கறிவேப்பிலை – 2 கீற்று

சென்னா மசாலா செய்முறை

வெள்ளை கொண்டைக் கடலையைக் கழுவி முழுவதும் மூழ்குமாறு தண்ணீர் ஊற்றி, சுமார் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

சுண்டலை ஊற வைக்கும் போது, சுண்டலைப் போன்று 2 மடங்கு வரை தண்ணீர் ஊற்றவும்.

சுண்டல் நன்கு ஊறியதும், அதனைக் குக்கரில் சேர்த்து விரல்களுக்கிடையே வைத்து நசுக்கினால் எளிதாக நசுங்கும்படியாக நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி மையாக தட்டிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் வெங்காயம் வதக்கத் தேவையான அளவு நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் அதனுடன் நசுக்கிய இஞ்சி வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டினைச் சேர்த்து வதக்கும்போது

பச்சை வாசனை நீங்கியதும் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்ததும்

தக்காளி மசிந்ததும் அதனுடன் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா பொடி, காஷ்மீரி வற்றல் பொடி, மிளகுப் பொடி, சீரகப் பொடி மற்றும் மல்லிப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

பொடி வகைகளைச் சேர்த்ததும்
கலவை ஆறும் போது

வதக்கிய கலவையை நன்கு ஆற விடவும். ஆறியதும் மிக்ஸியில் தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், சீரகம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும்போது

அதனுடன் அரைத்த விழுது, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

அரைத்த விழுதினைச் சேர்த்ததும்

ஒரு நிமிடம் கழித்து அதனுடன் வேக வைத்துள்ள வெள்ளை கொண்டைக் கடலை சேர்த்து லேசாக கரண்டியால் மசித்து விடவும்.

கொண்டைக் கடலையைச் சேர்த்ததும்

கொண்டைக்கடலை பாதி நசுங்கியும் நசுங்காமலும் இருப்பது சிறந்தது. கலவை லேசாகக் கெட்டிபடத் துவங்கியதும் அடுப்பினை அணைத்து விட்டு கொத்தமல்லி இலையைத் தூவவும்.

தேவையான பதத்தில் மசாலா
மல்லி இலையைச் சேர்த்ததும்

சுவையான சென்னா மசாலா தயார்.

குறிப்பு

கொண்டைக் கடலையை ஊற வைக்கும் போது தண்ணீர் சற்று அதிகமாகவே வைக்கவும். இல்லையெனில் கொண்டைக் கடலை ஒருசேர ஊறாது. வேக வைக்கும் போது நன்கு வேகாது.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.