புரதச்சத்து நிறைந்த செம்மறி ஆட்டுப் பால்

செம்மறி ஆட்டுப் பால்

செம்மறி ஆட்டுப் பால் பொதுவாக நம் நாட்டில் பரவலாக பயன்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் பசும் பாலைப் போல் இது அவ்வளவாகக் கிடைப்பதில்லை.

ஆனால் இயற்கையில் மேய்ந்து வளரும் செம்மறி ஆட்டுப் பால் நிறைய ஊட்டச்சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டது.

உலகில் பரவலாக செம்மறி ஆட்டுப்பாலின் பயன்பாட்டினைவிட அப்பாலில் தயார் செய்யப்படும் பால்பொருள்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

செம்மறி ஆட்டுப் பாலானது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே மனித பழக்கத்தில் இருந்துள்ளது. பசுவின் பயன்பாடு பழக்கத்தில் வருவதற்கு முன்பே செம்மறி ஆடு மனிதனால் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் இப்பாலானது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நாடுகளே செம்மறி ஆட்டுப் பாலை அதிகளவு உற்பத்தி செய்கின்றன.

உலகின் மொத்த பால் உற்பத்தியில் செம்மறி ஆட்டுப் பாலானது ஒரு சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.

செம்மறி ஆடு
செம்மறி ஆடு

 செம்மறி ஆடானது குட்டி போட்டு 80-100 நாட்கள் மட்டுமே பாலினைக் கொடுக்கும். மேலும் இது குளிர் காலம் அல்லது முந்திய வசந்த காலத்தில் குட்டிகளை ஈனுகிறது. எனவே ஆண்டு முழுவதும் இப்பால் கிடைப்பதில்லை.

மேலும் ஒரு ஆடானது சராசரியாக ஒரு நாளைக்கு 3 லிட்டர் பால் மட்டுமே கொடுக்கும். எனவே தான் இது அரிதான பொருளாக கருதப்படுகிறது.

ஏனைய பாலினைவிட செம்மறி ஆட்டுப்பால் அதிகளவு கொழுப்புச் சத்தையும், புரதச்சத்தையும் கொண்டுள்ளது. செம்மறி ஆட்டுப்பாலானது வெள்ளை நிறத்தில் இனிப்பாக தனிப்பட்ட மணத்துடனும் இருக்கும்.

ரோக்ஃபோர்ட், ரோமனோ, பெக்காரினோ மற்றும் ஃப்டா ஆகியவை செம்மறி ஆட்டுப்பாலிலிருந்து தயார் செய்யப்படும் பாலாடைக்கட்டிகள் ஆகும்.

 

ரோக்ஃபோர்ட் பாலாடைக்கட்டி
ரோக்ஃபோர்ட் பாலாடைக்கட்டி

 இப்பாலானது அதிகளவு திடப்பொருட்களைக் கொண்டுள்ளதால் ஒரு லிட்டர் செம்மறி ஆட்டுப்பாலிலிருந்து அதிகளவு பாலாடைக்கட்டியைத் தயார் செய்ய இயலும்.

செம்மறி ஆட்டுப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

செம்மறி ஆட்டுப்பாலில் விட்டமின்கள் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்), பி12(கோபாலமைன்) மற்றும் இ ஆகியவை காணப்படுகின்றன.

இப்பாலில் தாதுஉப்புக்களான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம், சோடியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு, செலீனியம் ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இப்பாலில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவையும் உள்ளன.

செம்மறி ஆட்டுப் பாலின் மருத்துவப் பண்புகள்

நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற

செம்மறி ஆட்டுப் பாலில் உள்ள விட்டமின் ஏ, இ மற்றும் ஏனைய ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கின்றன.

விட்டமின் ஏ மற்றும் இ ஆன்டிஆக்ஸிஜென்டுகளாக செயல்பட்டு ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளிலிருந்து உடலினைப் பாதுகாக்கின்றன.

மேலும் உடலினை நாள்பட்ட நோய்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் இதில் உள்ள விட்டமின் இ-யானது சருமத்தை பளபளக்கச் செய்கிறது.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு

செம்மறி ஆட்டுப்பாலானது அதிகளவு புரதத்தைக் கொண்டுள்ளது. 100 கிராம் இப்பாலில் 5.4 கிராம் புரதச்சத்து உள்ளது. இது ஏனைய பாலில் உள்ள புரதத்தின் அளவினைவிட அதிகம்.

செல்கள், திசுக்கள் மற்றும் எலும்புகளின் உருவாக்கத்திற்கு புரதம் அவசியம் ஆகும். மேலும் புரதச்சத்து நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஆற்றலை வழங்குகிறது. எனவே செம்மறி ஆட்டுப் பாலினை உண்டு ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறலாம்.

புற்றுநோயினைத் தடுக்க

இப்பாலானது அதிகளவு நியூக்ளியோசைடுகளையும், நியூக்ளியோட்டுகளையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் உடலில் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடைசெய்து நல்ல செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

இப்பாலானது செல் உருமாற்றத்தையும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் தடைசெய்து புற்றுநோயினைத் தடுக்கிறது. எனவே செம்மறி ஆட்டுப்பாலினை அருந்தி புற்றுநோயினைத் தடுக்கலாம்.

பிறப்புக் குறைபாடுகளைத் தடுக்க

செம்மறி ஆட்டுப் பாலானது அதிகளவு ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது. ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு உண்டாகும் நரம்பு குழாய் குறைபாடுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

மேலும் கர்ப்பிணி பெண்களின் உடல்வளர்ச்சிதை மாற்றத்தினை சரிவர நடைபெற ஊக்குவிக்கிறது. இது கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் சுரப்பினைச் சீராக்கி பிரசவம் சீராக நடைபெற உதவுகிறது. எனவே கர்ப்பிணிகள் இப்பாலினை அருந்தி பிறப்புக் குறைபாடுகளை தடுக்கலாம்.

இரத்த அழுத்தத்தைச் சீராக்க

செம்மறி ஆட்டுப்பாலில் காணப்படும் அமினோ அமிலங்கள் அதிகளவு காணப்படுகின்றன. இந்த அமினோ அமிலங்கள் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தைச் சீராக்குகின்றன.

எனவே இயற்கை வழியில் இரத்த அழுத்தத்தை குறைக்க விரும்புபவர்கள் செம்மறி ஆட்டுப் பாலினை அருந்தலாம்.

ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கு

செம்மறி ஆட்டுப் பாலில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கு காரணமாகின்றன.

ஏனைய பால்களைவிட செம்மறி ஆட்டுப்பாலில் கால்சியம் அதிகளவு உள்ளது. இப்பாலானது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோஸிஸ் உள்ளிட்ட எலும்பு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்க

செம்மறி ஆட்டுப் பாலானது கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்க உதவுகிறது. இப்பாலானது அதிகளவு கொழுப்புச் சத்தினைக் கொண்டுள்ளது.

இப்பாலில் காணப்படும் கொழுப்புச்சத்தானது ஒற்றை நிறைவுறா கொழுப்பு வகையைச் சார்ந்தது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைத்து பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

இப்பாலில் உள்ள கொழுப்புச்சத்தில் 25 சதவீதம் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகளால் ஆனவை. இவை புரதத்திலிருந்து உடனடி ஆற்றலைப் பெற ஊக்குவிக்கின்றன.

மேலும் இவை உடலில் கொழுப்பு சேகரமாவதைத் தடைசெய்கிறது. எனவே செம்மறி ஆட்டுப் பாலினை அருந்தி கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்கலாம்.

செம்மறி ஆட்டுப் பாலினைப் பற்றிய எச்சரிக்கை

செம்மறி ஆட்டுப் பாலாது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நலம்.

செம்மறி ஆட்டுப் பாலானது ஒவ்வாவை மற்றும் சரும அழற்சிக்கு மருந்தாகப் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

செம்மறி ஆட்டுப் பாலிலிருந்து தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இப்பால் இனிப்புகள், ஐஸ்கிரீம் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
புரதசத்தினை அதிகம் கொண்ட செம்மறி ஆட்டுப் பாலினை உண்டு மகிழ்வான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

Visited 1 times, 1 visit(s) today