சொர்க்க வனம் 8 – செயற்கை ஒளி விளைவு

செயற்கை ஒளி விளைவு

மேலும் இரண்டு நாட்கள் கடந்தன. வழக்கம் போல் அன்று இரவு ஏழு மணி அளவில் பயணத்தை தொடர்ந்தது குருவிக் கூட்டம்.

மெல்ல மெல்ல நில அமைப்பு மாறிக் கொண்டிருந்தது. குருவிகள் எல்லாம் ஆச்சரியத்துடன் அதனை பார்த்துக் கொண்டே பயணித்தன.

நேர் எதிரிலிருந்த அடிவானம் வெண்மஞ்சள் நிற ஒளியால் பளிச்செனக் காட்சியளித்தது.

மேகமூட்டம் அதிகரித்திருந்ததால் வெளிச்சத்தின் வீச்சு இயல்பவைவிட அதிகமாவே இருந்தது. அதனை இருன்டினிடே கவனித்தது.

உடனே, “நண்பர்களே, நாம் பெருநகரப் பகுதிய கடக்க இருக்கிறோம். விழிப்போடு இருங்க” என்று அறிவித்தது இருன்டினிடே.

 

இருன்டினிடே அறிவிப்பை தொடர்ந்து தான் மற்ற குருவிகளும் ‘அடிவானம் இரவிலும் பளிச்சிடுவதை’ கண்டன. வாக்டெய்ல் உட்பட கூட்டத்திலிருந்த சில குருவிகளுக்கு இது முற்றிலும் புதுமையான காட்சி.

அந்த வெளிச்சத்தால் ‘பகல் மலர்ந்து விட்டதோ’ என்று அவை எண்ணின. ஆனால், இரவு தொடங்கி சில மணித்துளிகளே ஆகியிருப்பதால் அவை குழப்பம் அடைந்தன.

உடனே, அருகிலிருந்த தனது அம்மாவை நோக்கி பார்த்து, “அம்மா, தொலைவுல வெளிச்சமா இருக்கே, அங்க பகல் வந்துடுச்சா” எனக் கேட்டது வாக்டெய்ல்.

“இல்ல வாக்டெய்ல், இப்ப அங்கேயும் இரவு தான்.”

“இரவு நேரத்துல இவ்வளவு வெளிச்சம் எப்படிமா வரும்?” என்று குழப்பத்தில் கேட்டது வாக்டெய்ல்.

“இப்ப தலைவர் ஐயா என்ன சொன்னாரு?”

“பெருநகரத்த கடக்கப் போறோம்னு சொன்னாரு.”

“அஅ… அந்த பெருநகரத்துல நிறைய செயற்கை விளக்குகள் இப்ப ஒளிர்ந்துக்கிட்டு இருக்கு. அதனாலத்தான் அங்க வெளிச்சமா இருக்கு. என்ன புரியுதா?”

“செயற்கை விளக்குகளா?”

“நீ அதையெல்லாம் பார்க்க தான போற, வா…”

ஆர்வத்துடன் இருந்தது வாக்டெய்ல்.

சில மணித்துளிகளில்,பெருநகரப் பகுதியின் எல்லைக்குள் நுழைந்தது குருவிக் கூட்டம்.

 

குருவிகள் எல்லாம் வியந்த படியே நிலப் பகுதியைப் பார்த்துக் கொண்டு பறந்தன. காரணம் செயற்கை விளக்குகள்.

அங்கிருந்த மனிதக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் முதலியவற்றில் இருந்து செயற்கை விளக்குகள், ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன.

அத்தோடு சாலையின் இருமருங்கிலும் சீரான இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் எல்லாம் மஞ்சள் நிற ஒளியை உமிழ்ந்தவாறே நிமிர்ந்து நின்றுக் கொண்டிருந்தன. இவற்றால் நகரமே ஜொலித்துக் கொண்டிருந்தது. அத்தோடு இரைச்சலும் மிகுந்திருந்தது.

“நண்பர்களே, கவனத்துடன் தொடர்ந்து நேர்கோட்டுல பயணிக்கணும். நான் சொல்லும் போது பாதையை மாத்தணும்” என்றது இருன்டினிடே.

“சரி ஐயா” என்றன குழு கண்காணிப்பாளக் குருவிகள்.

அடுத்த நொடி, மீண்டும் குருவிகள் நிலப்பகுதியை பார்க்க தொடங்கின. காரணம் செயற்கை ஒளியால் குருவிகள் வெகுவாக கவரப்பட்டன.

எதிரே சில பெரிய கட்டிடங்கள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தன. அவற்றில், சுமார் நாற்பது முதல் அறுபது மாடிகள் வரை இருக்கலாம்.

கட்டிடங்கள் எல்லாம் வெவ்வேறு உயர அளவில் நீண்ட இடைவெளியுடன் இருந்தன. அக்கட்டிடங்களின் கண்ணாடி சன்னல் வழியே செயற்கை ஒளி தகதகவென பளிச்சிட்டது.

குருவிக் கூட்டம் அந்தக் கட்டிடங்களை நெருங்கிக் கொண்டிருந்தது.

உடனே, இருன்டினிடேவிடம் இருந்து எச்சரிக்கை சமிக்ஞை வந்ததுக் கொண்டே இருந்தது. அதனையடுத்து கூட்டத்தில் இருந்த குருவிகள் எல்லாம் சுதாரித்துக் கொண்டன.

“நண்பர்களே, இப்ப இடது பக்கமா திரும்பணும்” என்றது இருன்டினிடே.

குருவிக் கூட்டம் அங்கிருந்து ஒரு பெரிய கட்டிடத்தை இடப்பக்கமாக கடந்து பறந்து சென்றது.

நல்ல வேளை இன்னும் சற்று நேரே சென்றிருந்தால் குருவிகள் அந்தக் கட்டிடத்தின் மீது மோதியிருக்க கூடும்.

இதனை உணர்ந்த குருவிகள்,

தலைவர் ஐயாவின் சமிக்ஞையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கின.

சிறிது நேரத்தில் மீண்டும் வலது புறமாக திரும்பும்படி இருடின்டேவிடம் இருந்து தகவல் வந்தது. உடனே எல்லா குருவிகளும் வலது புறமாக திரும்பின.

பிரம்மாண்டமான கட்டிடங்களை இரசித்துக் கொண்டே குருவிக் கூட்டம் பயணித்துக் கொண்டிருந்தது.

 

அப்பொழுது அங்கிருந்த ஒரு பெரிய கட்டிடச் சுவற்றின் மீது பச்சை, ஊதா, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் ஒளி வெள்ளம் பாய்ந்துக் கொண்டிருக்க, அதனை கண்டது வாக்டெய்ல்.

உடனே, “அம்மா அங்க பாருங்க ஆரோரா” என்றது.

வாக்டெய்ல் சுட்டிக் காட்டிய இடத்தை பார்த்தது அதன் அம்மா.

உடனே, “வாக்டெய்ல், அது ஆரோரா இல்ல. செயற்கை ஒளி தான். ஆரோரா இங்க வர வாய்பில்ல” என்றது.

அப்பொழுது தான், தனது தந்தை ஆரோரா பற்றி சொன்ன தகவல்கள் நினைவிற்கு வந்து. எனினும், செயற்கை ஒளி அழகை வாக்டெய்ல் இரசித்தது.

தொடர்ந்து உயர்ந்த கட்டிடங்களின் மத்தியில் ஒருமணி நேரமாக குருவிக் கூட்டம் மெதுவாக பயணித்தது.

அப்பொழுது, நேரே செல்லாமல் தென்கிழக்கு திசையில் திரும்பும்படி கூட்டத்திற்கு சமிக்ஞை தந்தது இருன்டினிடே. அதன்படி கூருவிக் கூட்டம் திசையை மாற்றிக் கொண்டு பயணிக்க தொடங்கியது.

நேரம் நகர்ந்தது.

 

இப்பொழுதோ, உயர்ந்த கட்டிடங்கள் இல்லை. எனினும் குடியிருப்புகள் நிறைந்திருந்தன. அவற்றிலிருந்து வெளிவந்த செயற்கை ஒளி விண்ணை பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஆனால் இரைச்சல் சற்றே தணிந்திருந்தது.

திடீரென, ஒரு குழு கண்காணிப்பாளரிடம் இருந்து பிரச்சனைக்கான சமிக்ஞை வந்தது. உடனே குருவிக் கூட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

உடனடியாக, அக்குழு கண்காணிப்பாளரிடம் இருன்டினிடே செல்ல, அக்குழுவில் இருந்த நான்கு குருவிகள் தொலைந்துவிட்ட அதிர்ச்சி செய்தியை, அது சொன்னது.

குருவிகளுக்கோ துக்கம் மேலிட்டது. தொலைந்து போன குருவிகளின் நிலையைக் குறித்து அவை பெரிதும் வருந்தின.

தாமதமின்றி, மீண்டும் வந்த வழியே கூட்டத்தை அழைத்துக் கொண்டு பயணிக்க தொடங்கியது இருன்டினிடே.

குருவிகள் எல்லாம் சோகத்துடனும் பதற்றத்துடனும் பறந்துச் சென்றன. எங்காவது தொலைந்து போன குருவிகள் தென்படுகின்றனவா என்று பார்த்துக் கொண்டே சென்றன.

மீண்டும் உயர்ந்தக் கட்டிடங்கள் நிறைந்த அந்தப் பகுதியை குருவிக் கூட்டம் வந்தடைந்தது.

சிறுயோசனைக்கு பின், அங்கிருந்து ஒரு உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் கூட்டத்தை அழைத்துச் சென்று தங்க வைத்தது இருன்டினிடே.

குருவிகள் பதற்றத்துடன் இருந்தன. சில குருவிகள் கண்ணீர் வடித்தன. சில புலம்பிக் கொண்டிருந்தன.

அந்த குழு கண்காணிப்பாளர் குருவி இருன்டினிடேவிடம் மன்னிப்புக் கோரியது. தனது கடமையை சரியாக செய்யாமல் இருந்து விட்டதாக வருந்தியது.

இருன்டினிடேவோ ஆறுதல் கூறியது.

 

அடுத்து செய்ய வேண்டியதைக் குறித்து மூத்த குருவிகள் எல்லாம் இருன்டினிடேவிடம் விவாதித்தன.

அதன்பின், “நண்பர்களே நள்ளிரவு வரும்வரை அமைதி காப்போம். பிறகு நமது நண்பர்களை தேடி செல்லலாம்” என்றது இருன்டினிடே.

குருவிகள் எதுவும் பேசவில்லை. சோகத்துடன் அந்த உயர்ந்த கட்டிடத்தில் இருந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தன.

இப்பொழுது, பெருநகரத்தின் செயற்கை அழகு அவற்றின் கண்களுக்கு தெரியவில்லை. பலவண்ணங்களில் கட்டிடத்தின் மீது தோன்றி மறைந்த ஒளிவடிவங்களின் அழகும் அவற்றின் கண்களுக்கு மகிழ்வை தரவில்லை.

ஒட்டுமொத்த குருவிகளின் கண்களும் தொலைந்துப் போன நான்கு குருவிகளை தேடிக் கொண்டிருந்தன. எனினும், செயற்கை ஒளியின் வீச்சில் அச்சிறு குருவிகளின் உருவங்களை காணமுடியாமல் அவை தவித்தன.

குருவிகள் எல்லாம் கூட்டத்திற்கான பிரத்யேகமான குரல் சமிக்ஞையை தொடர்ந்து எழுப்பின. அந்த பெருநகரம் உண்டாக்கிய இரைச்சலின் முன் அவற்றின் குரல் ஒலி எடுபடவில்லை.

நேரம் கடந்தது. நள்ளிரவு வந்தது. பெருநகரத்தின் இரைச்சல் வெகுவாய் தணிந்தது. செயற்கை ஒளியும் மறைந்தது.

உடனே, “நண்பர்களே, நீங்க இங்கேயே தங்கியிருங்க, நாங்க போய் நண்பர்கள தேடிட்டு வரோம்” என்று சொல்லி தன்னுடன் சில குருவிகளை மட்டும் அழைத்துச் சென்றது இருன்டினிடே.

அவை குரல் சமிக்ஞை எழுப்பியபடி அந்தப் பகுதி முழுவதும் ஒரு மணிநேரமாக சுற்றித் திரிந்தன. தொலைந்து போன குருவிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

அப்பொழுது இருன்டினிடேவிற்கு ஒரு யோசனை வந்தது. அதன்படி, எந்த இடத்தில், தான் தென்கிழக்காக திரும்பச் சொல்லி சமிக்ஞை தந்ததோ, அவ்விடத்திற்கு உடன் இருந்த நண்பர்களை அழைத்துச் சென்றது.

அங்கு ஒலியை எழுப்பியவாறே தொலைந்து போன குருவிகளை அவை தேடின.

அப்பொழுது தூரத்திலிருந்த ஒரு கட்டிடத்தின் பக்கவாட்டு சுவற்றிலிருந்து இரண்டு பறவைகள் மேலெழுந்தன.

அதனை கண்டது இருன்டினிடே. உடன் இருந்த நண்பர்களிடம், “அங்க பாருங்க நம்ம நண்பர்கள் மாதிரி தெரியுது” என்றது இருன்டினிடே.

அவற்றைக் கண்டதும், “ஆமாம் ஐயா, ஆனா இரண்டு பறவைகள் மட்டும்தா இருக்கிற‌ மாதிரி தெரியுதே” என்றன.

“சரி, எதற்கும் அங்குச் சென்று பார்ப்போம்” என்று சொல்லி அந்த இடத்தை நோக்கி அவை சென்றன.

எதிரில் இருந்த இரண்டு பறவைகளிடம் இருந்தும் ஒலி வந்தது.

இருன்டினிடேவும் அதன் நண்பர்களும் மகிழ்ந்தன. ஆம், அந்த ஒலி குருவிக் கூட்டத்திற்கான பிரத்யேகமான சமிக்ஞை தான்.

ஆனால் அங்கு இரண்டு குருவிகள் மட்டும் தான் இருக்கின்றன. மற்ற இரண்டு குருவிகள் எங்கே? என்ற கேள்வியோடு மேலும் முன்னோக்கிச் சென்றன.

இயற்கையான இரவு வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது. அவை தொலைந்துப் போன குருவிகள் தான். அவை இரண்டும் முன்னோக்கி வந்தன. நண்பர்களைப் பார்த்து அழுதன.

“அழாதீங்க நண்பர்களே, இப்ப தான் நாம் ஒன்னு சேர்ந்துட்டோமே” என்று அவைகளை தேற்றியது இருன்டினிடே.

அவை தொடர்ந்து அழுதன. “சரி, இன்னும் இரண்டு நண்பர்கள, கண்டுபிடிக்கனும், சீக்கிரம் புறப்படுங்க” என்றது இருன்டினிடே.

அதற்கு அவை, “ஐயா, அந்த இரண்டு பேரும் பத்திரமா கட்டிடத்தோட பின்புறம் இருக்காங்க. வாங்க அங்க போவோம்” என்றன.

இருன்டினிடேவிற்கும் நண்பர்களுக்கும் நிம்மதி வந்தது. “நல்லது” என்று சொல்லி கட்டிடத்தின் பின்புறம் சென்றன.

அங்கு சோகத்திலிருந்த மற்ற இரண்டு குருவிகளையும் கண்டு தேற்றியது இருன்டினிடே.

காணாமல் போன நான்கு குருவிகள் மீண்டும் கிடைத்துவிட்டதை எண்ணி இருன்டினிடேவும், அதன் நண்பர்களும் மகிழ்ந்தன. பின்னர் அவை, நேராக பயணித்து, குருவிக் கூட்டம் தங்க வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தை வந்தடைந்தன.

தொலைந்து போன நான்கு குருவிகளை கண்டதும், குருவிகள் எல்லாம் நிம்மதி அடைந்தன. மகிழ்ச்சியில் துள்ளின. அந்த நான்கு குருவிகளும் கண்ணீருடன் நன்றிகளை தெரிவித்தன.

அன்பினால், சில குருவிகள் அவற்றை கடிந்து கொண்டன. எனினும் உடனே சமாதானம் அடைந்தன. பதற்றம் நீங்கி ஒருவித மகிழ்ச்சியும் நிம்மதியும் கூட்டத்தில் தோன்றியது.

 

அப்பொழுது, அந்த நான்கு குருவிகளை பார்த்து, “நண்பர்களே எப்படி கூட்டத்திலிருந்து பிரிந்து போனீங்க?” என்று கேட்டது வாக்டெய்ல்.

அதற்கு, “நாங்க கூட்டத்தோடுதான் வந்துட்டு இருந்தோம். அங்க உயர்ந்த கட்டிடத்துல இருந்து வந்த செயற்கை ஒளிய பார்த்துக்கிட்டே அங்க போயிட்டோம்.

ஏன்னு தெரியல… அங்க போகனும்னு தோனிச்சு. அங்க போய் அப்படியே நின்னுட்டோம். கொஞ்ச நேரத்துல செயற்கை விளக்குகள அணைச்சுட்டாங்க. அதனால செயற்கை ஒளி சுத்தமா போயிடுச்சு.

அப்புறம் தான் தெரிஞ்சுது நாங்க கூட்டத்துல இருந்து பிரிஞ்சுட்டோம்னு. என்ன செய்யற‌துன்னு தெரியாம பயத்துல குரல் ஒலி எழுப்பினோம்.

எப்படியும் நீங்க தேடி வருவீங்கன்னு தெரியும், அதான் அந்த இடத்துலேயே தங்கியிருந்தோம்” என்று அழுதுக் கொண்டே, ஒரு குருவி நடந்தனவற்றை சொன்னது.

“நண்பர்களே, ஒளியால நாம் ஈர்க்கப்படுறது இயற்கை தான். ஆனா இரவு நேரத்துல ஒளிரும் செயற்கை ஒளியலா நாம் ஈர்க்கப்படும் போது இதுமாதிரி நிறைய பிரச்சனை வருது.

எனக்கு தெரிந்து நம்ம பறவை நண்பர்கள் சிலபேரு செயற்கை ஒளியால பாதிக்கப்பட்டிருக்காங்க.

இன்னும் சில பறவை நண்பர்கள், உயர்ந்த கட்டிடத்துல இருந்து வந்த செயற்கை ஒளி நோக்கி போய், அந்த கட்டிடத்துலேயே மோதி தனது உயிரையே விட்டிருக்காங்க. நாம தான் எச்சரிக்கையோடு இருக்கணும். சரியா?” என்றது இருன்டினிடே.

“சரி ஐயா, இனி இது மாதிரி எந்த தவறும் நடக்காது” என்று குருவிகள் எல்லாம் ஒருமித்துக் கூறின.

அதன் பின்னர் கூட்டத்தில் இயல்பு நிலை திரும்பியது. அப்பொழுது அதிகாலை மூன்று மணி இருக்கும். மீண்டும் பயணத்தை தொடர்ந்தது குருவிக் கூட்டம்.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 9 ‍- நண்பனை சந்தித்த இருன்டினிடே

சொர்க்க வனம் 7 – ராபின் தந்த தகவல்

Visited 1 times, 1 visit(s) today

Comments

“சொர்க்க வனம் 8 – செயற்கை ஒளி விளைவு” அதற்கு 2 மறுமொழிகள்