நம் அண்டை வீட்டுச் செய்தியிலிருந்து ஆயிரம் கல் தொலைவிலுள்ள நாடுகள், விண்வெளிக் கோளங்கள் ஆகியவற்றில் நிகழும் அதிசயச் செய்தி வரை நம்மிடம் கூறும் நண்பன் செய்தித்தாள். அதனால்தான் நாம் தினமும் அதன் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம்.
தோன்றிய வரலாறு
ஐரோப்பாவில் உள்ள ரோம் நகரத்தில், ஜான்கூடன்பர்க் என்பவர் கி.பி.1450இல் அச்சடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அவர் முதல்முதலில் விவிலிய நூல் அச்சிட்டார்.
பின்னர் செய்தித்தாள் வெளியிடும் பழக்கம் ஏற்பட்டது. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப செய்திகளை வெளியிடுவதிலும், செய்தித் தாள்களின் அமைப்பிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன.
செய்திகள் வெளியிடப்படும் கால அளவைக் கொண்டு செய்தித் தாள்கள் பலவகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
செய்தித்தாள் வகைகள்
இன்று நம்நாட்டில் பல மொழிகளிலும் தினத்தாள், வார இதழ்கள், வாரம் இருமுறை, இரு வார இதழ் என மிகப்பல செய்தித்தாள் உள்ளன.
தினத்தாள் தினமும் ஆங்காங்கு நிகழும் செய்திகளைத் தரும். பிற இதழ்கள், கதைகள், கட்டுரைகள், நாடகம் முதலிவற்றை ஏந்திவரும்
தினத்தந்தி, தினமலர், தினகரன், தி இந்து தமிழ், மாலைமுரசு போன்ற தமிழ் செய்தித்தாள்களும், ‘இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்களும் தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரபலமான இதழ்கள் ஆகும்.
வரும் செய்தி :
அன்றாட நிகழ்ச்சிகள், நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமுதாய ஊழல்கள், கொலை, கொள்ளை, விளையாட்டுப் போட்டிகள், அறிவியல், தொழில் சார்ந்த செய்திகள் முதலிய எத்தனையோ செய்திகளை நாம் வீட்டிலிருந்து கொண்டே அறியலாம்.
வார இதழ்களில் சிறுகதைகள், விஞ்ஞானம், கவிதைகள், இலக்கிய கட்டுரைகள் முதலியன இடம் பெற்று நன்மை இன்புறுத்துகின்றன.
செய்தித்தாளின் பயன்
மக்களை உயர்த்தி செல்லும் பெருமை பத்திரிகைகளுக்கு உண்டு. இன்னும் பத்திரிக்கைகள் உலக மக்களை ஒரே இனமாகக் கருதும் ஒருமைப்பாடு வளர்ச்சிக்கும் வித்திடுகின்றன.
உலகியலறிவு, மொழி பயிற்சி, வாழ்வாங்கு வாழும் வழி, நகை, உடை. உவகை, வீரம், சோகம் போன்ற பலவகை உள்ளச் சுவைகளும் படிப்பதால் அமைகின்றது.
தொழில் வளரவும், செழிக்கவும், வாணிகம் தழைக்கவும், பொருளாதாரம் செழிக்கவும் செய்தித்தாள்கள் உதவுகின்றன.
கரும்பு தின்ன கூலி வேண்டுமா? என்ற பழமொழிக்கிணங்க, மாணவர்கள் செய்தித்தாள்களைப் பிறர் சொல்வதற்காக அல்லாமல் தமக்காகவே தினமும் ஆர்வத்துடன் கற்க வேண்டும்.
முக்கிய அரசியல், விஞ்ஞான, இலக்கிய விளக்கங்களையும் புள்ளி விவரங்களையும் குறிப்பெடுத்து, தம் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
அன்றாட அரசியல் செய்திகளே வரலாறாகப் பிற்காலத்தில் அமைபவை.
இப்போது கூட நாம் இந்து இதழில் 50 ஆண்டுகளுக்கு முன்பு என்று சிறு குறிப்புகளைக் கொடுப்பதை எவ்வளவு ஆர்வமாகப் படித்துப் பார்க்கிறோம்.
சில சமயம் போலீசார் சில எச்சரிக்கைகளைச் செய்தித்தாள்கள் மூலம் விடுகிறார்கள். அவை நல்ல பயனைத் தருகின்றன.
செய்திதாளை நாளும் படித்தறிந்து உலக அனுபவத்தையறிந்து அதன்படி நடக்க வேண்டும்.
S.ஆஷா