செய்யது ஆசியா உம்மா – சூஃபி ஞானி

செய்யது ஆசியா உம்மா அவர்கள் அல்லாவின் பெருமையை இனிய தமிழில் பாடிய சூஃபி ஞானி. அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் தோன்றியவர்.

தமிழக வரலாற்றில், பல்வேறு மதங்களின் இறைஞான சிந்தனைகள், இறையாண்மைத் தத்துவங்கள் போன்றவை குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.

அக்காலத்தில் பரவலான கவனத்தைப் பெற்று அவை, பெரும்பாலான மக்களைப் பண்படுத்தி வழிப்படுத்தின என்றால் மிகையாகாது.

ஏகத்துவக் கொள்கையைப் பறைசாற்றும் சூஃபிசம் ’இஸ்லாத்தின் உள்ளுணர்வு’ வெளிப்பாடாகச் சமூகத்தில் கவனிக்கப் பெற்றது.

இதன் வழி இறையாண்மைக் கொள்கையை, இஸ்லாத்திற்குள் முதன் முதலாக நுழைய வருபவருக்கும், இஸ்லாத்தில் உள்ளவர்களுக்கும் ஆழமான முதிர்ச்சியைத் தர முடிந்தது. ஆன்மீகத்தின் தேடலாகவும் அமைந்தது.

சூஃபித்துவம்

இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் சூஃபித்துவம் எனச் சொல்லப்படுகிறது.

’அகமது இபின் அசிபா’ எனும் சூஃபி ஆசிரியர் இதனை விளக்க முனையும் பொழுது, ”சூஃபியிசம் என்பது இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்கப் பண்புகளால் அழகுபடுத்துவதற்கான ஒரு அறிவியல்” என்கிறார்.

தமிழ்நாட்டில் சூஃபிகள்

மனிதனின் சம்பூரணத் தன்மையைச் செதுக்கி, அவனுக்குள் ஒளிவெள்ளமான தூய்மையான இறையைக் காட்டுவதே, இந்த ஞானப்பாதையின் வழியாகும்.

இதனைப் பலரும் தமிழ்நாட்டில் செய்து வந்தனர். அவர்கள் ”தரீக்கா” என அழைக்கப்பட்டனர்.

தமிழ் மொழியில், சூஃபி என்பவரை, முஸ்லிம் சித்தர், ஆத்மஞானி, மெய்ஞ்ஞானி எனும் பல பெயர்களில் அழைத்தனர்.

இவர்களின் வரலாறுகள் எண்ணி எண்ணி வியக்கத் தக்கவை. ஆன்மீகத் துறவிகளுக்கான‌ தூய்மையான வாழ்க்கை, மனத்தெளிவு, உண்மையைக் காட்டி நிற்றல் ஆகியவற்றால் பிறரைவிட உயர்ந்து நிற்கின்றனர்.

இத்தகு வலிமார்களின் வரலாறுகளைத் தமிழில், எம் ஆர் எம் அப்துல் ரஹீம் மிக விரிவாகப் பல நூல்கள் வழித் தந்துள்ளார்.

இதனைப் போன்று மணவை முஸ்தபா அவர்கள் அரிதின் முயன்று பல வலிமார்களின் வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார்.

வலிமார்களின் வாழ்வைப் பார்த்து, அவரவர் வாழ்வை ஒழுங்கை அமைத்துக் கொண்டனர்.

அவ்வாறு இருக்கும் பொழுது, எந்நாளும் இவ்வுலகில் பிரச்சினைகளோ துன்பங்களோ இல்லை என்றும், எங்கும் இன்பத்தின் பிரகாச ஒளி வழிநடத்தும் என்றும் அறிந்தனர்.

இதனைத் ’தஸவ்வுப்’ வார்த்தைகளால் கூற வேண்டுமென்றால், ”இறைவன் உன்னை உன்னளவில் இறந்து படும்படிச் செய்து, அவன் மாட்டு உன்னை வாழும்படிச் செய்வர்” என்பது அதுவாகும்.

இப்படிப்பட்ட வலிமார்கள் தமிழகத்தில் இருந்தனர். அவர்களில், பெண் சூஃபிகளும் காணப்பட்டனர். பெண்சூஃபிகளில் கீழக்கரை செய்யது ஆசியா உம்மா குறிப்பிடத்தகுந்தவர் ஆவார்.

கீழக்கரை செய்யது ஆசியா உம்மா

இஸ்லாமிய இலக்கிய வரலாறுகளில் மட்டுமே பேசப்பெறும் இந்தப் பெண் சூஃபியின் வாழ்க்கை வரலாறும், அவரின் மெய்ஞான நூல்களும் காலத்தால் போற்றப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டியவையாகும். பொதுஇலக்கிய வரலாற்றில் இந்த ஞானியரின் வரலாறு பேசப்பட வேண்டும்.

சிற்றிலக்கிய வகையில் தத்துவ மரபின் வெளிப்பாடுகளை எழுதியிருக்கும் பாங்கும், அரபி மொழியில் தமிழ் வார்த்தைகளை எழுதும் இவரின் அரபுத் தமிழ் எழுத்து முறையும் எண்ணத்தக்கதாகும்.

இவரது அனைத்து நூல்களும் இவ்வாறே எழுதப்பட்டிருக்கின்றன மற்றும் பதிப்பிக்கவும் பட்டிருக்கின்றன.

’அரபுத் தமிழ்ப் பயன்பாடு’ குறித்துக் கூறும்பொழுது, ”அரபு மொழி வரிவடிவத்தில் தமிழ்ச் சொற்களை எழுதுவது தான் அரபுத்தமிழ்.

அந்த மரபைத் தமிழ் முஸ்லிம்கள் கடந்த பல நூற்றாண்டுகளில் பின்பற்றி வந்துள்ளனர்.

பள்ளிகளுக்குச் சென்று, தமிழும், பிற மொழிகளும் பயிலாத அன்றைய முஸ்லிம் மக்கள் மதரஸாக்களில் அரபு மொழியில் ஓதிப் படித்தார்கள்.

அதனால் தமிழ் இலக்கியங்களை அரபு எழுத்து வடிவில் எழுதித் தங்குதடையின்றிப் படிக்கும் பழக்கவழக்கம் பரவியது” என்று கூறுவார்கள்.

ஹபீபு முஹம்மது மரைக்காயரின் மகளாகக் கீழக்கரையில் செய்யது ஆசியா உம்மா பிறந்தார்.

பெருமளவிலான கடல்வாணிப வியாபாரத்தில் இவரது குடும்பத்தார் பணம் சம்பாதித்தும், ஊரில் புகழ் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

‘கீழக்கரை தவச்செம்மல்’ என அழைக்கப்பட்ட இறைநேசர் கல்வத்து நாயகம் சையது அப்துல் காதிர் அவர்களின் கீழ் இறை ஞானக் கல்வி கற்று, அவரின் சீடராக இருந்து பல மெய்ஞான நூல்கள் கற்றும் எழுதியும் வந்தார்.

ஆசியா உம்மா தனது மெய்ஞானக்குருவினைப் போல் யாருடனும் அதிகம் பேசாமல், இறைத்துவ தியான நிலையைப் பெறவே எப்போதும் மௌனமாகவே இருப்பார்.

ஞானக் கல்வியும், ஞானப் பயிற்சியும் ஒன்றுகூட மெய்ஞான இலக்கியங்களை எழுத ஆரம்பித்தார்.

அரபுத் தமிழில், அவர் அறிந்த மொழி வடிவமான அரபி எழுத்துகளில் தமிழ் வார்த்தைகளை எழுதிப் பல நூல்கள் படைத்தார்.

தனிமை, இறைப்பற்று, ஞானத்தேடல் ஆகியவற்றால் யாருடனும் பேசாமல் இருந்த ஆசியா உம்மா அவர்களை அவ்வூரார், ‘மேல் வீட்டுப் பிள்ளை‘ என்று அன்புடன் செல்லப் பெயரிட்டு அழைத்தனர்.

புனித ஹஜ் க‌டமையையும் உரிய நேரத்தில் இவர் நிறைவேற்றினார்.

ஆசியா அம்மாவின் மெய்ஞான நூல்கள்

• மெய்ஞானத் தீப ரத்தினம்

• மாலிகா இரத்தினம்

• அஸ்மாவுல் ஹுஸ்னா முனாஜாத்து

• 99 நாமங்கள்

• ஹபீபு அரசர் மாலை

• கல்வத்து நாயகம் முனாஜாத்து

• கல்வத்து நாயகம் துதி

• கல்வத்து நாயகம் இன்னிசை

• பல்லாக்கு தம்பி முனாஜாத்து

• பல்லாக்கு ஒலி துதி

• ஞான ரத்தினக் கும்மி

மேற்காணும் ஆசியா உம்மா அவர்களின் நூல் குறித்த பட்டியல், ’இஸ்லாமிய தமிழ் இலக்கிய நூல் பட்டியலில்’ இடம் பெற்றுள்ளது.

இப்பாடல்கள் அனைத்தும் கன்னி, விருத்தம், துதி, இன்னிசை, ஆனந்தக்களிப்பு, கும்மி, வெண்பா, பதிகம், மாலை, தாலாட்டு ஆகிய சிற்றிலக்கிய வகைகளில் எழுதப்பட்டுள்ளன.

ஆசியா உம்மா அவர்கள் அறிந்த வலிமார்களின் சிறப்புகளையும் அற்புதச் செயல்களையும் தமது பாடல்களில் குறிப்பாகத் தந்துள்ளார். அவர் வியந்த வலிமார்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள்,

• ஆரிபு நாயக்கர்

• நாகூர் ஷாகுல் ஹமீது நாயகர்

• குணங்குடி மஸ்தான் சாகிபு

• இமாம் கஸ்ஸாலி 

எனும் நால்வராவர்.

ஆசியா உம்மா தான் பெற்ற ஆன்மிக அறிவைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் உரைநடை வடிவிலான பகுதிக்குத் “தரீகுஸ் ஸாலிஹீன்” என்று பெயர்.

அதில் ஜக்காத் (ஏழை வரி) பற்றி செய்யிது ஆசியா உம்மா சொல்லியிருப்பதை, ”இப்போது” எனும் இணையதளம் பதிவு செய்துள்ளது.

அதில், நூறு ரூபாய் நம் கைவசம் இருந்தால், இரண்டரை ரூபாய் ஜக்காத்துக் கொடுக்க வேண்டியது நமக்கேற்பட்ட கடன்.

ஜக்காத்து, ஸதகாவை கோபம், கடுகடுப்பு, கொடுகொடுப்பு, முணுமுணுப்புடனே கொடுக்கவே கூடாது. இப்படிக் கொடுத்தால் அதில் யாதொரு சவாபு பிரயோஜனமும் கிடையாது.

அல்லாஹு தஆலா நமக்கு முதலைத் தந்து, ஏழைகளுடைய முதலையும் ஒன்றாகச் சேர்த்துத் தந்திருக்கிறான்.

ஆதலால் அவர்களுக்குக் கொடுக்கிற விதம் குளிர்ந்த முகமாகவும், இரக்கச் சிந்தனையுடன், உகப்புடனே கொடுக்க வேண்டியது.

நமக்குத் தந்த முதல், ரிஸ்குகளில் எத்தனையெத்தனை ஹல்குகளுக்கோ (படைப்புகளுக்கு) அல்லாஹ் பங்கிடுகிறான்.

எத்தனை காக்கை குருவியோ, பூனை நாயோ, ஈ எறும்போ, மனுவோ இவற்றிற்குப் போகிறது.

ஏக ரப்புல்ஆலமீன் ரிஸ்கு கொடுக்கும் விதங்களை நன்றாய்க் கவனித்து ஆழிய கருத்தாய் ஆராய்ந்துணர்” என்றுள்ளது.

மெய்ஞான பாடல்களில் சில வரிகள்

”தன்னை அறிந்துணர சதானந்த நிஷ்டையருள்
என்னை உன்னில் சேர்த்தே ஏக பராபரனே
ஆவி அகலுமுன்னே ஆண்டவனே உன்னருளை
ஏவி என்னில் வரச்செய் ஏகபரிபூரணனே
என்னை உற்றுணர்ந்தேன் ஏதுமில்லை உன்னையன்றி
என்ன கதி தருவாய் ஏக பரிபூரணனே”

”என்னிலே நீயன்றி எவருண்டு ஒன்றுமில்லை
என்னை ஆராய வேண்டாம் இறையேகப் பாரானவனே”

”எந்தனுக்குள்ளே இலங்கும் உயர் சூட்சியத்தை
விந்தையுடன் காட்டியருள் வேதா சதக் வலியே
பேசமுடியாத உயர் பேரின்ப சாகரத்துள்
ஆசையுடன் முழுக அருளும் சதக்வலியே”

ஆசியா உம்மாவின் பாடல்கள், திருக்குர்ஆனின் பொருள்சாரத்தைக் கொண்டுள்ளன.

அடிப்படைக் கருத்துக்களைத் திருக்குர்ஆன் கூறும் பொழுது,

”இறை வண்ணத்தில் தோய்வீராக இறைவனைப் போல் அதிகமாக வண்ணத்தைக் கொடுப்போர் யார்?“ – (திருக்குர்ஆன் 2:138)

”நான் உங்களின் உயிர் (நப்ஸ்) களிலே இருக்கிறேன். என்னை நீங்கள் பார்க்க வேண்டாமா? – (திருக்குர்ஆன் 51:21)

என்கிறது இக்கருத்தை ஆசியா உம்மாவின் பாடல்களில், பல இடங்களில் ஒப்பிட்டுக் காணலாம்.

இலக்கிய உலகில் பெரிதும் அறியப்படாத மற்றும் ஒரு இலக்கியவாதி குறித்து அறிய அடுத்த வாரம் வரைக் காத்திருப்போம்.

புதையல் தேடுவோம்…

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

முந்தையது

3 Replies to “செய்யது ஆசியா உம்மா – சூஃபி ஞானி”

  1. சிறந்த வரலாற்றுப் பதிவு.

    படைப்பிலக்கிய உலகில் பெண்கள் ஒரு மகத்தான பணியைச் செய்த வரலாற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    மகிழ்ச்சி ஐயா!

  2. சூஃபித்துவம் பற்றி முந்தைய கட்டுரையிலும் பாரதி சந்திரன் அவர்கள் பேசியிருந்தார்.

    இப்போது கீழக்கரை செய்யது ஆசியா உம்மா பற்றிய சுவராசியமான தகவல்களையும் பொக்கிஷமான தமிழ் படைப்புகள் பற்றியும் அவருக்கே உரிய நிதானமான தெளிவான ஆதாரங்களுடன் தொகுத்துத் தந்துள்ளார்.

    எனக்கும் கீழக்கரைக்கும் நெடுங்கால தொடர்பு இருக்கிறது. என் தந்தை எங்கள் உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது அழைத்துச் சென்றிருக்கிறார். ஆசியா உம்மா பற்றி என் தந்தையும் ஏதேதோ சொல்ல கேட்டதாய் எனக்கு இப்போது ஞாபகம் இருக்கிறது.

    ஆசிரியர் குறிப்பிட்டது போல் தனிமை, இறைப்பற்று, ஞானத்தேடல் ஆகியவற்றால் யாருடனும் பேசாமல் இருந்த ஆசியா உம்மா அவர்களை அவ்வூரார், ‘மேல் வீட்டுப் பிள்ளை‘ என்று அழைத்தனர் என்ற செய்தியை அந்த காலத்திலேயே என் தந்தை சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

    மற்றபடி எப்போதும் போல் பாரதி சந்திரன் அவசரகதியில் அள்ளி தெளிக்காமல் நின்று நிதானமாக களமாடி இருக்கிறார்.

    ”என்னிலே நீயன்றி எவருண்டு ஒன்றுமில்லை
    என்ற வரிகளுக்கு ஏற்றார்போல்…

    உங்களையும் உங்கள் எழுத்தைப் பிரசுரித்து பெருமைப்படுத்தும் இனிது இணைய இதழையும் விட்டால் எனக்கு எவருண்டு?

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.