செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்

பல்லவ மன்னர்கள் இலக்கியப் பெருமை பெற்றவர்கள். நந்திவர்மன் தொண்டை மண்டலத்தை ஆண்டவன் ஆனதினால், நந்தியம் பெருமாள் தொண்டைமான் என்ற பெயரும் பெறுகிறான்.

இவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒரு கலம்பகம் எழுதியிருக்கிறான், ஒரு புலவன்.

கலம்பகம் பாடிய புலவன் நந்திவர்மன் தம்பியே. இருவருக்கும் இருந்த பகை காரணமாகக் கலம்பகத்தில் அறம் வைத்துப் பாடினான்.

கலம்பகப்பாடல்களைக் கேட்டால் உயிர் துறக்க நேரிடும் என்று கவிஞனே எச்சரித்தபோதும், தமிழ்க் கவிதையில் உள்ள ஆர்வத்தால், கலம்பகப்பாடல்களைப் பாடக்கேட்டு, கடைசியில் சிதையேறி உயிர்நீத்தான் அவன் என்று கர்ணபரம்பரை கூறும். பிற்காலப் பாடல் சிலவும் வலியுறுத்தும் இதை.

கலம்பகப் பாடல்கள் படித்தால், அப்படியே உயிர் கொடுத்துக் கேட்கக் கூடிய பாடல்களே என்று தோன்றும் (கதையில் உண்மை ஒரு சிறிதும் இல்லாவிட்டாலும் கூட). கலம்பகத்தின் மூலம் அவனது வெற்றிப் பிரதாபங்களையெல்லாம் அறிகிறோம், நாம்.

பாண்டியர், சோழர், சாளுக்கியர்களை, நென்மலி, மண்ணைக்குடி, கருவூர் என்ற இடங்களில் நடந்த போர்களில் இவனே வெற்றி பெற்றிருந்தும், கலம்பகத்தில் இவன் தெள்ளாற்றில் பகைவர்களை வெற்றி கண்டதையே பிரதானமாகக் கூறியிருக்கிறது.

‘தெள்ளாற்றை நந்தி’ ‘தெள்ளாற்றில் வென்றான்’ என்ற விருதுப் பெயர் நிலைத்து நின்றிருக்கிறது.

இவனது கல்வியறிவு, வள்ளன்மை, போரில் வெல்லுந் திறத்தையெல்லாம் கலம்பகம் பாடிய கவிஞன் மட்டுமல்ல; பாரதம் பாடிய பெருந்தேவனோரும் பாராட்டியிருக்கிறார், ஓர் அழகான பாட்டில்.

 

வண்மையால், கல்வியால்

மாபலத்தால், ஆள்வினையால்

உண்மையால் பாராள

உரிமையால் – திண்மையால்

தேர்வேந்தர் வான் ஏறத்

தெள்ளாற்றில் வென்றானோடு

யார்வேந்தர் ஏற்பார் எதிர்?

தெள்ளாற்றில் வென்றான் என்ற பெயர் நந்திவர்மனுக்கு நிலைத்தது போல, சேயாற்றில் வென்றான் என்ற பெயரும் வட ஆர்க்காடு மாவட்டத்தில் ஒரு சிறு ஊருக்கு நிலைத்திருக்கிறது.

சேயாற்றில் வென்றவன்

இந்தச் சேயாற்றில் வென்றவன் வேறு யாருமில்லை. சமயக் குரவர்களில் முதல்வரான ஆளுடைய பிள்ளையாம் ஞான சம்பந்தரே.

அந்த வரலாறு என்ன என்று தெரிந்து கொள்ளச், செய்யாறு என்று இன்று வழங்கும் திருவோத்தூர் என்னும் தலத்துக்குப் போகிறோம்.

இள வயதினராக இருந்த ஞானசம்பந்தர், நாட்டில் பரவி இருந்த புறச் சமயத்தினராம் சமணரோடு வாதிட்டு வெற்றி காண வேண்டியவராகவும் இருந்திருக்கின்றார்.

மதுரையில் சமணர்களோடு கனல் வாதம், புனல் வாதம் எல்லாம் புரிந்து, அவர்களைவென்று, அங்கிருந்து ஆண்ட கூன்பாண்டியனின் கூனை (உடலில் உள்ள கூனையல்ல, உள்ளத்தில் உள்ள கூனையே) நீக்கினார்.

பின்னர் கூன்பாண்டியனைச் சுந்தர பாண்டியனாக்கி, அவனது மனைவி மங்கையர்க்கரசி, அமைச்சர் குலச்சிறை முதலியவர்களால் வணங்கித் துதிக்கப் பெற்றவர் அவர் என்பது வரலாறு.

இந்தச் சமணர்கள் அவரை இத்துடன் விட்டு விடவில்லை. பாண்டியநாடு, சோழநாடு எல்லாவற்றையும் சுற்றிவிட்டுத், தொண்டை நாட்டிலே உள்ள திருவோத்தூர் என்னும் தலத்துக்கு வந்தாலும், அங்கேயும் சமணர்கள் ஆதிக்கம் மிகுந்திருப்பதையே காண்கின்றார்.

தென் திசையிலிருந்து வந்த ஞானசம்பந்தர், சேயாற்றின் தென்கரையில் இருந்தே, திருவோத்தூர் வேதபுரி நாயகன் கோபுரத்தையும் மதிலையும் தரிசித்து, அந்தக் கரையிலுள்ள திருமடத்தில் தங்குகிறார்.

மதுரையில் ஞானசம்பந்தர் நிகழ்த்தியவைகளைக் கேட்டிருந்த சேயாற்றுச் சமணர்கள், ஒரு வேள்வி செய்து, அதிலிருந்து எழுந்த கொடிய பாம்பொன்றை அவர் மீது ஏவுகின்றார்கள்.

அவரோ பாம்பைச் சமணர்களது ‘வேந்தன் வாழ் இஞ்சி சூழ் திருமனைக்கே ஏகென்று உத்தரவு இடுகிறார். அதனால் துயருற்ற அரசன் வந்து, அடிவணங்க, ஞானசம்பந்தர்,

 

தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை

ஆட்டீரே! அடியார்வினை

ஓட்டிடீரே! உம்மை ஏத்தும் ஓத்தூர்

நாட்டீரே! அருள் நல்குமே!

என்று இறைவனை வேண்டுகிறார்.

இறைவனும் மகுடி ஏந்திப் பாம்பாட்டியாக வந்து, அதைப் பிடித்துக் கொண்டே கோயிலுக்குள் சென்று மறைகிறார்.

இதனால் சமணர் பகை வளர, அரசன் விரும்பியபடி புனல் வாதத்திற்கே ஒத்துக் கொள்கிறார். சமணர்கள் எழுதியிட்ட ஓலையைச் சேயாற்று வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விடுகிறது.

ஆனால் ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் ஒரு பாட்டை ஏட்டில் எழுதி, ஆற்றில் இட, அது புது நீரைக் கிழித்துக் கொண்டு முன்னேறி ஒரு பழம்பதியை அடைகிறது.

இவ்வாறு ஏடு எதிர் சென்று நின்று தங்கின இடமே அன்று முதல் சேயாற்றில் வென்றான் என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

ஆண்பனை பெண்பனையாக மாறியது

சேயாற்றில் வென்றவன் வேதபுரி நாயகனும், அவன் புகழ் பாடும் நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தனுமே என்றாலும், பெயர் நிலைக்கிறது ஒரு சிறு ஊருக்கு.

இப்படியெல்லாம் தோற்றாலும் சமணர்கள், மாத்திரம் தங்கள் வாதத்தை விடுபவர்களாக இல்லை.

‘இவ்வூர்க் கோயிலிலும் ஆற்றங்கரையிலும் காயாது நிற்கும் ஆண் பனைகள் நிற்கின்றன. அவைகளைக் காய்க்கும் பெண் பனைகளாக ஆக்க முடியுமா?’ என்று சம்பந்தரிடமே மறுபடியும் சவால் விடுகிறார்கள்.

அந்தச் சவாலை ஏற்றுக் ‘குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்’ என்ற பாடலைப் பாட, எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம், கோயிலுக்குள் நின்ற ஆண்பனை குலைதள்ளிப் பெண்பனையாக மாறுகிறது.

இன்றைக்கும் அந்தப் பனைகளின் வாரிசாகக், கோயில் பிராகாரத்திலேயே குலை ஈனும் ஐந்து பனைகள் நின்று கொண்டிருக்கின்றன.

இந்தவிதமாகச் சமணர்களை எல்லாம் வெற்றி கண்டஇடமாகவும், ஆண்பனை பெண்பனையான அற்புதம் நிகழ்த்திய தலமாகவும் இருப்பதே, சம்பந்தர் தேவாரம் பெற்ற திருவோத்தூர் என்று அன்று வழங்கின இன்றையச் செய்யாறு.

பாலாற்றுக்கு ஒரு சேய் ஆறாக விளங்குவதே அழுத்தம் திருத்தமாகச் செய்யாறு என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்

இங்கு கோயில் கொண்டிருப்பவர்தான் வேதபுரி நாயகன் (செய்யாறு வேதபுரீஸ்வரர்). அவர் துணைவியின் திருநாமமோ இளமுலை நாயகி.

வேதங்களை எல்லாம் உலகுக்கு வழங்கிய பெருமகனான இறைவனை, வேதபுரியான் என்று இத்தலத்தில் மட்டும் அழைப்பானேன்?

வேதங்களை ஓதியுணர்ந்து பிறருக்கு உரைக்கும் முனிவர்களே, வேதம் ஓதுதலை மறந்து விடுகிறார்கள்.

அவர்கள் எல்லோருமாக வேண்ட, இறைவனே வேதியர் உருவில் வந்து தேவர் முனிவர்களுக்கெல்லாம் வேதத்தை விரித்து ஓதுகிறார்.

வேதம் ஓதுவித்த ஊர் ஓத்தூர் எனப் பெயர் பெறுகிறது. இதை இறைவனே சொல்லுவதாகக் காஞ்சிப் புராணம் கூறும்.

தத்து நீர் அலைபுரட்டும் சேயாற்றின்

தடங் கரைக்கண், இமையோர் கட்கும்

மெய்த்தவர்க்கும், ஓதுவித்தோம் ஆதலினால்

மேவு திருவோத்தூர் என்றும்

அத்தலத்தில் எமைத் தொழுவோர்

அருமறை நூல் முழுதுணர்ந்து வீடுசேர்வர்

என்பது பாட்டு.

இனி அந்த மறைகளே விரும்பியபடி, வேத ஒலிகளை எல்லாம் சிவபெருமான் தமது டமருகத்தில் அடக்கி, அந்த டமருகத்தை ஒலித்துக் கொண்டு, வீர நடனம் ஆடிய தலமும் இதுவே என்று தல வரலாறு கூறும்.

கோயிலில் உள்ள நடராஜரது திரு உருவில், வீர நடனத்தின் புதிய சாயை ஒன்றும் இல்லை தான். என்றாலும் அங்கு வீர நடனம் ஆடும் பெரிய பிள்ளை உண்டு.

கோயில் கோபுரவாயிலைக் கடந்து, அதற்கடுத்த வாயிலையும் கடந்து, வெளி மண்டபத்தையும் கடந்து, உட்கோயிருலுக்குச் செல்லும் வழியில் ஒரு பிள்ளையாரை வெளியே நிறுத்தி இருக்கிறார்கள்.

அவருக்கு மார்புவரை ஒரு துணியையும் சுற்றி வைத்திருக்கிறார்கள். கலை உள்ளம் படைத்த அன்பர்கள் அர்ச்சகரை அழைத்துப் பிள்ளையாருக்கு அணிவித்திருக்கும் அந்த வஸ்திரத்தை அகற்றச் செய்தால், அவர் ஒரு நர்த்தன விநாயகர்.

அந்தத் திருக்கோலம் மிகவும் அழகான வடிவம் . இந்த நர்த்தன கணபதியையே ‘வென்றாடு திருத்தாதை வியந்துகைத் துடி கொட்ட நின்றாடும் மழகளிறு’ என்று அன்றே அழைத்திருக்கிறார்கள் பக்தர்கள்.

வீர நடனம் ஆடிய தந்தை துடிகொட்ட, வீர நடனமே ஆடுகிறார் விநாயகர். கலை உலகில் ஓர் அரிய சிருஷ்டி அது. நான்கடி உயரத்தில் திருவாச்சியும் சேர்த்து ஒரே கல்லில் செய்யப்பட்டுள்ள திருவுருவம் அது.

இளமுலை நாயகி

இனிக் கோயிலுள் சென்று வேதபுரி நாதனையும் (செய்யாறு வேதபுரீஸ்வரர்) இளமுலை நாயகியையுமே தொழுது திரும்பலாம்.

வேதபுரியானைப் பற்றித்தான் வேண்டிய மட்டும் தெரிந்து கொண்டோமே. அம்மையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

தக்கன் மகளாகிய தாட்சாயணியை இறைவன் மணந்து கொள்கிறான். மாமனாராகிய தக்கனுக்கு, மருமகனாகிய இறைவனை விடத் தான் உயர்ந்தவன் என்ற செருக்கு. அதனால் இருவருக்கும் பிணக்கு.

தக்கன் இயற்றும் வேள்வியில், மருமகனுக்கு அக்ரஸ்தானம் இல்லை என்பது மட்டும் அல்ல, அழைப்பே இல்லை. இறைவனுக்கோ ஒரே கோபம்.

மாமனுக்கும் மருமகனுக்கும் இடையே வளர்ந்துள்ள கசப்பைத் தீர்த்து வைக்க மகளே புறப்படுகிறாள். தக்கன் வேள்வி நடத்தும் இடத்துக்கு.

அங்கு அவளுமே அவமதிக்கப்படுகிறாள் தந்தையால். அதனால் தன்னுடலையே தீக்கிரையாக்குகிறாள், தாட்சாயணி. பின்னர் இறைவன் அருளால் இமவான் மகளாகப் பிறந்து வளர்ந்து பேதைப் பருவம் எய்துகிறாள். பரமனை அடையக் கருதித் தவச்சாலை புகுந்து தவக்கோலம் கொள்கிறாள்.

தவத்திற்கு இரங்கிய இறைவன், ‘இளமுலையே! நீ எனது வார்த்தையைக் கேட்காமல் தக்கன் வேள்விக்குச் சென்றாய். கொண்ட புருஷனின் சொல்லைத் தட்டிய பாவம் நீங்கினால் தான் உன்னை மணப்பேன்!’ என்கிறான்.

அம்மையும், ‘நானோ பேதைச் சிறுமி, பாவம் தீரும் வழியை அருள வேண்டும்!’ என்று வேண்டுகிறாள்.

அவனும், ‘திருவோத்தூர் என்னும் தலத்துக்குச் சென்று என்னை நோக்கித் தவம் செய்!’ என்கிறான்.

அப்படியே செய்து இளமுலைநாயகி இறைவனை மணந்து கொள்கிறான்.

அம்மையின் திருஉரு அழகான ஒன்று. பேதைப் பருவத்திலே தவம் புரிந்து, பெதும்பைப் பருவத்திலே இறைவனை மணந்து கொண்டவள் அவள்.

மங்கைப் பருவத்தில் மணாளனை மணந்து கொண்ட நங்கையாக மற்றைய கோயில்களில் காட்சி தருபவளே, இந்தத் தலத்தில் இளவயதில் இறைவனை மணந்த பேதையாக நிற்கிறாள்.

சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றைத் தவிர, இப்பதியைப் பாடிய பெருமக்கள் பலர். ‘நிலவு புகழ் திருவோத்தூர்‘ என்று பட்டினத்தடிகள் பாடினால், ‘சீலர் மென்சோலை சூழ்திருவோத்தூர்’ என்று சேக்கிழார் பாடுகிறார்.  தலபுராணம் ஒன்றும் பாடப்பட்டிருக்கிறது விரிவாக.

காஞ்சிக்குத் தெற்கே பதினெட்டு மைல் தொலைவிலேயே இருப்பதால், அன்பர்கள் சென்று, இளமுலையாம் ஆத்தாள்தனைப் பணிந்து, அன்பால் துதித்து, ‘அருள் படிந்து கூத்தாடிய தாள் உளத்து இருத்தி’ மீளலாம்.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

 

 

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள்

தமிழகத்தின் புகழ் பெற்ற கோவில்களைப் பற்றி ஆராய்ந்து சிறப்பான கட்டுரைகள் எழுதியவர். தமிழில் பயண இலக்கியம் படைத்தவர்களில் இவர் முக்கியமானவர்.

இவர் திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா – முத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது தம்பி எழுத்தாளர் தொ. மு. சிதம்பர ரகுநாதன். பாஸ்கர தொண்டைமான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.

இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் வனத்துறையில் பணிக்கு சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அவருக்கு தமிழக அரசு இந்திய ஆட்சிப் பணி அங்கீகாரம் அளித்து வேலூர் மாவட்ட ஆட்சியராக்கியது. 1959 ஆம் ஆண்டு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தமிழகமெங்கும் பயணம் செய்து கோயில்கள், வழிபாட்டுத் தலங்களை ஆராய்ந்து கல்கி இதழில் “வேங்கடம் முதல் குமரி வரை” என்ற தலைப்பில் அவற்றைப் பற்றி கட்டுரைகள் எழுதினார்.

2009-10 இல் தமிழக அரசு தொண்டைமானது நூல்களை நாட்டுடைமையாக்கியது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.